ஏழைகளின் போராளி மாமனிதர் வி. டேவிட்

- ஆய்வாளர் ஜீவி. காத்தையா

 

மலாயாவில் அவசரகாலம் 1948ல் பிரகடனம் செய்யப்பட்டது. அன்று எஸ்.எ.கணபதியின் தலைமையில் இயங்கிவந்த, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய, அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடைசெய்யப்பட்டது. அச்சம்மேளனத்துடன் இணைந் திருந்த மற்ற தொழிற்சங்கங்களுக்கும் அதேகதி. இச்சங்க ங்களின் தலைவர்களில் மற்றும் தீவிர ஆதரவாளர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்; பலர் சுட்டுக் கொள்ளப் பட்டனர்; பலர் நாடு கடத்தப்பட்டனர்; பலர் காட்டிற்குள் சென்று விட்டனர். எஸ்.எ.கணபதி தூக்கிலிடப்பட்டார்.


இந்த அவசர காலத்தில் மலாயாவின் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அவசர அவசரமாக மக்களாட்சி தத்துவப்படி பல புதிய தொழிற்சங்கங்களைத் துப்பாக்கி முனையில் உருவாக்கியது! அவ்வாறே தொழிற்சங்கத் தலைவர்களும் உருவாக்கப்பட்டனர். உதாரணத்திற்கு: ஜோன் இமேனுவல். இவர் ஈப்போவில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியை நடத்தி வந்தார். இவருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருந்ததில்லை. பிரிட்டிஷ் பேரரசின் கீழ்நிலை அதிகாரி களின் ஒருவரான ஜோன் பிரேசியர் ஜோனை பேராக் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவ ராக்கினார், அதுவும் துப்பாக்கி முனையில். பின்னர், ஜோன் இமேனுவல் தந்தை ஜோன் பிரேசியரின் ஆசிர்வாதத் தோடு தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரானார்.


ஜோன் பிரேசியரால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அறியாத பெரும்பான்மையான தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தில்லை என்றும், மேலும் அத்தலைவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பதவிகளுக்கு அரசாங்கத்தையே நம்பியிருந்தனர் என்றும், ஜோன் பிரேசியர் கூறியிருக்கிறார்.


மக்களாட்சி தத்துவம் தங்கள் மடியில்தான் பிறந்தது என்று கொக்கரித்த, இன்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும், பிரிட்டிசார் மலாயாவில் தங்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கெல்லாம் தலைவராக ஒருவரை, மலாயாத் தோட்ட முதலாளிகளின் ஆதரவுடனும் மற்றும் லண்டன் காலனித்துவ அலுவலக அனுமதியுடனும் தெரிவு செய்தனர். பின்னர், பிரிட்டிசாரால் உருவாக்கப்பட்ட மலாயா தொழிற்சங்க கவுன்சிலின் பேராளர்கள் ஆண்டுக் கூட்டம் என்ற நாடக அரங்கேற்றத்தில் அவரை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.


அத்தலைவர், பி.பி நாராயணன், வெள்ளைக் கழுகுகளின் போதனைகளை அப்படியே திருப்பிச் சொல்லும் கருங்கிளியாகச் செயல்பட்டார். அவர் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை இதற்கு உதார ணமாகக் கூறலாம்.


“ஒரு தொழிற்சங்கம் ஓர் இன்சூரன்ஸ் கம்பெனி போன்றது; தொழிற்சங்க அங்கத்தினர்கள் வழங்கும் மாத சந்தா பணம் இன் சூரன்ஸ் எடுத்திருப்பவர்கள் கட்டும் மாத பிரிமியத் தொகைக்குச் சமமானது; இன்சூரன்ஸ் எடுத்திருப்பவர்களுக்கு ஆபத்து வேளையில் எப்படி இன்சூரன்ஸ் கம்பெனி உதவி செய்கிறதோ அவ்வாறே தொழிற்சங்க அங்கத்தினருக்கும் பிரச்சனைகள் ஏற்படும்போது தொழிற்சங்கம் அவர்களுக்கு உதவுகிறது" என்று பி.பி.நாராயணன் கூறினார்.


