“நாட்டுப்பற்றாளர்
நாள் - அன்னைப் பூபதி ஒரு குறியீடு!"
சபேசன்-
மெல்பேர்ண்- ஆஸ்திரேலியா
தமிழீழத் தேசிய எழுச்சியின் “மக்கள்
வடிவமாக" அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை
நாட்டுப் பற்றாளர் நாளாக கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை
பரந்துரை செய்திருந்தது. அன்னை பூபதியின் நினiவு நாளை நாட்டுப்
பற்றாளர் நாளாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ்
மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப்
போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப் பற்றாளர்கள் பேராற்றலாகத்
திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் வெளிப்படுத்துவதே இக்
கட்டுரையின் நோக்கமாகும்.
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த
இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின்
உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது.
அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத்
தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது
பங்களிப்பை வழங்கினார்கள். தமிழீழத் தேசத்திற்கான பங்களிப்புக்களின்
சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர்
அமைந்தது. ‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்"- என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி
பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அமைதி(அகிம்சை) வழியில் உண்ணாவிரதப்
போராட்டத்தை தொடங்கினார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம்
நாள் சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்
அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணா
நோன்புப் போராட்டத்தை
தொடங்கினார்
தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான வேளையைச் சந்தித்த
காலம் அது! இந்திய ராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த
நாளையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது
போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட பகுதி
என்றே சொல்ல வேண்டும் - என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு
பிரபாகரன் அவர்;கள் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் குறித்துக்
கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது. உலகின்
நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒருபுறம் சிங்கள
பௌத்தப் பேரினவாத சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும்
சிறிலங்காவின் இhhணுவம் மறு புறம், இவையிரண்டிற்கும் துணையாக
நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒரு பக்கம் என ஈழத் தமிழினம்
இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது! தேசியத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப்
போராட்ட வரலாற்றில் இருண்ட காலம் அது!
இத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஓர் எளிய
பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை
அமைதி வழியில் தொடங்குவதற்கு எத்துணை நெஞ்சுரமும் ஈக மனப்பான்மையும்
அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப்
பார்க்கின்றோம்.
“எம்மைப் பாதுகாக்க வந்த இந்தியா இன்று சிறிலங்கா இராணுவத்தைக்
காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம்
என்ற உறுதியுடன் நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே. எனது இறப்பை அடுத்தும்,
எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது - என்று அன்னை பூபதி அவர்கள் ஈக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 10-45
மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்தை தொடங்கிய
அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு ஏப்ரல்
மாதம் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 8-45 மணியளவில் கலந்து
பரவியது.
முப்பத்தோறு நீண்ட நாள்கள்!
எந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அன்னை பூபதி அவர்கள்
போராடினாரோ அந்த இராணுவம் இந்திய இராணுவம் பாரிய இழப்புகளுடனும்
அளவிடற்கரிய அவமானத்துடனும் தமிழீழத்தை விட்டு 24-03-1990 அன்று
வெளியேறியது.
திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஓர் எளிய தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான ஈகமும் நாட்டுப்பற்றின்
சிகரமாக அமைந்தன.
அன்னை பூபதியின் ஈகத்தின் முன்னரும் பின்னரும் தமிழீழத்தில்
எத்தனையோ நாட்டுப் பற்றாளர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்றும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாவருடைய நாட்டுப்பற்றும், ஈகமும்
பங்களிப்பும் எந்த ஒரு வகையிலும் குறைவானதல்ல. ஆயினும் அனைத்து
நாட்டுப் பற்றாளர்களின்் ஒரு குறியீடாக அன்னை பூபதி அவர்கள்
விளங்குவது சரியானது என்றே நாம் கருதுகின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது பங்களிப்புக்களை நல்கி
வந்த நல்கி வருகின்ற அனைத்து நாட்டுப்பற்றாளர்களில் தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பு தனித்தன்மையானது. தமது இனத்திற்கு எதிராக
நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் வன்முறைகளுக்கும்
பெண்கள் கொடுக்க கூடிய விலையும் அளப்பரியது. தங்களுடைய
கணவன்மார்களையும், தங்களுடைய புதல்வர்களையும் அவர்கள் களத்தில்
பறிகொடுத்தார்கள். அந்நியப் படைகளின் பாலிய வல்;லுறவுகளுக்கும்
ஆளானார்கள.;; தாங்களும் கொலை செய்யப்பட்டு இறந்தார்கள்.
