ரப்பர்
மற்றும் ஈயம் ஆகியவற்றுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை
ஒப்புக் கொண்ட கிரீச் ஜோன்ஸ், மலாயா பிரிட்டீஷ் பேரரசிற்கு,
தென்கிழக்கு ஆசியாவிற்கு, மற்றும் தூரக்கிழக்கு முழுமைக்கும்
எந்தளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தியதோடு அவர் ஓர்
எச்சரிக்கையையும் விடுத்தார். இதுதான் அவரது எச்சரிக்கை:
“இங்கு மலாயாவில் சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான பிரிவினை இயக்கக்
கருவை நாம் கொண்டிருக்கிறோம்."
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கழுத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம்
நெரித்துக் கொண்டிருக்கும்போது பிரிட்டீஷ் ஏகாதிபத் தியம்
தப்பிப்பிழைப்பதற்கு மலாயா தொழிலாளர்கள் தங்களின் உயிரையும்
சுதந்தரத்தையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது தெளிவாகத்
தெரிகிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் சேவகர்களான மலாயா
காலனித்துவ அரசு, காலனித்துவ முதலாளிகள், பேரரசின் படிவுள்ள
ஊழியர்கள், கர்னல் ஜோன் எல்பிரட் பிரேசியர் மற்றும் அவரின்
குற்றேவல்காரர்கள் ஆகியோர் பிரிட்டீஷ் காலனித்துவ எதிர்ப்புச்
சக்திகளின் முக்கிய கருவான, மலாயாத் தொழிலாளர்களின் கோட்டையாக
விளங்கிய, அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தை (PMFTU)
துடைத்தொழிப்பதற்காகத் தங்களது சக்திகளை ஒன்று திரட்டினார்கள்.

சட்ட நடவடிக்கை
1947-1948 ஆம்
ஆண்டுகளில் மலாயாவில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகியோருக்
கிடையிலான பகிரங்க, இறுதிக் கட்டப் போராட்டத்தில், காலனித்துவ அரசு
தனது சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்தத் துவங்கியது. 1946-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதத்திலிருந்து தொழிற்சங்கங்களின் பதிவு
கட்டாயமாக்கப்பட்டது. 1940-ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டவிதிகளின் கீழ்
தொழிற்சங்க பதிவதிகாரி, தொழிற்சங்கங்கள் அரசாங்க கொள்கையைப்
பின்பற்றி அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின்
செல்வாக்கிலிருந்து விலகிச் செல்வதற்காகத் தனது அதிகாரங்களின் மூலம்
நிர்ப்பந்தத்தை உருவாக்கினார். பதிவு பெறாத
தொழிற்சங்கங்களிடமிருந்து, அதாவது PMFTU-விடமிருந்து,
தொழிற்சங்கங்கள் எவ்வித வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
தொழிற்சங்கச் சட்டவிதிகளின் கீழ் அரசியல் காரணங்களுக்காகத்
தொழிற்சங்க நிதி பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும்,
தொழிற்சங்கங்கள் தங்களின் வருமானத்திலிருந்து 20 விழுக்காட்டை அகில
மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்திற்கு அளிக்கப்படுவதற்கு அனுமதி
மறுக்கப்பட்டது. பதிவு பெற்றுள்ள சங்கங்களின் விருப் பத்திற்கேற்ப
புனரமைப்பு செய்வதற்கு முன்பு மாநில தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட
வேண்டும். அவற்றின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும். புனரமைப்புச்
செய்யப்பட்ட மாநில தொழிற்சங்க சம்மேளனங்கள் வெறும் ஆலோசனை கூறும்
மன்றங்களாக மட்டுமே செயல்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலைகளில்,
மாநில தொழிற்சங்க சம்மேளனங்கள் தங்களின் நிலை குறித்து மறுஆய்வு
செய்தன. சட்டத்திற்கு உட்பட்டு அகில மலாயா ரப்பர் தொழிலாளர்கள்
மன்றம் நிறுவப்பட்டது. இம்மன்றத்திற்குப் பதிவு மறுக்கப்பட்டது.