தொழிற்சங்கங்களுக்கு வேறு எந்த செயல்பாடுகளோ, ஈடுபாடு களோ, கோட்பாடுகாளோ கிடையாது, இருக்கவும் கூடாது என்று மலாயா காலனித்துவ அரசு போதித்த பாடத்தை பி.பி.நாராயணன் தனது உரையில் அப்படியே ஒப்பித்துவிட்டார்.


பிரிட்டிஷ் காலனித்துவ அரசால் உருவாக்கப்பட்டு, அவ்வரசின் கட்டளைப்படி மலாயாவில் பல பெரும் தொழில்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்குத் தொழில் ரீதியாக எவ்வித இன்னல்களும் இழைக்காமல் பிரிட்டிசாரின் நலன்களுக்காக மலாயாவின் பெரும்பான்மையான தொழிற்சங்கத் தலைவர்களும், தொழிற்சங்கங்களும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், வி.டேவிட் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் துவங்கினார்.

வேறுபட்டவர்


ஜூன் மாதம் 18ஆம் தேதி 1948 ஆம் ஆண்டில் மலாயாவில் அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது டேவிட்டின் வயது 16க்கும் குறைவு. அவரது அப்போதைய குறைந்த வயது அவருக்கு நன்மையாகிவிட்டது. இல்லையேல், அவரும் பிரிட்டிசாரின் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.


ஆரம்பக்காலத்திலிருந்தே டேவிட்டின் நடை, உடை, பாவனை வேறுபட்டிருந்தன. அவரது உணவு எளிமையானதாகவே இருந்தது. பிற்காலத்தில் சற்று அதிகம் உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். பாராளுமன்றம் மற்றும் மேல்நாடுகளுக்கு செல்லும்போது மட்டுமே மேல்நாட்டு உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். மற்ற நேரங்களில் சாதாரண ஆடைகள்தாம். அவர் முழுக்கை சட்டை அணிந்து இருந்ததை யாரும் பார்த்ததில்லை. ஒரு முறை பாராளுமன்றத்திற்குக் கோட்டும் டையும் இல்லாமல் சென்றார். அவர் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப் பட்டார்.


இச்சம்பவம் பற்றி நான் அவரிடம் பேசியபோது, “நீங்கள் வேட்டி மற்றும் சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். உங்களை நிச்சயமாக தடுத்து நிறுத்தியிருப்பார்கள். நீங்கள் அவ்விடத்திலேயே உட்கார்ந்து காந்தியைப்போல் சத்தியாக்கிரகம் செய்திருக்க வேண்டும்", என்று கூறினேன். திடீரென்று வில்லன் வீரப்பாவைப் போல் சிரித்துவிட்டு," ஆமாம், அப்படித்தான் செய்திருக்க வேண்டும்," என்றார்.


இந்த நாட்டில் நமது கலை, கலாசாரம், மற்றும் பாரம்பரியம் என்று தினந்தோறும் பேசப்படுகிறது. பாராளுமன்றத்தில் மேல் நாட்டு உடை அல்லது மலாய் உடை அனுமதிக்கப்படுகிறது. நமது உடைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏன்? நமது பாராளுமன்ற உறுப்பினர்கள், இது குறித்துச் சிந்திக்க வேண்டும். மக்கள் அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். கேள்விமேல் கேள்வி கேட்க வேண்டும். கேள்விகள் கேட்டே பலரை கதிகலங்க வைத்தார் டேவிட்.


