மே தினம் (உலகிற்கு எட்டு மணி நேர வேலை தந்த தினம்)

பழம்பெரும் தொழிற்சங்கவாதி ஜீவி. காத்தையா

 

 

அல்பர்ட் பார்சன்ஸ் (Albert Parsons), அகஸ்டஸ் ஸ்பைஸ் (August Spies), அடோல்ப் பிஸ்ச்செர் (Addph Fischer) மற்றும் ஜோர்ஜ் எங்கெல் (George Engel). இவர்கள் யார்? நிச்சயமாக, இவர்கள் படாவிகளோ, மன்மோகன் சிங்களோ, டோனி பிளேர்களோ அல்லது ஜோர்ஜ் புஷ்களோ அல்லர்.


இவர்கள் தொழிலாளர்கள், அமெரிக்கத் தொழிலாளர்கள். ஊரையோ, உலகத்தையோ தங்களுக்காகவோ, தங்கள் இனத்திற்காகவோ, தங்கள் மதத்திற்காகவோ கொள்ளையடித்தவர்கள் அல்லர்.


எனக்காகவும், உங்களுக்காகவும் உலகத் தொழிலாளர்களுக்காகவும், எதிர்காலச் சந்ததியினர்க்காகவும் போராடியதற்காகத் தூக்கிலிடப்பட்டவர்கள்தாம் இந்த நால்வரும்.


சிகாகோ சிறையில் 11.11.1887 ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்படுவதைக் காண கூடியிருந்தவர்களிடம் பேச அல்பர்ட் பார்சன்ஸ் முயன்றார். அதற்குள் தூக்குக்கயிறு அவரது குரல்வளையை நெரித்துவிட்டது. தனது கழுத்தைத் தூக்குக்கயிறு நெரிப்பதற்குள் அகஸ்ட்ஸ் ஸ்பைஸ் பேசிவிட்டார். அவர் கூறியதாவது: “அந்த நாள் வரும் அப்போது எங்களின் மௌனம் இன்று நீங்கள் நெரிக்கும் குரல்களைவிட மிகச்சக்தி வாய்ந்ததாக இருக்கும்." (“The day will come when our silence will be more powerful than the voices you are throttling today.")


 

இந்த நால்வருடன் இன்னும் நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் லூயிஸ் லிங் (Louis Lingg) தனது சிறை அறையிலேயே தற்கொலை செய்து கொண்டார் (அல்லது கொல்லப்பட்டாரா?), ஆஸ்கார் நீபே (Oscar Neebe), மைக்கல் ஸ்வாப் (Micheal Schwab) மற்றும் சேம்யுல் பீல்டன் (Samuel Fielden) ஆகியோரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.


ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1893 ஆம் ஆண்டில் இல்லிநோ மாநில ஆளுநர் இந்த எண்மரும் குற்றவாளிகள் அல்லர், அவர்கள் நிரபராதிகள் என்று பிரகடனம் செய்தார். சிறையிலிருந்த மூவரும் விடுதலைச் செய்யப்பட்டனர்.

எட்டுமணி நேர வேலைப் போராட்டம்


இந்த எண்மரும் புரிந்த உண்மையான குற்றம் தொழிலாளர்களுக்கு “எட்டு மணி நேர வேலை" என்ற போராட்டத்தை முன் நின்று நடத்தியதுதான். அமெரிக்காவில் நடந்த இந்த “எட்டுமணி நேர வேலை" போராட்டத்தில் சிகாகோதான் முன்னிலையில் இருந்தது. அதற்கும் காரணம் இந்த எண்மரின் தீவிர ஈடுபாடும், அசாத்திய திறமையும் ஆகும். அதன் காரணமாக சிகாகோ முதலாளிகள் அவர்களை வெறுத்தார்கள்.


