உலக விடுதலை இயக்கங்களின்
ஏடலர் பேராசிரியர் பி. இராமசாமி
குத்துகின்ற வெள்ளைத்
தாடியும், தங்க விளிம்பு கொண்ட பெரிய கண்ணாடியிலிருந்து எட்டிப்
பார்க்கும் ஊடுருவிய ஆழ்ந்த பார்வைக்கும் உரியவர் பேராசிரியர் பி.
இராமசாமி. ஒரு பல்கலைக்கழக விரிவுரையாள ருக்குரிய அத்தனை
தகுதிகளையும் இயல்பாய்ப் பெற்றவர்.

56 ஆண்டுகளுக்கு முன்பு
பேராக் மாநிலத்தில் பிறந்து, மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தில்
அரசியல் துறையில் (Political Science) விரிவுரையாளராகத் தமது
பணியைத் தொடங்கினார்.
இதுவரை நான்கு
புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தொழிலாளர்கள், உலகமயமாதல், இன
வேற்றுமை, பல இன மக்கள் கொண்ட சமுதாயத்தில் நாட்டுப்பற்றும்
போராட்டங்களும் தீர்மானங்களும் எனப் பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
எழுதியுள்ளார்.
துடிப்பும் உணர்வும் கொண்ட மலேசியத் இந்திய மரபினத் தமிழரான இவர்
இன்று ஜெர்மனியிலுள்ள காசல் பல்கலைக்கழத்தில் (University of Kasel)
பணிபுரிந்தாலும் இன்றும் தமது துறையை விட்டு அவர் வெளியேறி
விடவில்லை.
தர்க்கத்திற்கு இடம் அளிக்கின்ற, எதிர்த்தாக்கத்திற்குப்
பயப்படாதவராக, திறனாய்வுக்கு வெட்கப்படாதவராக இவர் விளங்குகின்றார்.
பேராசிரியர் பி. இராமசாமி மலேசிய அரசாங்கத்தைப் பற்றி, குறிப்பாக
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அவர்களைப் பற்றி - அவரின் அநீதிகளைப்
பற்றி அதற்குத் தன்னையே எடுத்துக் காட்டாகக் காட்டி மனம்விட்டுத்
திறனாய்வு செய்துள்ளார்.
25 ஆண்டுகள் பணியாற்றி
இருப்பினும், மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் பல படிநிலைகளைக்
கடந்து செல்வதில் தமக்கு பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டதாக
கூறுகின்றார். தம் முன்னாள் மாணவர் ஒருவர் தான் பணியாற்றிய துறையின்
தலைமைப் பொறுப்பேற்ற நிலையையும் நேரில் கண்டவர்.
இவரின் இந்த மாறாத நிலைப்பாடு என்பது பல்கலைக்கழகத்திற்குச் சற்று
அதிகப்படியாகப் பட்டதால் 2005ஆம் மே மாதம் பல்கலைக் கழகத்திலிருந்து
வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர் ஐக்கிய ஜனநாயகக் செயல் கட்சியில்
(Democrative Action Party) அனைத்துலகப் பொறுப்பாளராக
அமர்த்தப்பட்டார்.
இவரது ஈடுபாடும், போராட்ட உணர்வும், தீர்மானமும், அரசியல்
போராட்டமும் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆச்சே
போராளிகளிடம் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அமைதியை நோக்கிய
போராட்டவாதிகளுக்கு உதவ இவரும் முன்வந்து பணியாற்றுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமானவர்.
2003-ஆம் ஆண்டு
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான இலங்கை வட கிழக்கில்
இடைக்கால நிருவாக சபையின் திட்டவரைவை உருவாக்கியவர்களில்
குறப்பிடத்தக்கவர் முனைவர் பி. ராமசாமி.
மேலும் இவர் ஆச்சே சுதந்தர இயக்கத்தின் (GAM – Free Aceh Movement)
ஆலோசகராகவும் செயல்பட்டு வருகின்றார். அண்மையில் இந்தோனேசிய
அரசாங்கத்துடன் எல்சிங்கி (Helsinki) என்னும் இடத்தில் ஏழு மாத கால
நீண்ட பேச்சுவார்த்தையில் இவரும் பங்குகொண்டுள்ளார்.
இப்பேச்சுவார்த்தை 2005ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் அறிவிக்கப்பட்டதுபோல்,
ஆச்சேயின் அமைதிக்கு வழி அமைத்திருக்கிறது.
தன்னடக்கம் கொண்ட பேராசிரியர் ராமசாமி அவர்கள், “தான் அனைத்துலக
அரசியல் நாடகத்தில் ஈடுபட்டது ஒரு விபத்து" என்றே கூறுகின்றார்.