ஒரு குத்துச்சண்டை வீரனைப் போன்ற தோற்றமுடைய டேவிட், அத்தோற்றத்திற்கு மெருகேற்றும் வகையில் அவரது இடது கையில் கைக்கடிகாரம் பதிக்கப்பட்ட ஓர் அகன்ற வார்ப்பட்டையை எப்போதும் அணிந் திருப்பார். இத்தோற்றத்தில் அவர் ஒரு ரௌடியை போல் இருக்கின்றார் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், நாடு முழுவதுமுள்ள அவர்தம் பல்லயிரக் கணக்கான ஆதரவாளர்களான தொழிலாளர்கள் அவரை அத்தோற்றத்தில் தங்களைக் காக்க வந்த மதுரைவீரனைப் போன்ற “பங்சார் வீரன்" என்று போற்றினார்கள்.


டேவிட் தனது அரை நூற்றாண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கான ஆதரவா ளர்களையும் எதிர்ப்பாளர்களையும் கொண்டிருந்தார். ஆனால், அவரை வெறுத்து எதிரியாகக் கருதியவர்கள் மிகச் சிலரேயாகும். அவர் எல்லா இன மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றிருந்தார். உலக மக்களின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பரம எதிரியான மத, இன, ஜாதி வெறிகளுக்கு அப்பாற்பட்டவர் டேவிட். அவர் என்றுமே உலக மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய வியாதிகளால் பாதிக்கப் படவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். யாரையும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பாகுபடுத்தி பார்த்ததில்லை. இன்று இந்திய அதிபர் அப்துல் கலாம் எவ்வாறு இன, மத, ஜாதி போன்ற கீழ்த்தனமான செயல்களுக்கு அப்பாற்பட்டவராக, இந்திய மக்கள் அனைவரின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறாரோ, அவ்வாறான அடிப்படை நோக்கத்துடன்தான் டேவிட் தனது தொழிற்சங்க மற்றும் அரசியல் போராட்டங்களை நடத்தினார்.


வெற்றி பெற்றவர்களையும் புகழ்பெற்றவைகளையும் சொந்தம் கொண்டாடுவது மனிதர்களின் வழக்கமான செயல்களே. யாரும் அறியாத ஷெர்பா டென்சிங் நோர்க்கே எவரெஸ்டின் உச்சியைத் தொட்டதும், அவரை பல நாடுகள் சொந்தங் கொண்டாடின. தாஜ்மஹாலை இன்று பலர் தங்களுக்குச் சொந்தம் என்கிறார்கள். டேவிட்டை ஒரு சாரார் தங்கள் ஜாதிக்காரர் என்கிறார்கள். அதற்கு டேவிட் பொறுப்பாளி அல்ல. டேவிட் இந்நாட்டுத் தொழிலாளிகளுக்குச் சொந்தக்காரர்; இந்நாட்டு மக்களுக்குச் சொந்தக்காரர்.

தொழிற்சங்க ஈடுபாடு


ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் மத்தியில் வாழ் ந்த சிறுவன் டேவிட் புரிந்த முதல் தொழில் மாடுகள் மேய்ப்பதேயாகும். ஏழைத் தொழிலாளர்களுடன் வாழ்ந்த ஏழை டேவிட்டிற்கு ஏழைத் தொழிலா ளர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டது. அதற்கான நடவடிக்கைக ளில் ஈடுபட்டது இயற்கையான ஒன்றே.


தொழிற்சங்க செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட டேவிட் துரிதமாக முன்னேறி தனது இருபத்தோராவது வயதில், 1953 ஆம் ஆண்டில், சிலாங்கூர் மில் தொழிலாளர் சங்கத்தின் செயலா ளரானார். அடுத்த ஆண்டில் இச்சங்கம் சிலாங்கூர் மில் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம் என மாற்றம் கண்டது. 1955 ஆம் ஆண்டில் தேசிய தொழிற்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்றார். அரசாங்கம் அச்சங்கத்தை 1958 ஆம் ஆண்டில் தடைசெய்தது. டேவிட்டும் கைது செய்யப்பட்டார். இறுதியில் 1959 ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (TWU) பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தேசிய அளவில் மலேசியத் தொழிற்சங்க காங்கிரசில் பல பதவிகளை வகித்திருந்த டேவிட் 1980 ஆம் ஆண்டில் அக்காங்கிரசின் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படார். அப்பதவியில் 13 ஆண்டுகள் இருந்தார்.