மிகப்பெரிய, மிகச்சிறந்த தொழிலாளர் பேரணி மே மாதம் 1886ஆம் ஆண்டில் சிகாகோவில் நடந்தேறியது. இந்தப் பேரணி உலக மக்களால் “முதல் மே தின பேரணி” என்று வர்ணிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு “எட்டுமணி நேர வேலை" வேண்டும் என்று முழக்கமிட்டனர். அவர்களுடன் போலீஸ்காரர்களும் தொழிலாளர்கள் உடையில் கலந்துகொண்டனர். ஏன்? கலவரங்களை உண்டு பண்ணுவதற்கு.


மே மாதம் 4ஆம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் (Haymarket Square) நடந்த கூட்டம் முடியும் தருவாயில் ஒரு குண்டு வெடித்தது. அதன் விளைவாக ஒரு போலிஸ்காரர் அந்த இடத்திலேயே மரணமுற்றார். மற்றும் அறுவர் பின்னர் மரணமடைந்தனர். இதற்குக் காரணம் இந்த எண்மரும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டது. எவ்வித ஆதாரமுமின்றி அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக்கூறி மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இருபது மணி நேர வேலை


பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12லிருந்து 20 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மேலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஏழு நாள்களும் வேலைசெய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தாங்கொணா கொடுமைகளுக்கு விடிவுகாண தொழிலாளர்கள் முனைந்தனர். தொழிற்சங்கங்கள் உருவாகின. முதலில் “பத்து மணி நேர வேலை" கோரிக்கை எழுந்தது. பின்னர், அக்கோரிக்கை “எட்டுமணி நேர வேலை" என்று மாற்றம் கண்டது. ஆண்டுதோறும் இக்கோரிக்கை எழுப்பப்பட்டது. 1863ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் பெரு, சிறு நகரங்களில் “எட்டு மணி நேர வேலை" கோரிக்கைகள் தீவிரமடைந்தன. பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இக்கோரிக்கை எழும்பியது. பல அமெரிக்க மாநில சட்டமன்றங்கள் பத்து அல்லது எட்டுமணி நேர வேலைக்கு வழிவகுக்கும் சட்டங்களை உருவாக்கின. ஆனால், அச்சட்டங்களிலிருந்து முதலாளிகள் தப்பித்துக் கொள்வதற்கான வழிகளும் இருந்தன. “எட்டுமணி நேர வேலை" போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் “எட்டுமணி நேர வேலை" கோரி பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.


ஹேமார்க்கட் சதுக்கத்தில் நடந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு “எட்டுமணி நேர வேலை" கோரிக்கை உச்சக்கட்டத்தை அடைந்தது. இதே கோரிக்கை உலகின் மற்ற பகுதிகளிலும் எழுப்பப்பட்டது “வேலைக்கு எட்டுமணி நேரம், ஓய்விற்கு எட்டுமணி நேரம், விரும்பியதைச் செய்வதற்கு எட்டுமணி நேரம்", என்ற தொழிலாளர்களின் முழக்கம் முதலாளிகளையும், அவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஆட்சியாளர் களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களின் பணபலம், படைபலம் தொழிலாளர்களின் “எட்டுமணி நேர வேலை" புரட்சி இயக்கத்தின் முன் எடுபடவில்லை. 1888 ஆம் ஆண்டு அமெரிக்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “1890 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியைத் தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை அமுல்படுத்தும் நாள்" என்று முடிவெடுக்கப்பட்டது.


அந்த நாள், 1.5.1890 வந்தது. அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் திட்டப்படி மரவேலைத் தொழிலாளர்கள் “எட்டுமணி நேர வேலை" கோரி வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 46,000 மரவேலைத் தொழிலாளர்களுக்கு “எட்டுமணி நேர வேலை" உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களோடு பல்லாயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் “எட்டுமணி நேர வேலை" உறுதியானது.