பிரேசியரால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற
தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படமாட்டா என்பது தெளிவாகத் தெரிந்தது.
மத்திய அமைப்பு என்ற முறையில், 1946 ஆம் ஆண்டிலிருந்து மலாயாவி
லுள்ள தொழிலாளர்களின் பிரதான அமைப்பு என்ற அதிகாரப்பூர்வமான
அங்கீகாரம் கோரி அகில மலாயா தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் (PMFTU)
தனது மனுவை காலனித்துவ அரசிடம் ஒப்படைத்தது. பதிவு கோரி இந்த மனு
1946-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. அகில
மலாயா தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம்தான் (PMFTU) மலாயா
தொழிலாளர்களின் ஒரே மத்திய அமைப்பு என்பதை ஜோன் பிரேசியர்,
1949-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார். ஆனால், 1948-ஆம் ஆண்டு அவ்வாறு
ஒப்புக் கொள்ளவில்லை. ஒரே மத்திய அமைப்பு என்ற அங்கீகாரத்தை PMFTU
கோரியதற்குக் காரணம் அதன் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை மிகக்
குறைவான நிலையில் வைத்திருப்பதற்காகத்தான். சிங்கப்பூர்
தொழிற்சங்கங்கள் சம்மேளனத்திற்கு (SFTU) அவ்வாறான அங்கீகாரம்
1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. அது தொழிற்சங்கச்
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியதிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டிருந்தால் தனக்கும் அவ்வாறான அங்கீகாரம் கிடைக்குமென்று
அ.ம.தொ.ச. (PMFTU) நம்பியது. மேலும், அவ்வாறான ஏற்பாடுகள் செய்ய
முடியும் என்று ஜோன் பிரேசியர் அ.ம.தொ.ச. (PMFTU)-வை நம்பச்
செய்தார். அவ்வாறான அங்கீகாரம் உறுதியாகக் கிடைக்கும் என்று, தான்
கொண்டிருந்த பெரும் நம்பிக்கையின் காரணமாக அகில மலாயா பொதுத்
தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் அ.ம.தொ.ச. (PMFTU) என்ற தனது பெயரை
அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனம் அ.ம.தொ.ச (PMFTU) என மாற்றிக்
கொண்டது. புனரமைப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும்
எடுத்து முடித்தவுடன் தொழிற்சங்க பதிவாளர் மேலும் பல நிபந்தனைகள்
விதித்தார்.
அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள் தன்னை ஒழித்துக் கட்டுவதுதான்
என்பதை அ.ம.தொ.ச. (PMFTU) படிப்படியாக உணர்ந்து கொண்டது. இந்தக்
காலகட்டத்தில், அகில மலாயா தொழிசங்கங்கள் சம்மேளனத்தையும் அதில்
அங்கம் பெற்றுள்ள தொழிற்சங்கங்களையும் தடைசெய்து அவற்றைக்
காட்டிற்குள் விரட்டியடிக்கப்படுவ தற்கான நோக்கத்தை அரசாங்கம்
கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் எதனையும் காணமுடியவில்லை. ஆனால்,
1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மலாயா மற்றும் சிங்கப்பூர்
தொழிற்சங்கங்கள் மீதான அறிக்கை யில் காணப்படும் பரிந்துரையில்,
அரசாங்கம் இச்சங்கங்களுக்கு எதிராக மூன்று விதமான நடவடிக்கைகளை
எடுக்க முடியும். அவற்றில் ஒன்று, இச்சங்கங்களைத் தடை செய்து
காட்டிற்குள் விரட்டியடிப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பதிவதிகாரி அகில மலாயா ரப்பர் தொழிலாளர் மன்றத்தை (Pan
Malayan Rubber Workers Council) பதிவு செய்ய மறுத்துவிட்டது,
அ.ம.தொ.ச. (PMFTU)வின் முடிவு நெருங்கி விட்டது என்பதன்
அறிகுறியாகும்.
