நமது கோரிக்கை அரசுக்கு எட்டச் செய்ய வேண்டும்!

“முத்தமிழ்" க.உ.இளங்கோவன் பட்டர்வொர்த்

 

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் அழகு வார்த்தைகளை நம்பி திரைகடல் கடந்து திரவியம் காணப் பெரிய பெரிய கனவுகளோடு நம் முன்னோர்கள் பாய்மரக்கப்பலின் மூலமாகத் தமிழ்நாட்டிலிருந்து இந்த மலாயா மண்ணுக்குப் படையெடுத்து வந்தனர்.


 

ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டு விடியற்காலையில் தலையில் நெற்றி விளக்கை கட்டிக்கொண்டு நொய்வப் (ரப்பர்) பால்மரத்தைச் சீவியெடுத்து இந்த நாடு பொருளாதார வளர்ச்சிக்கு “இரண்டாவது" இனமாக (முதல் சீனர் - ஈயவயல் (லெம்பம்) உழைத்தனர்.


ஜப்பானியர்கள் ஆட்சிக்காலத்தில் “மரண ரயில் தண்டவாளத்" திட்டத்திற்கு வலுக்கட்டாயமாக வேலைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களில் நம் முன்னோர்களும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களில் உயிரோடு திரும்பியவர்கள் யார் யார்? என்பது இன்று வரை நமக்குக் கிடைக்காத பட்டியல்!


9ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை (9th Century 13th Century) தமிழர்களும் இந்துக்களும் வட மாநிலமான கடாரத்தையும் அதையொட்டிய கிந்தா பள்ளதாக்கிலும் வாழ்ந்தனர்; ஆட்சிப் புரிந்தனர் என்பதை “பூஜாங்" பள்ளத்தாக்குக் கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன!


“காட்டை அழித்து நிலத்தைப் பண்படுத்தி நகர சூழ்நிலையை அமைக்க உழைத்தவர்கள், வீதிகள் அமைத்தவர்கள், தண்டவாளத்தை அமைக்க உழைத்தவர்கள்; எல்லாருமே நம் தமிழர்கள்தாம்; தென்னிந்தியர்கள்தாம்; நம் முன்னோர்கள்தாம்" என்று பலர் மேடையில் பேசி மார்தட்டிக் கொள்கின்றார்கள், நம் அரசியல் தலைவர்கள் உட்பட!


அவ்வப்போது நம் எழுத்தாளர்களின் வரலாற்றுப் படைப்பிலே பழைய நினைவலைகள் நினைவுறுத்தும் வகையில் பல நிழற்படங்களையும் கண்டு வியந்துள்ளோம்.


ஆனால்...
நமது வரலாற்றை நமது நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதே அடியேனின் கேள்வி. இந்த ஐயப்பாடு எனக்கு வந்ததே அண்மையில்தான்! நான் தேசிய “தொல்பொருள் காட்சியகத்தில்" (Muzium) கண்ட காட்சியும் கோலமும்தாம்!!!


15ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மாலுமி தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தனது பாய்மரக்கப்பலில் பயணம் செய்துள்ளார். ‘செங் ஹோ' (Admiral Cheng Ho) என்ற அந்த மாபெரும் கடற்படை தலைவன் மலாயா நாட்டுக்கும் வருகை புரிந்தது குறிப்பாக மலாக்கா ஆளுநர் ஆட்சியில் (சுல்தான் ராஜ்ஜியத்தின்) தலைமை விருந்தாளியாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இவரின் அரிய செயலை பறைசாற்ற மலேசிய சீனப்பாரம்பரிய பண்பாட்டுக் கழகம் (Chinese Heritage Society) சீன அரசியல் கட்சியான மலேசிய சீன சங்கத்தின் ஆதரவோடு (MCA) தற்சமயம் தேசிய தொல்பொருள் சாலையில் ஒரு சிறப்பான கண்காட்சியை வழிநடத்தி வருகின்றனர்.


அண்மையில் தேசிய தொல்பொருள் காட்சிய கத்திற்குச் சென்று இந்தக் கண்காட்சியைக் கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி மற்றப் பகுதிகளையும் காணத் துடிப்போடு நமது தேசியதொல்பொருள் காட்சியகத்திற்குப் பயணம் செய்தேன்.


அங்கே...
நான்கு பிரிவுகள் உள்ளன:-

பகுதி 1:
ஒன்று, நமது நாட்டின் பழங்குடியினரின் பகுதியில் ஓராங் அஸ்லி (Orang Asli) என்று அழைக்கப்படும் பழங்குடிமக்களின் வாழ்க்கை முறைகள், திருமணம், சடங்கு மற்ற சமய நம்பிக்கைகள், கைவினைப் பொருள்கள் எல்லாம் காட்சிகளாக (பொம்மைகளாக) ஓவியமாக இன்னும் பல நிழற்படங்கள் மூலம் காட்சி பொருளாய் அமைக்கப்பட்டுள்ளன.