உலகின் பல பாகங்களிலும் 1.5.1890 ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்பட்டது. அன்று செயல்படுத்தப்பட்ட “எட்டுமணி நேர வேலை" இன்று உலகையே ஆட்கொண்டிருக்கிறது. “எட்டுமணி நேர வேலை" இயக்கப் போராட்டத்தில் உதித்ததுதான் மேதினம். தொழிலாளர்களின் போராட்டத்தைப் பறைசாற்றும் நாள் மேதினம். அவர்களின் தொடரும் போராட்டத்திற்கு உயிர் ஊட்டும் நாள் மேதினம். இன, மத, நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொழிலாளர்களின் ஒற்றுமை நாள் மேதினம். முதலாளிகளுக்கும் அவர்களின் கைப்பாவையான ஆட்சியாளர்களுக்கும் சிம்ம சொப்பன நாள் மேதினம்.


 

“எட்டுமணி நேர வேலை" உரிமையை உருவாக்கியவர்கள், நிலைநிறுத்தியவர்கள், நிலைநிறுத்த இன்னும் போராடிக் கொண்டிருப்பவர்கள், தொழிலாளர்கள்!


எந்த நாட்டு அதிபரோ, பிரதமரோ அல்லது மகானோ இந்த “எட்டுமணி நேர வேலை" உரிமையை உருவாக் கவில்லை. அமெரிக்க அதிபரோ, பிரிட்டிஷ் பிரதமரோ அல்லது மலேசிய பிரதமரோ இந்த “எட்டுமணி நேர வேலை" உரிமையைத் தொழிலாளர்களுக்கு அளிக்கவில்லை.


மாறாக அதிபர்களும் பிரதமர்களும் “எட்டுமணி நேர வேலை" கோரிக்கையை வன்மையாக எதிர்த்தார்கள். தொழிற்சங்கங்களுக்குத் தடை விதித்தார்கள். தொழிலாளர்களை அடித்து நொறுக்கினார்கள்; சிறையில் அடைத்தார்கள்; தூக்கிலிட்டார்கள். அவ்வாறு தூக்கிலிடப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் இந்நாட்டின் எஸ்.ஏ.கணபதியும் ஒருவராவார்.


தொழிற்சங்க இயக்கம் உலக சக்தியாக வளர்ச்சி கண்டிருந்தும், மேதினம், மேமுதல் தேதி, அதன் சின்னமாகக் கருதப்பட்ட போதிலும், மேதினத்தை, மே மாதம் முதல் தேதியைத், தொழிலாளர் தினமாக ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிற அதிபர்களும், பிரதமர்களும் இருக்கிறார்கள். உலகத்தில் பல நாள்கள் பல தினங்களாகக் கொண்டாடப்படுகின்றன. உலக மகளிர் தினம், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், கண்டின் தினம், சுகாதார தினம், திருடர்கள் தினம், காதலர் தினம், இன்னும் பல. ஆனால், உலக மேதினம் என்ற ஒரு தினம் இன்னும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மே தினம் வலுப்பட்டால் முதலாளிகள் இனம் சுரண்டிக் கொண்டிருக்க முடியாது. அதனை அதிபர்களும் பிரதமர்களும் அனுமதிப்பதற்காகவா அவர்கள் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்?

மலேசியாவில் மேதின எதிர்ப்பு


மே தினத்தை, மே மாதம் முதல் தேதியை, ஏற்க மறுத்தவர்களில் மலேசிய அரசியல் தலைவர்களுக்கும் சிறப்பான இடமுண்டு.


 

நாட்டின் பெரும் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படும் டத்தோ சர் ஓன் பின் ஜாபார் கூடவே இருந்து காலை வாரிவிட்டவர். மலேசியத் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நெருங்கிய நண்பராகக் காட்டிக் கொண்ட டத்தோ ஓன் பின் ஜாபார் நாடாளுமன்றத்தில் வி.டேவிட் கொணர்ந்த மேதின தீர்மானத்திற்கு எதிராக வாக் களித்தார். மக்களின் தலைவர்களான துங்கு அப்துல் ரஹ்மானும் துன் அப்துல் ரசாக்கும் மேதின தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். மேதினம் கம்யூனிச தினம் என்று வர்ணம் பூசினார்கள். ஆனால், சீனாவிற்கு ஓடி சீனாவின் முதல்தர கம்யூனிச பயங்கரவாதியான மாசே துங்ஙின் கையைப் பிடித்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் குலுக்கி, படமெடுத்து மலேசிய நாட்டின் மூலைமுடுக்களிலெல்லாம் ஒட்டி வாக்குகள் சேகரித்தவர்களும் இவர்கள்தாம்.