அரசாங்கம் அ.ம.தொ.ச-வின் (PMFTU) ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டு
வரப்போகிறது என்பதில் முதலாளிகளுக்கு இப்போது முழு நம்பிக்கை
ஏற்பட்டிருந்தது. ஆகையால், அவர்கள் இரு நிலைகளின்பால் மிகத் தீவிரம்
காட்டினர். ஒன்று, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்தல்
மற்றொன்று வேலை மற்றும் ஒழுங்கு முறைகளை அமல்படுத்துவதில் கடுமையான
போக்கை கடைப்பிடித்தல். முதலாளிகளிடம் கோரிக்கை விடுக்கும்
தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டனர்.
அரசாங்கமும் இதனையே செய்து வந்தது. உண்மையில், சிங்கப்பூர்
காலனித்துவ அரசின் தொழிற்சங்க ஆலோசகர் கேரெட் (Garret), பிரேசியரைப்
போல் அல்லாமல், முதலாளிகள் தங்களின் இலட்சியத்தைச் சாதிப்பதற்கு
“கம்யூனிச ஆவியை” (Redbogey) சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
என்று 1947ஆம் ஆண்டிலேயே எச்சரித்திருந்தார்.
அரசாங்கத்தின்
கெடுபிடி
அரசாங்கத்தின்
இந்தக் கெடுபிடி போக்கினால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில்
இறங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 1948 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் ஆரம்பித்த வேலை நிறுத்த அலை, மே மாத இறுதிக்குள்
கடுமையான கட்டத்தை நெருங்கியது. மிகவும் பாதிக்கப்பட்டவை ரப்பர்
தோட்டங்களும் ஈயச் சுரங்கங்களும் ஆகும். சில துறைமுகங்களும்
பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த வேலை நிறுத்தங்கள் 1946-ஆம் ஆண்டு
நடந்த வேலைநிறுத்தங்களுக்கு ஈடானவை அல்ல. அரசாங்க மதிப்பீட்டின்படி,
6627 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஏற்பட்ட இழப்பு
மே மாதத்தில் 179,539 வேலை-நாள்களும், ஜூன் மாதத்தில் 117,154
வேலை-நாள்களும் ஆகும். 1946-ஆம் ஆண்டு காணப்பட்ட வேலைநிறுத்தத்
தீவிரம் இப்போது இல்லை.
தொழிலாளர்களின் பிடி தளர்வதை உணர்ந்த முதலாளிகள் தீவிரமாகச்
செயல்படத் தொடங்கினர். அவர்கள் ஹைகமிஷனரை, வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்த தொழிற்சங்க தலைவர்களை நாடு கடத்தும்படியும்,
தொழிற்சங்க தீவிரவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை
எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். அவர்களுடைய தோட்டங்கள்,
ஈயச்சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைப் போலீஸ் மற்றும்
இராணுவப் படையினரின் உதவியுடன் வெளியேற்றினார்கள். கிளாப்பாலி
மற்றும் லீமா பிளாஸ் தோட்டங்களின் நிர்வாகி 300 காவல் மற்றும்
இராணுவப் படையினரின் உதவியோடு 85 தொழிலாளர்களை வெளியேற்றினார்.
இன்னொரு தோட்டத்தில் தொழிலாளர்களிடம் மாவட்ட நீதிபதியால்
கையெழுத்திடப்பட்ட வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது. கலவரம்
ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் நோக்கத்துடன் 300 பிரிட்டீஷ் இராணுவப்
படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸ் மற்றும்
இராணுவப் படையினரின் ஆதரவோடு முதலாளிகள், வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைத் தீவிரமாக வேட்டையாடினார்கள். அதனால்
மோதல்கள் ஏற்பட்டன. 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 8
தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 24 தொழிலாளர்கள் காயப்படுத்தப்பட்டனர்,
73 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலை நிறுத்தம் துவங்கி பரவிக் கொண்டிருந்த நேரத்தில் காலனித்துவ
அரசு சட்டமன்றத்தில் தொழிற்சங்கச் சட்டத் திருத்தங்களை வழங்கியது.