1990 ஆம் ஆண்டு முதல், பேராசிரியர் இராமசாமி அவர்கள் சிறீலங்கா
அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து தமது கடும் கண்டன அறிக்கைகளை
வெளியிட்டு வந்திருக்கிறார்.
பல ஆண்டு காலமாகவே, புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் இவரைத் தொடர்பு
கொண்டுள்ளனர்.
“தொடக்கத்தில்
நாங்கள் தொலைப்பேசியில் மட்டுமே உரையாடி வந்தோம். சிறீலங்காவில்
நடப்புச் சூழ்நிலைப்பற்றியும் அது தொடர்பான என்னுடைய பார்வையையும்
கருத்துகளையும் பகிர்ந்து கொள்வோம். நான் இலங்கைக்கு வர வேண்டும்
என்பது அவர்களின் விருப்பம். ஆனால், போர்ச் சூழ்நிலையால் அப்போது
வாய்ப்பு கிடைக்கவில்லை" என்றார் பேராசிரியர் பி.இராமசாமி.
ஆனால், 2002-ஆம் ஆண்டு அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பிறகு
பேராசிரியர் பி.இராமசாமி நேரடியாகச் சென்று நிலைமையைக் கண்டறிந்து
வர இலங்கை புறப்பட்டார்.
“புலிகள் இயக்கத்தின்
வேண்டுகோளின்படி
தமிழீழத்தில் தங்கியிருந்து 10 நாள்கள் பல தரப்பட்ட அரசியல் அமைப்புகளைப்
பற்றி வகுப்புகள் நடத்தினேன். இந்த வகுப்பில்
15க்கும் மேற்பட்ட மூத்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில்
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு. சு.தமிழ்ச்
செல்வனும் கலந்துகொண்டார்", எனத் தமது தொடக்கக் கால பணிகளை நினைவு
கூர்கிறார்.
பேராசிரியர் பி.இராமசாமி, விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை ஏழு
முறை சந்தித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் விரிவாக்கத்தில்
ஈடுபாடு கொண்டவரான இவரை சிறீலங்கா அரசாங்கம் தனது அரசியல் துறை
அமைச்சரைச் சந்திக்க அழைத்திருந்தது. ஆனால் பேராசிரியர்
அவ்வழைப்பினை ஏற்க மறுத்துவிட்டார்.
இவரின் 48 வயது மனைவியும் மூன்று பிள்ளைகளும் இவரது பாதுகாப்பின்
மேல் பயம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், பேராசிரியர்
பி.இராமசாமி இதைப் பற்றி கவலைப்படுபவராக இல்லை.
மேலும் அவர் கூறுகையில் ஆச்சே சுதந்தர இயக்கத்தின் தலைவர்களும்
நேர்மையானவர்கள் என்கிறார்.
ஆறு சுற்று அமைதிப் பேச்சுகளில் இரண்டு சுற்றுகளில் பங்கேற்றது
முப்பதாண்டுக் கால ஆச்சே மக்களின் சண்டை சச்சரவிற்கு ஒரு தீர்வினைக்
கொண்டு வந்திருக்கிறது. ஒரே இடத்தில் கொண்டு வந்து நிறுத்துகிற
நிலையினையே இப்பேச்சுவார்த்தை ஏற்படுத்தியதால் இதில் மன
அழுத்தத்தைவிட ஏமாற்றமே அதிகம் இருந்ததாக இவர் கூறுகிறார்.
“ஒவ்வொரு சுற்றுப் பேச்சுவார்த்தையும் காலை ஒன்பது மணியிலிருந்து
மாலை ஐந்து மணிவரை, ஒரு வாரத்திற்கு நடைபெற்றது. ஆச்சேயில் சூழ்நிலை
மிக சிக்கலான நிலையில் இருந்ததால் இரு தரப்பினரும் தொடர்ந்து
முன்னேறுவது எப்படி என்று தெரியாமலே இருந்தனர்", என்றார்
பேராசிரியர்.