மலேசியத் தொழிற்சங்க காங்கிரசின் பிரநிதியாக உலகச் சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தின் (ICFTU) நிர்வாகக் குழுவிலும், உலகத் தொழிலாளர் மன்றத்தின் (ILO) ஆட்சிக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.


பழைய கிள்ளான் சாலையிலிருந்து துவங்கிய டேவிட்டின் தொழிலாளர் போராட்டப் பயணம் ஜெனிவாவிலுள்ள உலகத் தொழிலாளர் மன்றம் வரை சென்றது. அதற்கப்பாலும் சென்றது.


அவரது ஒவ்வொரு பேச்சிலும், அறிக்கையிலும் தொழிலாளர்களின் உரிமை பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் தங்களுக்கென தாங்களே ஒரு புதிய உலகை, தொழிலாளர்களின் உலகை, உருவாக்க வேண்டுமென்றார்.

டேவிட்டின் கனவு நனவானதா?


நாட்டிலுள்ள மற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் அணுகுமுறைக்கும் டேவிட்டின் அணுகுமுறைக்கும் மிகுந்த வேறுபாடுகள் இருந்தன. டேவிட்டிடம் தீவிரவாத போக்குக் காணப்பட்டது. தனது சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருவதற்கு வேலை நிறுத்தம் ஒன்றுதான் வழி என்றால் அதனைச் செய்ய அவர் தயங்கியதில்லை. அவர் பல வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருந் தாலும் சிலவற்றில் தோல்வி கண்டார். இந்நிலைக்குக் காரணம் அரசாங்கம் முதலாளிகளுக்குச் சாதகமான போக்கை கடைப்பிடித்ததுதான்.


இதற்கு உதாரணமாக கிள்ளானில் இயங்கிய பங்கியோங் தொழிற்சாலையின் தொழிற்சங்க எதிர்ப்புக் கொள்கையும், அதன் காரணமாக ஏற்பட்ட வேலை நிறுத்தமும் ஆகும். இந்த வேலை நிறுத்தத்தின் காரண மாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். அரசாங்க விசாரணைக் குழு பங்கியோங் தொழிற்சாலை முதலாளிகள்தான் இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று தீர்ப்புக் கூறியிருந்தும், துங்கு அப்துல் ரஹ்மானின் தலையீட்டையும் பொருட்படுத்தாமல் தொழிற்சாலையை மூடிவிட்டு ஹோங்கோங்கிற்குச் சென்றுவிட்டனர் அத்தொழிற்சாலையின் உரிமையாளர்கள்.


இவ்விவகாரத்தை டேவிட் பாராளுமன்றத்தில் எழுப்பினார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற, இந்திய சுதந்தரப் போராட்டவீரர் சந்திரபோசின் மீது தீராத காதல் கொண்ட அன்றைய தொழிலாளர் அமைச்சர் வீ.தி.சம்பந்தன் தனது பதிலில் பழியைத் தொழிற்சங்கத் தலைவர் மீது சுமத்தினார். வேலை நிறுத் தத்தினால் ஏற்படும் விளைவுகளை ஆராயாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கினால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்று கூறினார். இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணமாக இருந்த பங்கியோங் தொழிற்சாலை முதலாளிகளின் பொறுப்பைப் பற்றி வீ.தி.சம்பந்தன் ஏதும் கூறவில்லை.