பகுதி 2:
மலாய்க்காரர்கள்: மலாய்க்காரர்களின் திருமண “பெர்சான்டிங்" முறை, கலைப்பொருள்கள், “சுன்னத்" சடங்குமுறை விதவிதமான ஆடை ஆபரணங்களில் பொருட்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளன.

பகுதி 3:
சீனர்கள் ‘குட்டி சீனா’ என்றும் அல்லது “சைனா டௌன்" (Cina Town) என்றும் அழைக்கப்படும் கடைவீதிகள், சீனர்கள் ஈயவயலில் (லம்பம்) பணி புரிந்தது, அவர்களின் உடைகள் போன்றவை சிச்சிறு வரலாற்றுக் குறிப்புகளையும் உள்ளடக்கியிருந்தன.

பகுதி 4:
இந்தியர்கள்! என்னைத் திகைக்க வைத்த பகுதியே இதுதான். இந்தப் பகுதியில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகக் குறிப்பிடுகின்றேன்.


4.1
வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.


4.2
இரண்டு சிறுவர்கள் (பொம்மை) கோலம் போடுவதாக ஓர் அமைப்பு.


4.3
அவர்களுக்குப்பின் “பொங்கல் பானை"


4.4
அடுத்து ஓர் அலமாரியில் சில இசைக்கருவிகள் - அதில் ஒரு சிறிய பொம்மை வீணை


4.5
ஒரு குட்டி பத்துமலை காட்சி. பத்துமலைக்குச் செல்லும் பக்தர்கள் சிலர் காவடிகள், பால்குடங்கள் ஏந்தி செல்கின்றனர் (பொம்மைகள்) வாயில் அலகு குத்தியபடி காவடி எடுப்போரின் பெரிய புகைப்படம். அப்படத்திற்குக் கீழ் “இதை யாரும் பின்பற்ற வேண்டாம்" என்று ஆங்கிலதிலும் தேசிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.


4.6
வரலாற்றுக் குறிப்புப் பலகையில் நமது நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. நீண்ட காலமாகவே இந்த மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற குறிப்பு மட்டுமே இருந்தது!

ஆகவே நமது நாட்டை பொறுத்தவரை தமிழர்களின் அடையாளம் பத்துமலை மட்டுமே! அதிலும் நாம் காவடி எடுப்பதற்குத்தான் லாய்க்கு என்று குறிப்பிடுவது போலும் அதிலும் இந்த காவடிகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கை வாசகத்தோடுந்தான் நமது இந்தியர்களின், தமிழர்களின், இந்துக்களின் வரலாறு நமது தேசிய தொல்பொருள் சாலையில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர நாம் மார்தட்டிப் பேசும் எந்தத் தமிழனின் வரலாறும், தமிழர்களின் உழைப்பும், பண்பாடும், தொடர்பும், இடம் பெறவில்லை; இடம்பெற வாய்ப்பும் இல்லை. அந்தச் சின்ன அறையில் இடமும் இல்லை என்பதனை இங்கு மிக வருத்தத்தோடு குறிப்பிட விழைகிறேன்.


இராஜேந்திர சோழனின் சாம்ராஜ்ஜியமும், ஸ்ரீவிஜயநகர் அரசாட்சியும், லாங்காசுக்கா பரம்பரையும் வாழ்ந்து ஆண்டுவந்த இம்மண்ணிலும் சஞ்சிக் கூலிகளாக வந்து போராட்டத்தோடு வாழ்ந்து நம் முன்னோர்களின் பட்டியல் கிடையாதா! அல்லது கிடைத்ததும் அவை மறைக்கப்பட்டுள்ளதா? அல்லது வெளியிட மறுக்கப்பட்டுள்ளதா?


நமது வரலாறு இப்படி முற்றிலும் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில் அயல்நாட்டார் இந்தத் தொல்பொருள் சாலைக்கு வருகைபுரிவோர் நமது இனத்தை எவ்வாறெல்லாம் நினைக்கக்கூடும்?


எந்த நாட்டுக்குச் சென்றாலுமே அந்தந்த நாட்டின் தொல்பொருள் சாலைதான் அந்நாட்டின் உண்மையான, நிலையான பண்பாட்டுக் கலை, இனம், மொழி, சமய கூறுகளைப் பறைசாற்றும்! ஆனால் நமது நாட்டில் நாம் வெறும் மேடையில்தான் வீரமுழக்கம் செய்கின்றோம்.


பராசக்தி திரையில் கலைஞரின் வசனம் நினைவுக்கு வருகிறது.


“நமது நிலைமையை அரோகரா என்று ஆண்டவனிடம் சத்தம் போட்டால் போதாது. நமது கோரிக்கை அரசாங்கத்திற்கு எட்டவேண்டும்"


நமது நாட்டின் அனைத்து முக்கிய தேசிய இயக்கங்கள் அனைத்தும் தலைநகரில்தான் செயல்பட்டு வருகின்றன. ஆவன செய்வார்களா?


பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இராமல் ஒவ்வொரு இயக்கமும் இந்தச் சிக்கல் நமக்குரியது இதற்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்ற தன்னுணர்வோடு செயல்பட வேண்டுகிறேன்.

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com