ஒரே நாளில், (31.05.1948) திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு
சட்டமாகின. இச்சட்ட திருத்தங்களை முன்வைத்தவர் முதலாளிகளின்
பிரதிநிதியுமல்ல, அரசாங்கத்தின் பிரதிநிதியுமல்ல. அதனைச் செய்தவர்
தொழிற்சங்கவாதியும் நியமன உறுப்பினருமான வி.எம்.என். மேனன் (V.M.N.Menon)
ஆவார். இவர் தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக
இருந்தவர். பிரிட்டீஷ் பேரரசால் ஒபியி (Order of the British
Emprise) பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். காலனித்துவ அரசிற்காக
வி.எம்.என்.மேனன் சட்ட மன்றத்தில் சமர்ப்பித்த சட்ட திருத்தங்கள்:
1. தொழிற்சங்கத் தலைவர்கள், அவர்கள்
சம்பந்தப்பட்ட தொழில் களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை
செய்திருக்க வேண்டும்;
2. சட்ட விரோதச் செயல்களுக் காகத் தண்டிக்கப்பட்டவர்கள்
தொழிற்சங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது
3. தொழிற்சங்க சம்மேளனங்கள் (Federation of Trade Unions) தொழில்
(Industrial) அல்லது வேலை (Occupational) அடிப்படையில் அமைக்கக்
கூடாது.
இந்தச் சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அகில மலாயா தொழிற்சங்கங்கள்
சம்மேளனத்தை (PMFTU) அழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவையாகும்.

புதிதாகத்
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்
1946-ஆம் ஆண்டு அமலிலிருந்த சட்டத்தின்கீழ் 03.11.1946-இல் தன்னை
ஒரு சம்மேளனமாக (as Federation) பதிவு செய்து கொள்வதற்காக
வழங்கப்பட்ட மனு 12.06.1948-இல் நிராகரிக்கப்பட்டதாகக் காலனித்துவ
அரசு பி.எம்.எப்.டி.யு. (PMFTU)-விடம் தெரிவித்தது. அதாவது,
இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முன்பு அமலிலிருந்த சட்டத்தின்
கீழ் செய்யப்பட்ட மனு. அந்த மனுவை நிராகரிப்பதற்காகவே
நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட
மாதங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு ஜூன்
மாதம் 13 ஆம் தேதியில் “பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாளர்
அமைப்பு” என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட்டால் வர்ணிக்கப்பட்ட அகில
மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது.
உடனடியாக கைது செய்வதற்கும் தடுப்புக் காவலில் வைப்பதற்கும்
கொடுக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களை உபயோகப்படுத்தி தொழிற்சங்க
அலுவலகங்களின் மீது போலீசார் திடீர் தாக்குதல் நடத்தியதுடன்
கட்டுப்பாடற்ற முறையில் கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இத்திடீர் நடவடிக் கைகளினால் வேலை நிறுத்தங்கள் வெகுவாகப்
பாதிக்கப்பட்டன. ஜூன் மாத ஆரம்பத்தில் 28 ஆக இருந்த வேலை
நிறுத்தங்கள், ஜூன் மாதம் 28-ஆம் தேதியன்று வெறும் 8 ஆக குறைந்து
விட்டன. உண்மையிலேயே, 1948-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி
அவசரகாலம் பிரகடனம் செய்யப் பட்ட பிறகு வேலை நிறுத்தத்தைத்
தொடர்ந்து நடத்தியவர்களுக்கு அளவுகடந்த தைரியம் இருந்திருக்க
வேண்டும்.
மூன்று தோட்ட நிர்வாகிகள் மற்றும் “சியாங் கைசேக்", பிரிவைச்
சேர்ந்த கோமிந்தாங் தலைவர் ஒருவர் கொல்லப் பட்டதைச் சாக்காக வைத்து
அரசாங்கம் அவசரக் காலத் தைப் பிரகடனம் செய்தது. தொழிலாளர்களின்
போராட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் இயக்கத்திற்கு மரண அடி
கொடுத்ததாகக் காலனித்துவ அரசு அறிவித்தது.