டேவிட் மற்றும் சில தொழிற்சங்கத் தலைவர்களைத் தவிர்த்து, மற்ற தலைவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் காலனித்துவ அரசு உருவாக்கி அமல்படுத்திய மிதவாத தொழிற்சங்க கொள்கையை மிகத் தீவிரமாகப் பின்பற்றி வந்தனர். இதனால் டேவிட்டின் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆதரவு தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. மலேசியத் தொழிற்சங்க காங்கரசும் இன்னும் பிற்போக்கான கொள்கையைக் கொண்டிருந்தது. டேவிட் அக்காங்கரசின் தலைமைச் செயலாளராக இருந்த போதும் கூட தொழிற்சங்க காங்கரசின் போக்கை மாற்றமுடியவில்லை. இதற்குக் காரணம், மலேசிய தொழிற்சங்க காங்கரஸ் பி.பி.நாராயணன் போன்ற தலைவர்களின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்தது தான். மேலும், டேவிட்டை மலேசிய தொழிற்சங்க காங்கரசின் தலைமைச் செயலாளராக்கியதன் மூலம் அவரது தொழிலாளர் உரிமைப் போராட்ட உணர்வைக் கட்டுப்படுத்திவிட்டனர்.


டேவிட் உருவாக்க விரும்பிய தொழிலாளர்கள் உலகம் ஒரு மனிதனின் போராட்டமாகவே இருந்து விட்டது.

தொழிற்சங்க அரசியல் ஈடுபாடு

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் தேவைகளைப் பெறுவதற்குப் பிச்சை கேட்கலாமே தவிர, அத்தேவைகளைப் பெறும் நோக்கோடு அரசியலில் ஈடுபடக் கூடாது. பிரிட்டிஷ் காலனித்துவ அரசு 1948-ல் இருந்து இந்நாட்டு தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம். சுதந்தர மலேசியாவின் அரசும் அந்தப் பாடத்தை இன்னும் தீவிரமாகக் கற்றுக் கொடுத்தது. இக்கொள்கையின் விளைவாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களது தேவைகளைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்குக் காவடி எடுத்தனர். இன்று ஆளுங்கட்சிகளுக்குக் காவடி எடுக்கின்றனர். ஒரு பெரிய தொழிற்சங்கத்தின் தலைவர் தனது சங்க உறுப்பினர்களின் குறைகளைப் பிரதம மந்திரியிடம் கூறி ஆசி பெறுவதற்காக தேதி கேட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார்! இதைத்தான் அரசாங்கமும் முதலாளிகளும் விரும்புகின்றனர். உண்மையில், பிரிட்டிஷ் காலனித்துவ அரசோ அல்லது சுதந்திர மலேசிய அரசோ தொழிற்சங்கத் தலைவர்களை எவ்வித அரசிய லிலும் ஈடுப்படக் கூடாது என்று கூறவில்லை. பிரிட்டிஷ் காலனித்துவ அரசை, கூட்டணி அல்லது இன்றைய பாரிசான் நேசனல் அரசை ஆதரிக்கும் அரசியலில் தாராளமாக ஈடுபடலாம். எதிர்க்கட்சி அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது.


டேவிட் போன்றவர்கள் தொழிற்சங்கமும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்றனர். இக்கொள்கையைப் பின்பற்றி தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபட்டுத் தொழிலாளர்கள் தங்கள் நலன் காக்கும் அரசை அமைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து இறுதிவரையில் போராடியவர் டேவிட். மேடையில் பேசுவதற்காக டேவிட் வந்ததும் ஒரு சிலர் உடனே முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள். அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: “அரசியல் வேண்டும். ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்'. இதைத்தானே டேவிட் பேசுவார் என்பார்கள். உண்மை அதுதானே. தொழிலாளர்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயில் பின் அப்துல் ரஹ்மான், டான் சியூ சின், வீ.தி.சம்பந்தன் ஆகியவர்களுடன் தொழிலாளர்களுக்கு ஒரு விடுமுறை நாளை பெறுவதற்கு டேவிட், கராம்சிங், டி.ஆர்.சீனிவாசகம் போன்றவர்கள் தானே போராடினார்கள். பங்கியோங் தொழிற்சாலையின் முதலாளிகளைக் குறைகூறுவதற்கு முன்வராத வீ.தி.சம்பந்தன் டேவிட்டை தானே குறைகூறினார். முதலாளித்துவ கொள்கையைக் கொண்ட அரசியல் வாதிகள் முதலாளிகளைத் தான் ஆதரிப்பார்கள். அதைத்தானே கூட்டணி அன்று செய்தது. பாரிசான் இன்று செய்து கொண்டிருக்கிறது.


தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற தத்துவம் டேவிட்டின் சிந்தனையில் மட்டும் உருவாகி உலகில் பலகோடி தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்தல்ல. பிரிட்டனை ஆண்ட, இப்போதும் ஆண்டு கொண்டிருக்கின்ற தொழிற் கட்சியை 1900ஆம் ஆண்டில் உருவாக்கி அரசியல் களத்தில் இறக்கி ஆட்சியைக் கைப்பற்றியது, பிரிட்டீஷ் தொழிற்சங்கங்கள். இந்தியாவில் அரசியலில் ஈடுபடாத தொழிற்சங்கங்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் உண்டா? இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒரு தொழிற்சங்கவாதி. 1927ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கரசின் தலைவராக இருந்தார். முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் மாற்றி அமைக்கப்பட்டால்தான் தொழிலாளர்கள் நன்மை அடைய முடியும் என்று அதிரிட்டுக் கூறியவர் ஜவஹர் லால் நேரு. காந்திஜி தன்னை ஒரு செயல்பாட்டுக்குரிய சோசலிஷவாதி என்றார். எல்லாவற்றுக்கும் மேலாக சுவாமி விவேகானந்தர் தான் ஒரு சோசலிசவாதி என்றார்.


மக்கள், தொழிலாளர்கள் நல்வாழ்வு வாழ புதிய அரசியல் தத்துவங்களின் தேவையை வலியுறுத்திய மேற்கூறப்பட்ட தலைவர்களெல்லாம் குற்றவாளிகள் என்றால், டேவிட்டும் ஒரு மிகச்சிறிய அளவிற்குக் குற்றவாளிதான். ஆனால், மேற்கூறப்பட்டவர்கள் எல்லோரும் தவறான தத்துவத்தை மக்கள் முன் வைத் தார்கள் என்பதை நிரூபிக்க இன்னொருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்.


தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும்


மலாயாவில் வளர்ந்து வரும் தொழிலாளர்களின் தீவிர அரசியல் ஈடுபாட்டிற்கு அணைபோட பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டினார்கள். தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்கட்சி. அக்கட்சியின் தலைவர் யார்? எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் அக்கட்சியில் பெருமளவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதை பிரிட்டீஷாரே முடிவு செய்தனர். உலக மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்களான பிரிட்டீஷாருக்கு இது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர் ஒக்டோவியன் ஹியூம் என்ற பிரிட்டீஷ்காரர். தீவிர போக்குடைய இந்தியர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப பதற்காக அக்கட்சி 1885இல் உருவாக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி பிரிட்டீஷாரின் தலையிலேயே கையை வைத்துவிட்டது. அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்ட பிரிட்டீஷார் மலாயாவில் தொழிற்கட்சியுடன் சேர்ந்து ஒரு முழுத் தீவிரவாத கட்சியை (The Radical Party) உருவாக்கினார்கள்.ஓன் பின் ஜாபாரால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படும் மலாயா சுதந்தரக் கட்சியும் (Independent Party of Malaya) பிரிட்டீஷாரின் கைவண்ணத்தில் உருவானதே. பிரிட்டீஷாரின் திட்டப்படி தொழிற்கட்சிக்குத் தலைவர் முகமட் சோப்பி. தொழிற்சங்கத் தலைவர் களின் ஒருமித்த ஆதரவு தொழிற்கட்சிக்கு இருக்கக் கூடாது.


தனது 19வது வயதில் டேவிட் தொழிற்கட்சியில் இணைந்தார். தீவிரமாகச் செயல்பட்டார். அன்று, 1951ல், டேவிட்டிற்கு பிரிட்டீஷாரின் திட்டங்கள் தெரிந்திருக்க முடியாது. இத்தகவல்கள் எல்லாம் பிரிட்டீஷ் புலனாய்வுத்துறை ஆவணகளிலிருந்து சமீப காலங்களில் கிடைக்கப் பெற்றவையாகும்.


