இது கமுக்கமானது (இரகசியமானது)!

இரண்டாவது பொருளாதார ஆலோசனை மன்ற அறிக்கை
இந்தியர்களைப் பற்றி என்ன சொல்கிறது?

தொகுப்பு: கா.ஆறுமுகம்.

 

நம்மிடையே இரண்டாவது பொருளாதார ஆலோசனை மன்ற அறிக்கையைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாமல் இருக்கலாம். அவற்றுள் இந்தியர்களைப் பற்றிய குறிப்புகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் திரு. கா.ஆறுமுகம் இந்தியர் தொடர்பான குறிப்புகளை நமக்காகத் தொகுத்து வழங்கியுள்ளார். பதிவுக்காக இக்குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. - மொழி

 
அறிக்கையின் பெயர்:
Laporan Majlis Perundangan Ekonomi Negara Kedua.
31 சனவரி 2001-ல் வெளியிடப்பட்டது.

பாத்தாங் பெர்சுந்தை சானகிராமன் அழைத்து, “மாப்பென் இரண்டாவது அறிக்கையைப் பற்றி ஏதேனும் உள்ளதா", என்றார். அதை இன்றும் பார்க்கவேயில்லை என்றேன். அதில் ஆவல் உண்டாகவே! அதைத் தேடினேன். கிடைத்தது. 796 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை “கமுக்கம்" என்று முதல் அட்டைமுதல் கடைசிப்பக்கம் வரை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

1. தமிழ்ப்பள்ளிகள்

1.1 பக்கம் 429

  • ஆசிரியர் பற்றாக்குறை மோசமாக உள்ளது.

  • ஆசிரியராக வேண்டும் என்ற ஆர்வமும் குறைவாக உள்ளது.

  • ஆசிரியர் தொழிலை மக்கள் நாட, அதிக ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

  • தற்காலிக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

    1.2 பக்கம் 435

  • தோட்டப்புறங்களிலுள்ள சீனப்பள்ளிகள் அரசாங்க உதவி பெறும் (Bantuan Modal) பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் மாணவர் பற்றாக் குறையும் இருந்தால் பள்ளிகள் ஒருங்கிணைப்புச் செய்ய முயல வேண்டும்.

    1.3 பக்கம் 573

  • தோட்டப்புறங்களில் உள்ள இந்தியர்கள் பாலர்கல்வி நிலையிலிருந்து உயர்கல்விவரை செல்ல முழு உதவிகள் அரசாங்கம் செய்ய வேண்டும்.

  • எனவே, கல்வி அமைச்சு ஒரு சிறப்புப்பிரிவை உண்டாக்கி இதற்கான திட்டங்களைத் தீட்டல் வேண்டும்.

1.4 பக்கம் 622

  • கல்வியில் மேலும் உயர தோட்டப்புறப் பள்ளிகள் உட்பட எல்லா பள்ளிகளிலும் புற வசதிகள் மனிதவள நிலைகள் போன்றவை நகர்ப்புற பள்ளிகளுக்கு ஈடாக உருவாக்கப்படல் வேண்டும்.

1.5 பக்கம் 665 - 666

  • ஆரம்பத் தமிழ்ப்பள்ளி பற்றாக்குறையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • புதிய ஆரம்பத் தொடக்கப் பள்ளிகள் உருவாக்கத்திற்கான வழிமுறைகள் அமைக்கப்படல் வேண்டும்.

  • தேசிய மாதிரி ஆரம்பப்பள்ளிகள் உள்ள மாநில நிலங்கள், மத்திய அரசாங்க நிலங்களாக மாற்றப்படல் வேண்டும்.

  • தேசிய மாதிரி ஆரம்பப்பள்ளிகள் இட மாற்றம் காணும்போது பயனுள்ள வகையில், தனிப்பட்ட நில ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.

  • தேசிய மாதிரி ஆரம்பப்பள்ளிகளில் வகுப்பறைப் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் நிதி உதவியும் மற்ற அடிப்படை வசதிகளையும் வழங்க வேண்டும்.

1.6 பக்கம் 624

  • தோட்டப்புற பள்ளிகளில் கணினிக் கல்வி மிகக்குறைவாக இருப்பதால், அதை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

2. தோட்டப்புற மக்கள்

2.1 பக்கம் 574

  • தோட்டப்புற மக்கள் சமூக மாற்றங்களுக்குப் பலியாகி வருகின்றனர். எனவே, தோட்ட முதலாளிகள் அவர்களுக்கு அடிப்படைத் தொழிற்கல்வி வழங்கிய பின்னர்தான் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்.

  • மேற்கண்ட திட்டத்தை மேற்பார்வையிடவும், தரமான தொழிற்கல்வியைத் தோட்ட முதலாளிகள் வழங்குவதையும், வேலை நிறுத்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மனிதவள அமைச்சு உதவ முன்வர வேண்டும்.

2.2 பக்கம் 585

  • பூமிபுத்ரா அல்லாதவர்கள், தோட்டப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் முன்னோடிகளாக வாழ்வோர் இந்தியர்களே, அவர்கள் பின்தங்கிய ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள்.