பி.எம்.எப்.டி.யு வின் மனு நிராகரிப்பு அறிவிக்கப்பட்ட ஜூன் 12 ஆம்
தேதிக்கும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 18 ஆம் தேதிக்கும்
இடையிலான ஏழு நாள்களில் பி.எம்.எப்.டி.யு விற்கும் மலாயா
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாட்டைவிட்டு காட்டிற்குள் ஓடிப்போவ தைத்
தவிர வேறு வழியே இல்லை. இந்த வழிதான் அரசாங்கம் பின்பற்ற வேண்டிய
வழிகளில் ஒன்றென 1947-ஆம் ஆண்டில் இரு பிரிட்டிஷ் தொழிற்சங்கத்
தலைவர்கள் காலனித்துவ அரசிற்கு வழங்கிய அறிக்கையில் பரிந்
துரைத்திருந்தனர். அப்பரிந்துரை அவசரக்காலப் பிரகடனத்தின் மூலம்
நிறைவேற்றம் கண்டது. “வேறு எந்த ஒரு சரியான மாற்று வழியும்
இல்லாததால் பிரிட்டிஷ் சிறைச்சாலைக்கும் காட்டிற்கும் இடையில் மலாயா
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பி.எம்.எப்.டி.யு. காட்டைத் தேர்வு
செய்தனர்”, என்று மைக்கல் ஸ்டென்சன் (Michael Stensen) தனது ஆய்வில்
கூறியுள்ளார். அந்நிலையில் காட்டிற்குள் சென்றவர்களில் ஒருவர்
பி.எம்.எ·ப்.டி.யு வின் தலைவர் எஸ்.ஏ. கணபதி ஆவார்.
சார்ல்ஸ் கேம்பா (Charles Gamba) போன்ற ஆய்வாளர்கள்
பி.எம்.எ·ப்.டி.யு-வின் தலைவர்கள் சட்டத்தின் தேவைக்கேற்பத் தங்கள்
அமைப்புகளை மாற்றி அமைக்கத் தவறிவிட்டனர் எனக் குறை கூறி உள்ளனர்.
இக்குறைகூரல்கள் ஒரு தலைப்பட்சமானது மட்டுமன்றி அவர்கள் குறை கூறிய
காலத்தில் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய உண்மையான
நிலவரங்களுக்கு மாறானவை. அவர்களின் ஒருதலைப்பட்சமான போக்கிற்குக்
காரணம் பி.எம்.எப்.டி.யு-வின் அரசியல் சார்பு அவர்களுக்கு
ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக சார்ல்ஸ் கேம்பாவிற்கு. இவர் ஜோன்
பிரேசியரின் மிக ஆழ்ந்த அனுதாபி, ஆகையால், பி.எம்.எப்.டி.யு வின்
வீழ்ச்சிக்குப் பழியை அதன் மீதே சுமத்த முயன்றனர்.
அன்று அமலிலிருந்த 1940 ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்ட விதிகளுக்கேற்ப
3.11.1946-இல் பி.எம்.எ·ப்.டி.யு, தன்னைப் பதிவு செய்து
கொள்வதற்காக மனு செய்திருந்தது நன்கு தெரிந்தது. ஆனால், 11.06.1948
வரையில் (20 மாதங்களுக்கு மேலாக) பி.எம்.எ·ப்.டி.யு பதிவு
செய்யப்படவில்லை, சட்ட விரோத அமைப்பாக்கப்படவில்லை என்பதுடன்
தொழிற்சங்க மத்திய அமைப்பாகச் செயல்படுத்துவதிலிருந்து தடுக்கப்
படவுமில்லை. ஆனால் 12.6.1948-ஆம் ஆண்டில் பி.எம்.எ·ப்.டி.யின் மனு
நிராகரிக்கப்பட்டது. பி.எம்.எப்.டி.யு-வின் மனு குறித்து ஒரு முடிவு
எடுக்க ஏன் 20 மாதத்திற்கும் மேற்பட்ட காலதாமதம்? இந்த நீண்ட
காலதாமதத்திற்குக் காரணம் ஒரு தொழிற்சங்க சம்மேளனம் ஒரு
தொழிற்சங்கமா என்ற கேள்விக்கு மலாயா மற்றும் சிங்கப்பூர் அரசுகளின்
சட்டத்துறை தலைவர்களுக்கிடையே (Atorney Generals) எழுந்த கருத்து
வேறுபாடுகள்தாம் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலை ஒரு “கேலிக்கூத்து"
என்று மைக்கல் ஸ்டென்சன் வர்ணித்துள்ளார். மேற்கூறிய காரணம்
தவறானதாகும்.