மலாயா தொழிற்சங்க காங்கரசின் தலைவர் பி.பி. நாரயணன் தொழிற்கட்சி அமைப்பதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று 15.10.1950இல் அறிவித்தார். ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. பிரிட்டீஷாரின் திட்டம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அதே பி.பி. நாராயணன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொழிற்சங்கங்கள் தொழிற்கட்சியைத் துவக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். பிரிட்டீஷாரின் விருப்பமே பி.பி. நாராயணனின் இலட்சியம். அவர், தொழிற்சங்கங்கள் ஓன் பின் ஜாபாரின் மலாயா சுதந்தரக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரும் போலி தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்குவதில் வல்லவரான ஜோன் பிரேசியரும் மலாயா சுதந்தரக் கட்சியின் கோலாலம்பூர் கிளை செயற்குழுவில் அங்கம் பெற்றிருந்தனர்.


மலாயா தொழிற்சங்க காங்கிரசின் ஆதரவு இல்லாமலேயே மாநில அளவில் தொழிற்கட்சிகள் உருவாகின. சிங்கப்பூர், பினாங்கு, சிலாங்கூர், பேராக், மலாக்கா மற்றும் கெடா ஆகிய மாநிலங்களின் செயல்பட்ட தொழிற்கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு, 14.8.1952இல் அகில மலாயா தொழிற்கட்சி உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் வேறு யாராக இருக்க முடியும். பிரிட்டீஷார் விரும்பிய முகமட் சோப்பிதான்!


நாளடைவில் பி.பி. நாராயணனின் ஆதரவைப் பெற்ற மலாயாச் சுதந்தரக் கட்சி ஆதரவற்ற நிலையில் நலிந்து காணாமல் போய்விட்டது. தொழிற்சங்கங்களிடையே போட்டியை உருவாக்கி, அவற்றை வலுவிழக்கச் செய்து, இறுதியில் தொழிற்சங்கங்களின் அரசியல் நோக்கம் வெற்றி பெறாமல் போனதற்குப் பிரிட்டீஷ் அரசின் சூழ்ச்சியும், அவற்றுக்குத் துணைபோன பி.பி. நாராயணன் மற்றும் அவரின் ஆதரவாளர்களுமே பொறுப்பு.


தனிப்பட்ட முறையில், மக்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கினால் டேவிட் மற்றும் சிலர் தொழிற்கட்சி, மற்றும் அதன் பிறகு தோன்றிய கட்சிகளின் மூலம் மாநிலச் சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தங்களது மக்கள் சேவையைத் தொடர்ந்தார்கள். 1958 ஆம் ஆண்டில் நடந்த கோலாலம்பூர் நகராண்மைக்கழகத்திற்கான தேர்தலில் சோஷலிஷ முன்னணியின் சார்பில் பங்சார் பகுதியில் போட்டியிட்ட டேவிட் வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத்தில் சொற்போர்


டேவிட் தனது 27வது வயதில் 1959 ஆம் ஆண்டு பங்சார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராளுமன்றம் சென்றார் அன்றைய பாராளுமன்றத்தில் டேவிட் தான் மிகக் குறைந்த வயதினர்.


“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்று கூறுவார்கள். பாராளுமன்ற உறுப்பினராவற்கு முன்பே டேவிட்டின் பெயர் பெடால் சட்ட மன்றத்தில் ஒலித்தது.


அன்றைய சுதந்தர மலாயா அரசாங்கம் தொழிலாளர்கள் மே தின விழாவை கொண்டாடுவதற்குப் பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதித்திருந்தது. அவ்வாறு தடை விதித்தது தவறு என்றும், அத்தடையை அகற்ற வேண்டும் என்றும் மே மாதம் 1-ம் தேதி 1958ஆம் ஆண்டில் ஈப்போ-மெங்லெம்பு தொகுதி உறுப்பினர் டி.ஆர்.சீனிவாசகம் பெடரல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.


