சமுதாய
மறுமலர்ச்சிக்குப் பாடுபடுங்கள்
பத்துமலை தலைவர்
முருகன் இறங்கி வந்து பேசுகிறார்
தமிழினி
நான்தான் முருகன்
பேசுகிறேன்...
“எந்த முருகன் பேசுவது" என்று நீங்கள் கேட்பது நன்றாகவே எனக்குக்
கேட்கிறது.
உங்கள் பாட்டனான,
தொன்மத்தின் ஊற்றான அதே பத்துமலை முருகன்தான் பேசுகிறேன்.
இது தைப்பூச காலமில்லையே...
மறந்து விட்டீர்களா என்னை?
கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்...
எனது பழம்பெருமைகளைச், சிறப்புகளைக் கருத்தில் கொண்டு உங்கள்
முன்னோர் பத்துமலை திருத்தளத்தை உருவாக்கினர்.
நானும் கொஞ்ச காலம் அங்கே அமைதியாக இருந்தேன்...
இன்று என் நிலை...

வெறும் கல்லென்று
என்னை நினைத்ததனால் வந்த விளைவுதான் இது.
ஆண்டுக்கொரு முறை, எனக்கென்று தைப்பூசத் திருவிழாவை என் தளத்திலே
எனக்காகச் செய்கின்றீர்கள்.....
மகிழ்ச்சியடைகிறேன்....
உங்கள் அன்பை மெச்சுகிறேன்...
தைப்பூசத்தில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே நன்கு தெரியும்;
அதைப்பற்றி நான் இங்குப் பேச வரவில்லை. சரி, அதைவிடுவோம்;
எல்லாம்
என் தலையெழுத்து அப்படி.
பல ஆண்டுகளாக என்னை வைத்து நிருவகித்து வரும் மாரியம்மன் கோவில்
நிருவாகத்தினர் நான்கு கல்விக் கூடங்களை வழி நடத்தி வந்தனர்.
உங்களுக்கு இந்த செய்தி மறந்து போயிருக்கலாம்....
நடந்து முடிந்தது,
நடந்து கொண்டிருப்பது, நடக்கப் போவது அனைத்தும் நான் அறிவேன்!
நான்
எதையும் மறக்க மாட்டேன்...
அப்பர் தமிழ்ப்பள்ளி, காந்தி தமிழ்ப்பள்ளி, பத்துமலை தமிழ்ப்பள்ளி,
தொழிற்பயிற்சிக் கல்லூரி என நான்கு கல்விக் கூடங்களை நிர்வகித்து
வந்தனர்.
இன்று காந்தி தமிழ்ப்பள்ளியும், தொழிற்பயிற்சி கல்லூரியும் இருந்த
இடம் தெரியாமல், காணாமல் போய்விட்டன; இதைப்பற்றி யாரும்
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை;
ஆனால் நான் கண்ணீர் வடித்தேன்..
நான் அழுது என்ன செய்வது?
என்னால் கூட இவ்விரு பள்ளிகளையும் காப்பாற்ற முடியவில்லையே...
“போனால் போகட்டும் போடா" என்று மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
இரண்டு போனால் என்ன? இன்னும் இரண்டு இருக்கிறதே? அதைச் சிறப்பாகக்
காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தேன்...என்
நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் மிச்சம்...
100 ஆண்டுக்கால பழமை வாய்ந்த அப்பர் தமிழ்ப்பள்ளி இன்று இருக்கும்
நிலையைப் பார்த்தால் மனம் பற்றி எரிகிறது; மனம் குமுறி அழ வேண்டும்
போல் இருக்கின்றது.
மழை நீர் ஒழுகி கூரையும் தரையும் மிகவும் மோசமான நிலையில்
இருக்கின்றன.....
நாற்காலி மேசைகள் பற்றாக்குறை...
இருக்கின்ற மேசை நாற்காலிகளும் பழுதடைந்த நிலையில் பார்க்கப்
பரிதாபமாய்க் காணப்படுகின்றன...