இன்று எட்டுமணி அல்லது அதற்கும் குறைவாக வேலை செய்யும் ஒவ்வொருவரும் இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து இந்த எட்டுமணி நேர வேலை என்ற உரிமையைப் போராடிப்பெற்ற உலகத் தொழிலாளர் இனத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். இந்த உரிமையைத் தினந்தோறும் அனுபவிக்கும் பிரதமர்களும், அதிபர்களும், நீதிபதிகளும், முப்படைத்தலைவர்களும், தொழிலதிபர்களும் மற்ற அனைவரும் தொழிலாளர்களைத் தொடர்ந்து சுரண்டுவது நன்றிக் கெட்ட செயலாகும். தொழிலாளர் உலகம் அவர்களை என்றாவது ஒருநாள் தண்டிக்கும்; தண்டிக்க வேண்டும்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலாளர் தினம் என்றொரு நாளை ஏற்றுக் கொள்ள அரசு முன்வந்தது. ஆனால் அந்நாள் மே மாதம் முதல் தேதியாக இருக்கக்கூடாது. வேறு எந்தத் தேதியாகவும் இருக்கலாம். இதனை வலியுறுத்திய பெரும் தலைவர்களில் மஇகா தலைவர்களான கே.எல். தேவாசரும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகமும் அடங்குவர்.


மலேசியத் தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களும் இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டனர். இறுதியில், மலேசியத் தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர். மே மாதம் முதல் தேதி மேதினமாக மலேசிய அரசு ஏற்றுக் கொண்டது. 1973ஆம் ஆண்டில் மேதினம் அமுலுக்கு வந்தது.

சுரண்டல் தொடர்கிறது


மேதினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆண்டு தோறும் மே மாதம் ஒன்றாம் தேதி விடுமுறை. ஆனால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது வளர்ந்து கொண்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறையவில்லை. இந்நிலை 1870களில் அமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் “எட்டுமணி நேர வேலை" கோரிக்கையை ஏற்று இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்பானது. இந்நாட்டிலும் “எட்டுமணி நேர வேலை" என்று சட்டத்தில் இருக்கிறது. அதனை அமுல்படுத்துவதற்குத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது.


இன்று நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டி ருக்கிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பாலே வளர்த்து ருசி கண்டுபோன இந்நாடு இன்று அதிக அளவிலான வெளிநாட்டு மலிவுத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. இவர்களின் வரவால் நாட்டின் சம்பள உயர்வு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று பெருமையுடன் கூறினார் அன்றைய மனிதவள அமைச்சர் டத்தோ லிம் ஆ லெக்.


இலட்சக்கணக்காண சட்டவிரோத இந்தோனேசியத் தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக இங்கு இருப்பதற்கு அரசியல் நோக்கம் ஒன்று. மற்றொன்று முதலாளிகளின் தேவையைப் பூர்த்திசெய்வது. அதாவது, குறைந்த விலையில் நீண்ட நேர உழைப்பு, இந்தோனேசியத் தொழிலாளர்களின் உழைப்பு, மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உழைப்பு, இந்நாட்டு முதலாளிகளுக்குப் பெருமளவில் தேவைப்படுகிறது. அவ்வாறான தேவை இல்லை என்றால் அவர்கள் ஏன் இலட்சக்கணக்கில் சட்டத்திற்குப் புறம்பாக இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்?