சட்ட அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இந்த நீண்ட
கால தாமதத்திற்கு அக்கருத்து வேறுபாடுகள் காரணமல்ல. இந்த நீண்ட
காலதாமதத்திற்கு உண்மையான காரணம்: எல்லாராலும் வேண்டுமென்றே
மறைக்கப்பட்ட காரணமாகும். கவர்னர்- ஜெனரல் மேல்கம்
மெக்டோனல்டிற்கும் கவர்னர் எட்வர்ட் ஜென்டிற்கும் இடையில்
பி.எம்.எப்.டி.யு குறித்து காலனித்துவ அரசின் கொள்கை எதுவாக இருக்க
வேண்டும் என்பதில் ஏற்பட்ட மோதல்கள்தாம்.
சிங்கப்பூரில் கவர்னர் ஜெனரல் மற்றும் கவர்னர்கள் ஆகியோர்களுக்கான
மாநாட்டில், சிங்கப்பூர் கவர்னர் சிங்கப்பூர் தொழிற்சங்கங்கள்
சம்மேளனத்தைப் பதிவு செய்யப் போவதில்லை என்று முடிவு
செய்திருப்பதாகவும், அச்சம்மேளனத்தின் தலைவர்கள் வளமான
தொழிற்சங்கங்கள் உருவாக்குவதற்குத் தடையாக இருப்பதால் நாடு கடத்தல்
சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு அனுமதி
வழங்குமாறு இலண்டன் காலனித்துவ அமைச்சரிடம் அனுமதி
கோரியிருப்பதாகவும் தெரிவித்தார். அவரை ஆதரித்த மேல்கம் மெக்டோனல்ட்
நாடு கடத்தல் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசால் கலவரங்களுக்குக்
காரணமானவர்களை களையெடுக்க முடியாது என்று கூறினார்.
மலாயாவின் கவர்னர் எட்வர்ட் ஜென்டின் கொள்கை கவர்னர் ஜெனரல் மற்றும்
சிங்கப்பூர் கவர்னர் ஆகியோரின் கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்டதாக
இருந்தது.
மலாயாவில் தொழிற்சங்க சம்மேளனத்தின் பதிவு மனுவை நிராகரிப்பதற்கான
நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவ்வாறு செய்வதற்கான
நோக்கம் ஏதும் கிடையாது என்றும் எட்வர்ட் ஜென்ட் கூறினார்.
தொழிற்சங்க சம்மேளனம் சட்டப்பூர்வமான அமைப்பாகப் பதிவு செயப்படுவதை
சாத்தியமற்றதாக ஆக்குவதன் மூலம் அரசாங்கம் அந்த அமைப்பை சட்ட விரோத
அமைப்பாக்கி நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளுகிறது என்று
வாதிட்டார்.
மேலும், பொதுத் தொழிலாளர் சங்கத்தில் அங்கத்துவம் அல்லது வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுதல் போன்றவற்றிற்காக நாடு கடத்தப்படுவதற்கு
எந்த ஒரு நியாயமும் இல்லை என்று எட்வர்ட் ஜென்ட் வாதித்தார்.