2.3 பக்கம் 586

  • கிராம முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புச் செயல் குழு (JKKK) வழிமுறைகள் தோட்டப்புறங்களுக்கும் விரிவு படுத்தப்படல் வேண்டும்.

2.4 பக்கம் 582

  • தோட்டப்புற மக்களுக்கான வீடுகள், குறைந்த பட்ச தரத்தை ஒட்டியிருக்க வேண்டும்; அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த மனிதவள அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். (தொழிலாளர்கள் தங்கும் வீடுகள் சார்ந்தவை).

3. நகர்ப்புற முன்னோடிகள்

3.1 பக்கம் 585

  • நகர்ப்புற முன்னோடிகளாக வாழும் இந்தியர்கள் பின்தங்கிய ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள்.

3.2 பக்கம் 587

  • ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழும் இந்தியர்களுக்கு, வங்கியிலும் அரசாங்க நிதி நிறுவனங்களிலும் நிதி கிடைக்க தகுதியற்ற நிலை உள்ளதால், அரசாங்கம் சிறப்பு நிதி ஒதுக்கீட்டினை ஆண்டுக்காண்டு செய்தல் வேண்டும்.

4. இந்தியர்களுக்கான தொழிற்கல்வி
 

4.1 பக்கம் 439

  • சமூகக் கல்லூரித் திட்டம் (Konsep Kolej Komuniti), தோட்டப்புறங்களிலும் உண்டாக்கப்பட வேண்டும்.

4.2 பக்கம் 687

  • கடந்த 2000-ஆம் ஆண்டில், தொழிற்கல்வியில் பங்கு பெற்ற 22,899 பேர்களில் இந்தியர்கள் 25 பேர் மட்டுந்தான். எனவே, அதிகமான இந்திய இளைஞர்கள் தொழிற்கல்வி பயில அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

5. வாணிகம்

5.1 பக்கம் 587

  • ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழும் இந்தியர்கள் பயனடைய சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் உண்டாக்க வேண்டும்.

6. பொருளாதாரம்


6.1 பக்கம் 627

  • பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தையில் இந்தியர்களுக்கு 1.5 விழுக்காடு உள்ளது. இது 2010இல் 3 விழுக்காடாக உயர்த்தப்படல் வேண்டும்.

முடிவுரை.

நமது நாட்டின் சமூக - பொருளாதார - அரசியல் நிலைகள் வெகுவேகமாக மாற்றம் அடைந்து வருகின்றன. குறிப்பாக மலாய் இனத்தவரின் வளர்ச்சி வெகுவாக அதிகரித்து, வேரூன்றியுள்ளது. சீனர்களைப் பொறுத்தவரை அவர்களது வாணிகத்துறை ஈடுபாடும், பொருளாதார நிலையும் தற்போதைய நிலைமைக்கு ஈடுகொடுத்து வருவதால் அவர்கள் ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.


இந்தியர்களிடையே மிகவும் பின் தங்கிய நிலையில் சுமார் 40 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். இவர்களது நிலைக்கு அடுத்த இன்னொரு 20 விழுக்காட்டினர் தாழ்ந்த நிலையில் உள்ளனர். இவர்களிடையே, மக்கட் தொகை என்ற விழுக்காட்டு அடிப்படையில் நமது தேவைகளை நாம் தொடர்ந்து ஈடுகட்டிக் கொள்ள முடியும் என்ற எண்ணம், வறுமையில் உள்ள இந்தியர்களைவிட வசதி கொண்ட இந்தியர்களுக்கே நன்மைகளைக் கொடுக்கும்.


இந்தச் சூழ்நிலையில், இன அரசியல் பிரதிநிதித்துவம் நமது சிக்கல்களுக்குத் தீர்வு காணும் என்பதும் கானல் நீராகத்தான் காட்சி தரும்.


இதுபோன்ற சூழல் உள்ள உலக நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு உகந்த முறைகள் இவைதாம்.

அவற்றைப் பின்வருமாறு காணவும்:
1. இந்நாட்டு குடிமக்கள் என்ற வகையில் நமது உரிமைகள் அமைய வேண்டும்.
2. நாட்டின் வளர்ச்சியில் நாம் எங்கு உள்ளோம் என்ற விழிப்புணர்ச்சியைப் பெறுதல் வேண்டும்.

3. நமது வளர்ச்சி நாட்டு மேம்பாட்டுக்கு ஈடாக உயர போராட வேண்டும்.

அது சரி, எப்படிப் போராடுவது?, என நீங்கள் வினாதொடுப்பது நன்றாக உணரமுடிகிறது. முதலில் மேற்கண்ட முதலாவது, இரண்டாவது முறைகளை உணர்ந்தால், மூன்றாவது தானே வரும். கல்லை உடைக்காமல் உறுதியான சிலை வடிக்கும் முறை கிடைக்கும் வரையில், மேகங்கள் மோதாமல் மழை பொழியும் நிலை தெரியும் வரையில், உணர்வினைப் பெற்றுப் போராடாமல் உரிமைகள் கிடைக்கப் பெறா.

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com