 

இங்கு சக்திவாய்ந்த தரைப் படை, ஆகாயப்படை மற்றும் கடற்படை இருக்கின்றன. கண்ணியத்திற்குப் பெயர்போன, ஊழலுக்கு எதிரான (Anti Rasuah) போலீஸ் படை இருக்கிறது. அதற்கும் மேலாகக் கடமை தவறாத குடிநுழைவுத் துறை இருக்கிறது. அவர்களுக்குப் பக்கபலமாக அடித்து நொறுக்கி கைது செய்வதற்கு ரேலா படை இருக்கிறது. அரசின் கண்ணும் காதுமான ஸ்பெஷல் பிராஞ்ச் இருக்கிறது. இவற்றிக்கெல்லாம் மேலாக ஊழலற்ற அரசு இருக்கிறது. இத்தனை அரண்களையும் தாண்டி எப்படி இலட்சக் கணக்கான இந்தோனேசியத் தொழிலாளர்கள் கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்தனர்? அவர்கள் என்ன விக்ரமாதித்தர்களா கூடுவிட்டுக் கூடு பாய்வதற்கு? அல்லது அட்டமா சித்தர்களா இங்கும் அங்கும் எங்கும் ஒரே நேரத்தில் இருப்பதற்கு?


இந்தோனேசியர்களைப் போலவே தாய்லாந்து, மியன்மார், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான மலிவு தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வந்து ஊதியத்திற்காகத் தங்களது உழைப்பை விற்கிறார்கள். பெரும்பாலானோர் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனில் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருந்த சூழ்நிலை இங்கு இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அமுல்படுத்தப்படுகிறது.


இந்நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமே குறைவானது. அதைவிட மிகக் குறைவான ஊதியம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அதுவும் முறையாக ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படுவதில்லை. மாதக்கணக்கில் ஊதியம் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்கள் ஏராளம். அத்தொழிலாளர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள், தங்குவதற்கு வீட்டு வசதிகள், இபிஎப் மற்றும் சொக்சோ உரிமைகள் கிடையாது. அத்தொழிலாளர்களின் உழைப்பை அபகரிப்பதோடல்லாமல் அவர்களிட மிருந்து “லெவி" வசூலிக்கப்படுகிறது. அவர்களது “பாஸ்போர்ட்டை" பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள்.  வேறு பல சக்திகள் அவர்களிடமிருந்து மாதந்தோறும் தவறாமல் வசூல் செய்கிறார்கள். பல வழிகளில் நசுக்கப்படும், அல்லது சுரண்டப்படும் அத்தொழிலாளர்களில் சிலர் திருப்பி அடிக்கிறார்கள்; கொள்ளை அடிக்கிறார்கள்; கொலைகளும் நடக்கின்றன. எல்லா ஏழை எளியவர்களும் எல்லாக் காலத்திலும் அடியை அதிரசமாகவும் குத்தைக் கொழுக்கட்டையாகவும் ஏற்றுக் கொள்வார்களா என்ன?


இந்நாட்டிற்கு வேலை செய்ய வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இந்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் சமமாக நடத்தவேண்டிய கடப்பாடு இந்நாட்டு அரசிற்கு உண்டு. மலேசியா உலகத் தொழிலாளர் மன்றத்தின் (International Labour Organisation) உறுப்பினர். 1970ஆம் ஆண்டில் அம்மன்றத்தின் தலைவராக இருந்தவர் மலேசியத் தொழிலாளர் அமைச்சர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்.


வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும்; அவர்களின் உரிமைகள் என்னென்ன?; அவர்களை வேலைக்கு அமர்த்தும் நாடுகளின் கடமைகள் என்னென்ன போன்றவற்றை வரையறுக்கும் 26 பக்கங்களைக் கொண்ட இரு கோட்பாடுகளை (ILO Convention No.97 and Recommendation No.86) உலகத் தொழிலாளர் மன்றம் உருவாக்கியுள்ளது.