அத்தீர்மானத்தின் மேல் நடந்த விவாதத்தில் பலர் கலந்து கொண்டு அத்தீர்மானத்திற்கு எதிராகப் பேசினார்கள். துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான அப்துல் ஈசாக் பின் ஹீசென் தனது நீண்ட உரையில் மே தினம் கம்யூனிசவாதிகளால் கொண்டாடப்படுகிறது. இங்கு அத் தினத்தைக் கொண்டாடுப வர்கள் கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப் பட்டவர்கள். அதற்கு உதாரணமாக 1.5.1957 இல் சிரம்பானில் நான்கு தொழிற்சங்கங்கள் கூட்டாக நடத்திய மே தினக் கூட்டம் என்றார். அந்நான்கு தொழிற்சங்கங்களில் ஒன்று டேவிட்டின் தேசிய மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கமாகும். அன்று நடந்த மே தினக் கூட்டம் கம்யூனிஸ்டுகளுக்கு உரித்தான முறையில் நடத்தப்பட்டது என்று கூறினார் அப்துல் ரசாக். அந்த மே தினக் கூட்டத்திற்கு டேவிட் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அச்செய்தியின் தன்மை கம்யூனிச உரைகளைப் போன்றிருந்தது என்றார் அப்துல் ரசாக். மேலும், அச்செய்தி தொழிலாளர்களை பலாத்கார செயல் களில் ஈடுபடத் தூண்டக் கூடியதாகவும் இருந்தது எனப் பொருட்கொள்ளலாம் என்றும் கூறினார் அப்துல் ரசாக்.


பெரும்பான்மை கூட்டணி உறுப்பினர்களைக் கொண்டிருந்த பெடரல் சட்ட மன்றம் டி.ஆர். சீனிவாசகத்தின் தீர்மானத்தை நிராகரித்தது. தோற்கடிக்கப்பட்டாலும் அத்தீர்மானத்தின் மேல் நடந்த விவாதம் மே தினத்தையும் டேவிட்டையும் பிரபல்யமாக்கியது என்று கூறினால் அது மிகையாகாது.


1959ஆம் ஆண்டிலிருந்து டேவிட் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் காலத்தில் துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் பின் ஊசென், ஊசென் பின் ஓன் பின் ஜாபார் மற்றும் டாக்டர் மகாதீர் பின் முகமது ஆகியோர் பிரதமர்களாகப் பணியாற்றியிருந்தனர்.


டேவிட் இப்பிரதமர்களுடன் பலமுறை பாராளுமன்றத்தில் மோதி இருக்கிறார். கடுமையான விமர்சன ங்களைக் கூறியிருக்கிறார், எழுதியிருக்கிறார். மலாயா மலாய்க்காரர்களுக்கே என்று துங்கு அப்துல் ரஹ் மான் பிரகடனம் செய்ததன் மூலம் அவர் இந்நாட்டிலுள்ள மற்ற இனத்தவர்களிடையே உருவான மனக் கசப்பிற்கு வித்திட்டவர் என்று டேவிட் துங்குவைப் பற்றி கூறியுள்ளார்.


அப்துல் ரசாக் துங்குவிடமிருந்து பிரதமர் பதவியைப் பறித்துக் கொண்டவர்; அவர் ஓர் ஏகாதிபதி முதலில், பின்னர்தான் பிரதமர், என்று டேவிட் கூறினார்.


டேவிட்டின் கருத்துப்படி ஊசென் பின் ஓன் ஜாபார் இயற்கையிலேயே மிதவாத போக்குடையவர். ஆனால், மலேசியத் தொழிலாளர்களின் வரலாற்றில் மலேசிய தொழிற்சங்க இயக்கத்தின் சுதந்தரத்தைப் பறித்ததில் பெரும் பங்குடையவர் என்றும் இடம் பெறுவார் என்று டேவிட் எழுதியிருக்கிறார்.