இந்தப் பள்ளிக்கு ஏன் இந்த நிலை?
இதைக் காப்பாற்றுவதற்கு ஏன் யாரும் முன்வரவில்லை?
இப்பள்ளியை அமைக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள்? அதற்காக எவ்வளவு
பொருள், பணச்செலவு செய்திருப்பீர்கள்? இதற்கு முன் இந்தப்
பள்ளிகளைக் காப்பாற்றி வந்த கோவில் நிர்வாகம் எங்கே போனது?
நான் இருக்கும் பத்துமலை திருத்தலத்தை மிகப் பெரும் சுற்றுலாத்
தளமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பணமும் நேரமும் இருக்கிறது...
ஆனால் அழிந்து வரும் அப்பர் தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்ற யாரும் முன்
வரவில்லையே...?
என் அருகிலேயே இருக்கின்ற பத்துமலை தமிழ்ப்பள்ளியும் முறையாக
இயங்குகிறதா என்பதில் கேள்விக்குறியே? மலேசியாவின் அனைத்துத்
தமிழ்ப்பள்ளிகளுக்கும் எடுத்துக்காட்டாகவும் சிறப்பாகவும் திகழ
வேண்டிய பத்துமலை தமிழ்ப்பள்ளி இன்று மிகச் சாதாரண நிலையிலேயே
இருந்து வெறும் கவனக் குழந்தையாக மாறி வருகிறது.
இந்த இரு தமிழ்ப்பள்ளிகளையும் கூட உங்களால் தூர நோக்குப் பள்ளிகள்
தரத்திற்கு வளர்த்தெடுக்க முடியவில்லையே?
இலட்சக்கணக்கான வெள்ளி செலவு செய்து அடிக் கணக்கில் எனக்குச் சிலை
எழுப்பி இருக்கின்றீர்கள். எனக்காகச் செலவிடும் இந்தப் பணத்தில்
நீங்கள் ஒரு தமிழ்ப்பள்ளியை எழுப்பி இருந்தால் நான் இன்னும்
மகிழ்ந்திருப்பேன்.
மலேசியாவில் மோசமான நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுத்து அதன்
வளர்ச்சிக்குப் பாடுபட்டிருந்தால் பெருமையடைந்திருப்பேன்!
“மக்கள் சேவைதான் மகேசன் சேவை" என்பார்கள். நம் மக்களுக்கு நீங்கள்
செய்யும் பணிதான் எனக்குச் செய்யும் உண்மையான சேவையாக நான்
மதிக்கிறேன்.
அதை விடுத்து, அடிக்கணக்கில் சிலையும், ஆண்டுக்கொரு திருவிழாவும்
உங்கள் பக்தியை வியாபாரமாக்கி வருவதைக் கண்டு வருந்துகிறேன்;
வேதனைப் படுகிறேன்.
இன்னொரு செய்தியும் சொல்லித்தான் ஆக வேண்டும், பத்துமலை திருத்தல
அடிவாரத்தில் கடைகளை அமைத்திருக்கிறீர்கள்; அங்கும் ஏழை
மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வாய்ப்பில்லை;
பணக்காரர்களுக்குத்தானே உங்கள் பாதையைத் திறந்து
விட்டிருக்கிறீர்கள். உண்டியலில் பணம் போடுகின்றவர் பணக்காரர்கள்தான்
என்று எண்ணிவிட வேண்டா. ஏழைகளின் பணமும் உண்டியல்களை நிரப்புகின்றது:
நினைவிருக்கட்டும்.
அன்பான பக்தர்களே,
சமுதாய வளர்ச்சிக்கும், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும்
நீங்கள் ஆற்றும் உண்மையான சேவையே எனக்காற்றும் சேவையாக நான்
கொள்வேன்... இவ்வளவு சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக
இருந்துவிட வேண்டா. நமது சமுதாய மறுமலர்ச்சிக்காகப் பாடுபட
பாருங்கள்...! உங்களின் நற்பணிகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைக்
கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன்
மீண்டும் வருவேன்.