அக்கோட்பாடுகளின்படி வெளிநாட்டுத் தொழிலாளர் களுக்கு அவர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். எவ்விதமான மத, இன வேறுபாடுகளும் காட்டப்படக்கூடாது. தொழிற்சங்கங்களில் உறுப்பியம் பெறுவதற்கும் மற்றும் தொழிற்சங்கம் - முதலாளிகளுக்கிடையிலான கூட்டுஒப்பந்தத்தின் பலன்களை அனுபவிப்பதற்கும் உரிமைகள் இருக்கவேண்டும் என்று அக்கோட்பாடுகளின் விதிகள் வரையறுக்கின்றன. அவற்றில் ஒன்று (ILO Convevtion No.97, Article 6):

“1. Each Member for which this Conven tion is in force undertakes to apply, without discrimi nation in respect of nationality, race, religion or sex,to immigrants lawfully within its territory, treatment no less favourable than that which it applies to its own nationals in respect of the following matters:

a) in so far as such matters are regulated by law or regulations, or are subject to the control of administrative authorities -
I.  remuneration, including family allow ances where these form part of remuneration, hours of work, overtime arrangements, holidays with pay, 
restrictions on home work, minimum age for employment, apprenticeship and training, women’s work and the work of young persons;
II. membership of trade unions and enjoy ment of the benefits of collective bargaining;
III. accommodation;
b) social security (that is to say, legal provision in respect of employment in jury, maternity, sickness, invalidity, old age, death, unemployment
and family responsibilities, and any other con tingency..."

நாகரீகமற்ற காட்டுமிராண்டிச் செயல்கள்


உலகத் தொழிலாளர்கள் மன்றத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக மட்டுமல்ல மனித நாகரிகத்திற்கு முரண்பட்ட முறையில் இங்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நடத்தப்படுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலுள்ள கோங்கோ (CONGO) நாட்டில் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த ரப்பர் தோட்ட முதலாளிகள் அவர்களின் தோட்டங்களில் வேலைசெய்த கோங்கோ தொழிலாளர்கள் போதுமான ரப்பர் பால் கொண்டு வராததால் அவர்கள் கொண்டு வந்த ரப்பர் பாலை அவர்களே குடிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர். அத்தொழிலாளர்களின் உள்ளங்கைகளும் வெட்டப்பட்டன. படத்தைப் பாருங்கள்!

 


ஆப்பிரிக்காவைக் கொள்ளையடித்த பெல்ஜியர்களுக்கு மலாயாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் இளைத்தவர்களா? அவர்களும் இங்குள்ள தொழிலாளர்களைத் துன்புறுத்தினார்கள், சுட்டுக் கொன்றார்கள்; தூக்கிலிட்டார்கள்.


சுதந்தர மலேசிய மக்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு இளைத்தவர்களா? வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சுரண்டுவதில் மலேசியர்கள் ஆங்கிலேயர்களையும் மிஞ்சியவர்களாகிவிட்டனர். குறிப்பாக, இந்திய வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவது, அவர்களின் பணத்தைப் பறிப்பது, அவர்களை ஏளனம் செல்வது, மற்றும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவது சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகளாகிக் கொண்டிருக்கின்றன, இந்நாட்டில்.மலேசியர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் காட்டும் பரிவும், பாசமும், மனித நேயமும், மரியாதையும் உலகிற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது என்று கூறத்தான் வேண்டும்! மலேசியா உலகிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது என்று இந்நாட்டுத் தலைவர்கள் இருபத்து நான்கு மணிநேரமும் கரைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில், 2006ஆம் ஆண்டில், மார்ச் மாதத்தில், ஏமாற்றப்பட்டு, சுரண்டப்பட்டு, அனாதைகளைப் போல் வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல், இந்தியத் தூதரகத்தின் முன்பு காய்ந்து கருவாடாகிக் கொண்டிருந்தனர் இந்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அத்தொழிலாளர்களின் உழைப்பால் பலன்கள் பல பெறும் ரேலா படையினரால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; பலத்த காயங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். சந்திரன் அடைக்கலம் என்ற வெளிநாட்டு இந்தியத் தொழிலாளரை ரேலா படையினர் அடித்து நொறுக்கியதன் விளைவாக அவரது உடலையும் எலும்புகளையும் புனரமைப்புச் செய்வதற்கு 25,000 வெள்ளிக்குமேல் தேவைப்படும் என்று மலேசிய ஆளுங்கட்சிக்காரர்களுக்குச் சொந்தமான தினசரியில் செய்தி வெளியாகியிருக்கிறது. இக்கொடுமைகள் குறித்துப் புகார்களும் செய்யப்பட்டுள்ளன.