இறுதியில், ஓர் அமைப்பு முறையான விதிகளைக் கொண்ட ஒரு தொழிற்சங்கம்
என்பதில் தனக்கு மனநிறைவு ஏற்பட்டால் அது பதிவு செய்ய
அனுமதிக்கப்படும் என்று எட்வர்ட் ஜென்ட் தனது நிலைப்பாட்டைத்
தெரிவித்தார். ஆனால், கவர்னர் ஜெனரல் மேல்கம் மெக்டோனல்ட் அவ்வாறான
நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிரவாத தொழிற்சங்கவாதிகள் நாடு
கடத்தப்பட வேண்டும். அப்படி நாடு கடத்தப்படாவிட்டால் அரசாங்கம்
மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று தீர்க்கமாகக் கூறினார்.
கவர்னர் ஜெனரலுக்கும் கவர்னருக்கும் இடையிலான இந்தக் கொள்கை
வேறுபாடுகள்தாம், பி.எம்.எ·ப்.டி.யு-வின் பதிவு மனு இருபது
மாதங்களுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கியதற்குக் காரணம். இந்த
உண்மை மறைக்கப்பட்டு பழியைப் பி.எம்.எ·ப்.டி.யு-வின் மீது
போடப்பட்டது. பின்னர் பி.எம்.எப்.டி.யு மற்றும் அதன் மாநில
அமைப்புகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட விரும்பவில்லை என்ற
தோற்றம் உருவாக்கப்பட்டது. இவ்வாறான திட்டத்தை உறுதிப்படுத்தினார்
ஜோன் பிரேசியர். அவர் கூறியதாவது, “நமக்குத் தெரியும் அவர்களால் (பி.எம்.எ·ப்.டி.யு)
இணங்கிப்போவது சாத்தியமல்ல".
சிங்கப்பூர் மாநாட்டில் கவர்னர் எட்வர்ட் ஜென்ட் கூறியதுபோல்
காலனித்துவ அரசு பி.எம்.எ·ப்.டி.யு-வை சட்டப்பூர்வமான அமைப்பாகப்
பதிவு செய்ய மறுத்த முடிவால் அது சட்ட விரோத அமைப்பாக்கப்பட்டது.
பிரிட்டீஷ் பேரரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மேல்கம்
மெக்டோனல்ட் நடத்திய போராட்டத்தினால் எஸ்.ஏ.கணபதி போன்ற பலரின்
உயிர்கள் பறிக்கப்பட்டன. மலாயாவின் தொழிலாளர் இனப் போராட்டத்தை முன்
நின்று வழி நடத்திய மலாயா தொழிற்சங்க இயக்கத்தின் மத்திய அமைப்பான
அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனமும் அழிக்கப்பட்டது.
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் பதிவு மனு
நிராகரிக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை காலனித்துவ அரசு
மறைத்துவிட்ட செயல் புரிந்து கொள்ளக் கூடியதே. அவ்வாறே, சுதந்தர
மலாயா அரசாங்கமும் பிரிட்டீஷாரின் கொள்கையைத் தொடர்ந்து
பின்பற்றுவதைத் தவிர வேறுவழி ஏதும் இல்லாமல் இருந்ததும் புரிந்து
கொள்ளக் கூடியதே. ஆனால், தங்களின் சுய நோக்கங்களுக்காக
அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றுச்
சான்றுகளை அறிஞர்கள் மறைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடாதது மட்டுமல்ல
மன்னிக்க முடியாத ஒன்றாகும். பிரிட்டீஷ் மலாயா அரசாங்கம்தான்
திட்டமிட்டு பி.எம்.எ·ப்.டி.யு-வையும் மலாயா கம்யூனிஸ்ட்
கட்சியையும் நொறுக்கியதோடு அவற்றைக் காட்டிற்குள் விரட்டியது என்ற
உண்மையை மறைத்ததுடன் தூய மனசாட்சியுடையவர்கள் என்ற நினைப்பில்
அவர்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் முத்திரை
குத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.