இரு தரப்பினரும் சுனாமி ஆழிப்பேரலையால் ஆச்சேவுக்கு ஏற்பட்ட அழிவை
உணர்ந்தவர்களாக அழிந்துபோன ஆச்சேயை மீள்கட்டமைக்கும் கடமைக்கு
உடனடித் தீர்மானம் எடுக்க வேண்டியவர்களாக இருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசியல் பாதுகாப்புடன் மூன்றாம் தரப்பாக
இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது, உடனடித் தீர்வுக்கு வழி
வகுத்தது. பிறகு திரு. சுசிலோ பம்பாங் ஓயோனோ (Susilo Bambang
Hoyono) இந்தோனேசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பேராசிரியர் பி.இராமசாமி தொடர்ந்து கூறுகையில், துணை அதிபர் யூசோப்
கலாவுடன் (Yusof Kalla) இணைந்து, திரு. சுசிலோ பம்பாங் ஓயோனோ வெற்றி
பெறுவதற்கான வாய்ப்புக் கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஆனால்,
இருவரும் ஒன்றிணைந்து அமைதிக்காகத் தங்களின் உறுதியான
தலைமைத்துவத்தை முன் வைத்து செயலாற்றி வருகின்றனர். இதே வேளையில்,
இந்தோனேசிய போராட்டக் குழுவின் தலைவர்களும் அமைதியை
முன்னெடுப்பவர்களாக, நேர்மையானவர்களாக, விசுவாசமிக்கவர்களாக,
திகழ்கின்றனர்; முறையான அதிகாரப்படியான கல்வியைப் பெறாவிடினும்
சிறந்த பண்பாளர்களாக விளங்குகின்றனர். அவர்கள் வரலாறு, சட்டம்,
அரசியல் அமைப்புப் போன்றவற்றை மிகச் சிறப்பாக வைத்திருக்கின்றனர்.
மேலும் தங்கள் கொள்கையில் மிகத் தெளிவாகவும் இருக்கின்றனர்.
ஆச்சேவில் அமைதிக்கான வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகப்
பேராசிரியர் பி.இராமசாமி கூறுகின்றார். இந்தோனேசியாவில் தன்
நிலையைத் தற்காத்துக் கொள்ள கிளர்ச்சியை உண்டாக்குகிற வாய்ப்புகள்
அல்லது விளையாட்டு காட்டுகிற நிலை ஆகியவை குறைவாகவே இருக்கிறது.
அவர்கள் அப்படிச் செய்தால் அவர்களாகவே ஒரு கட்டத்திற்குள்
தள்ளப்படுவர். ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய அழுத்தமான சூழ்நிலை
அவர்களுக்கு இருக்கிறது.
தேசியவாத அமைப்புகளைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், “நாம்
சிறுபான்மை இனத்தவரின் குறைகளையும் தன்முனைப்பினையும் விளங்கிக்
கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். எடுத்துக்காட்டிற்குச்
சிறீலங்காவில் பெருபான்மையினர் சிறுபான்மை இனத்தினர் மீது கொள்ளும்
தீவிரம், அடக்குமுறையாகக் காணப்படுகிறது. தங்கள் குறைகளைத்
தீர்த்துக் கொள்ள சிறுபான்மையினருக்கு வாய்ப்புகள்
வழங்கப்படுவதில்லை. பெருபான்மையினர் சிறுபான்மையினருக்கு எதிராக
வன்முறையைக் கட்டவிழ்த்து விடும்போது ஆயுதம் தூக்குவதைத் தவிர
அவர்களுக்கு வேறு வழியில்லை", என்கிறார்.
பிரிவினைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தெளிவாய்த்
தெரிகிற ஒரு நிலையை இவர் பின்வருமாறு விளக்குகின்றார்:
“ஐஆர்ஏ (Irish Republican Army IRA) அமைப்பைப் பற்றி நாம்
பேசும்போது அவர்களின் சில நடவடிக்கைகள், திட்டங்கள் நமக்குப்
பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையான நாடு சார்ந்த
போராட்ட இயக்கமாக விளங்குகின்றனர். அல் கய்டா அல்லது ஜமாயா
இஸ்லாமிய (Al Qaeda or Jamaah Islamiah) அமைப்புகள் அப்படியல்ல.
தங்களின் நோக்கத்திற்காக இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும்
என்பதற்காக அப்பாவி உயிர்களைப் பலியாக்குகின்றன", என்கிறார்.
ஆச்சே சுதந்தர இயக்கத்தினர் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள்
இயக்கம் பற்றியும் அவர் விவரிக்கையில் “அவர்கள் ஒன்றிணைந்த, ஒழுக்க
விதிகளைக் கடைப்பிடிக்கின்ற, உணர்வுப்பூர்வமான நோக்கங்களைக்
கொண்டவர்களாக இருக்கின்றனர், அவர்களின் போராட்டங்களுக்கான
உணர்வுகளில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்", என்கிறார்.
அதனால்தான், ஆச்சே சுதந்தர இயக்கத்தினர் மீதும் தமிழீழ
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதும் தான் மிகப்பெரும் மதிப்புக்
கொண்டிருப்பதாகக் கூறிய அவர், “அவர்களின் நோக்கத்தில் எனக்கு எந்த
ஐயமும் இல்லை. என்னுடைய செயல்பாடுகளாலும் அவர்களோடு உறவாடும்
முறைகளினாலும் அவர்கள் என்னை உண்மையான நண்பனாகவே கருதுகின்றனர்"
என்கிறார் பேராசிரியர் பி.இராமசாமி.