சாதனைப்படைப்பதில் உலக முன்னணி நாடென்று சதா பேசப்படும் மலேசியா, ரேலா படையினரால் தாக்கப்பட்ட வெளிநாட்டு இந்தியத் தொழிலாளர்களை எவ்வித ஆரவாரமுமின்றி சில நாள்களில் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும், மிக்க மரியாதையுடன், காலணிகள் வாங்கிக்கொடுத்து, பத்திரமாக கைவிலங்கிடப்பட்டு, குற்றவாளிகளைப்போல் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். சிகாகோ சம்பவங்களுக்கும், கோங்கோ பால் வெட்டுத் தொழிலாளர்களின் உள்ளங்கைகள் வெட்டப்பட்டதிற்கும், மலேசியாவில் இந்தியத் தூதரகத்தின் முன் இந்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா? 1886-2006 ஆம் ஆண்டுகளுக்கிடையில் 120 ஆண்டுகள் கடந்து விட்டன. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறவர்கள் புத்தியில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கிறதா?

நன்றிக்கடன் யாருக்கு?


தங்களது சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு ஏற்படும் பாதக விளைவுகளே அதிகம், அவர்கள் பல கோடி வெள்ளிகளைத் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள், என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.


அன்று, சீனா மற்றும் இந்தியத் தொழிலாளர்கள் இங்குக் கொண்டு வரப்படவில்லை என்றால் ரப்பர் மரமும் வளர்ந்திருக்காது, ஈயமும் மண்ணிலிருந்து வெளியாகியிருக்காது. உயிர் பிழைத்திருப்பதற்குத் தேவையான சிலவற்றை மட்டும் வாங்குவதற்குக்கூட போதுமானதற்ற ஊதியத்திற்கு (Subsistance Wage) சீன, இந்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உழைத்ததால் இந்த நாடும், பிரிட்டனும் குபேர நாடுகளாயின. அவர்கள் இல்லை என்றால் இந்த நாடு வளமிக்க காடாகவே இருந்திருக்கும்.


இன்று, இங்குள்ள இலட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லை என்றால் நீண்ட கட்டடங்களைக் காணமுடியாது; வளைந்து போகும் பாலங்களைக் காணமுடியாது; காலை ஆட்டிக்கொண்டு உணவகங்களில் உண்ணும் மலேசியர்களுக்கு உணவு பரிமாற ஆள் இருக்காது. நாடு குப்பை மேடாகத்தான் இருக்கும். ஒரு வெளிநாட்டு மலிவு தொழிலாளிக்கு ஒரு நாள் வேலைக்கு ரி.ம. 20 ஊதியம் கொடுத்தால் அந்த தொழிலாளியின் உழைப்பின் மூலம் நாட்டிற்கு ரி.ம. 200 லாபம் கிடைக்கிறது. அவர்களின் உழைப்பால் இந்த நாடு வளம் பெறுகிறது. உரிமைகள் ஏதுமற்ற இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நன்றி கூற வேண்டியது இந்நாட்டின் கடமை. அவர்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டியது இந்நாட்டுத் தொழிற்சங்கங்களின் கடமையும் கூட.

இந்த உலகத்தில் தான் இருக்கிறார்களா?


பெட்ரோல் விலை ஏற்றத்தினால் பொருள்களின் விலை ஏற்றம் கண்டுள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் தொழிலாளர்களே. முறையாக நாணயத்தைக் கையாண்டிருந்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று கூறியிருக்கிறார், முன்னாள் பிரதமர் துன் மகாதீர். அவர் முன்னாள் ஆகிவிட்டதால் அவர் பேச்சு எடுபடாது. ஆனால், அவரது உரிமையை அவர் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. “தனிமனிதனாக கருத்துகள் கூற எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நான் எனது கருத்துகளை சுதந்தரமாக வெளியிடக்கூடாது என்று யாரும் தடைவிதிக்க முடியாது" என்று உரிமைப் பிரகடனம் செய்துள்ளார் துன் மகாதீர். அதே உரிமை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் உண்டு என்பதை யாரும் கனவில்கூட மறந்து விடக்கூடாது.

 


ரி.ம. 350,000 மதிப்புள்ள நகைகளையும், ரொக்கத்தையும் வீட்டில் வைத்திருக்கும் அமைச்சர்களுக்கு 30 காசு விலையேற்றம் ஒன்றும் பெரிதல்ல. சாதாரணத் தொழிலாளர்களுக்கு இது வெறும் ஒரு பொருளுக்கான 30 காசு விலை ஏற்றம் அல்ல. ஆயிரக்கணக்கான ஒவ்வொரு பொருளுக்கும் விலையை ஏற்றும் அடிப்படை விலை ஏற்றம் இந்த 30 காசு.


தொழிலாளர்களின் சார்பில் களம் இறங்க வேண்டியது தொழிற்சங்கங்களின் கடமை. அவ்வாறு ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (MTUC) அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. விநோதமான, வரலாற்றிக்கு முரண்பாடான வேண்டுகோள் அது. “எண்ணெய் விலை லிட்டர் ஒன்றுக்கு முப்பது காசு உயர்வு கண்டுள்ள காரணத்தால் ஊழியர்களுக்குக் கோலா எனப்படும் தொழிலாளர் வாழ்க்கைச் செலவின அலவன்சை வழங்கும்படித் தனியார் துறையினரை அரசாங்கம் பணிக்க வேண்டும்." இதுதான் மலேசியத் தொழிற்சங்கக் காங்கரசின் கோரிக்கை. இந்த அமைப்பின் 56 ஆண்டுக்கால வரலாற்றில் அரசாங்கம் தொழிற்சங்க அமைப்பின் கோரிக்கையை ஏற்றுத் தனியார் துறையைப் பணித்த சம்பவம் நடந்ததில்லை. தனியார் துறைதான் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று பணிக்கும். தொழிலுறவுச் சட்டம் 1971, விதி 13(3) இதற்கு ஓர் உதாரணம் (Section 13(3) of the Industrial Relations Act 1971.)


அரசாங்கம் முதலாளிகளின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதைத் தங்களின் முதல் கடமையாகக் கொண்டுள்ளது 1776 ஆம் ஆண்டிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ் அல்லர். அவர் பாவம், ஏழை. அதனை அறுதியிட்டுக் கூறியவர் முதலாளித்துவத்தின் கண்கண்ட கடவுள் பேராசிரியர் ஆடம் சிமித் என்ற அறிஞர். 230 ஆண்டுகளுக்கு முன் அவர் கூறினார், “Whenever the legislature attempts to regulate the differences between masters and their workmen, its counsellors are always the masters." மயிலே, மயிலே, இறகு கொடு என்றால், கிடைக்காது. 1970ஆம் ஆண்டில் மலேசியத் தொழிலாளர் அமைச்சரான டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தை உலகத் தொழிலாளர் மன்றத்தின் தலைவராக்கி அதற்கு நன்றிக்கடனாக மலேசியத் தொழிலாளர் சட்டங்களுக்குத் தான் விரும்பிய திருத்தங்களை டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரைத் தலைவராக்கி ஏமாந்து போனதை மலேசிய தொழிற்சங்கக் காங்கரசின் தலைவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து Ī