இவற்றிற்கும் அப்பால் தங்களது குடும்பங்களைப் பாதுகாத்து தமது
நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பினையும் தொடர்ந்து
வந்தார்கள்.
ஒரு போராட்டக் காலத்தில் பெண்ணின் பங்கு கணிசமானது என்பதைப்
போராட்ட வரலாறுகள் இன்றும் உணர்த்தி நிற்கின்றன. போராளிகளுக்கு உணவு
அளிப்பதுவும், உறைவிடம் தந்து உபசரிப்பதுவும் காயம் பட்டவர்களைப்
பேணுவதும் பெண்களின் பங்களிப்பாக இருந்து வருகிறது. தமிழீழ
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பானது
உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தை
பெற்றுள்ளது.
இந்த வகையில் ஒட்டு மொத்தத் தமிழீழப் பெண்களினதும் தமிழர்களினதும்
ஆத்திரத்தினையும் விடுதலை வேட்கையையும் வெளிப்படுத்தும் வகையில்
அன்னை பூபதியின் அமைதிப் போராட்டத்தை நாம் கருத வேண்டும். முன்பே
நாம் சுட்டிக் காட்;டியிருந்தபடி உலகத்தின் நான்காவது பெரிய
இராணுவமான இந்தியப் படைகளின் வன்முறைகளையும் சிங்கள இராணுவத்தின்
நெருக்கடிகளையும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் அடாவடித்தனங்களையும்
ஒருங்கே எதிர் கொண்டு அன்னை பூபதி தனது அமைதிப்; போராட்டத்தை
சாகும்வரை மேற்கொண்டது என்பதானது விடுதலை வேட்கையின் உறுதியின்
உச்சமானதுமாகும்.
ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு
எதிராகவும் உண்ணாநோன்புப் போராட்டம் ஒன்றை நடத்தி உயிர் ஈகம்
செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஓர் எளியக்
குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து தனது நாட்டுக்காக
முன்னெடுத்த உண்ணாநோன்புப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி
அவர்களின் போராட்டம் பல விழுமியங்களை தொட்டு நிற்கின்றது இவர் ஒரு
விடுதலைப் போராளி அல்லர்! விடுதலைப் போராளி என்ற வகையில் தியாகி
திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து
தனது இன்னுயிரை ஈந்திருந்தார். ஆனால் போராளியாக இல்லாத ஒருவர் -
எளிய பெண்மணி - குடும்பத் தலைவி - தன்னைத்தன் மக்களுக்காக
மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும் தன்னைத் தற்கொடையாக்கிய செயல்
ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்.
மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற போராளிகளின்
இலட்சியத்திற்காகத் தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த அன்னை
பூபதியின் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும்,
அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும்.! அந்த வகையில் அன்னை
பூபதியின் நினைவு
நாள் என்பதானது நாட்டுப்பற்றாளர்
நாள் என்று
தமிழீழத் தேசியத் தலைமையினால்
பரந்துரை(பிரகடனம்) செய்யப்பட்டது மிகப் பொருத்தமானதாகும்.
அன்னை பூபதி அவர்கள் தமிழீழ நாட்டு;ப் பற்றாளர்களின் குறியீடாக
அறியப்படுகின்ற இந்த வேளையில நாட்டுப்பற்றாளர்களின்
பேராற்றல் குறித்துச் சில கருத்துகளை முன் வைப்பது இவ்வேளையில்
பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
ஒரு தேசத்தின் நாட்டுப் பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தைத்
தாங்குபவர்களாக இருந்து வருகின்றார்கள். நாட்டுப்பற்றாளர்களை
அழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடுகின்ற
முயற்சியில் அடக்குமுறை அரசுகள் தொடர்ந்தும் செயல்பட்டு
வந்திருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது.
ஈராக்கில் போர்
புரிகின்ற அமெரிக்க இராணுவத்தினருக்குப் போர்த் திரைப்படம் ஒன்றை
அமெரிக்க அரசு திரையிட்டு காட்டியிருப்பதாகக் கடந்த ஆண்டு செய்திகள்
தெரிவித்திருந்தன. இச்சம்பவம் குறித்துச் சற்று ஊன்றிக் கவனித்தால்
புலப்படாத பல செய்திகளை நாம் உற்றறிய முடியும்
இந்தப் போர்த் திரைப்படத்தின் பெயர்
‘Battle of
ALGIERS'
இத்திரைப்படம் ஒரு புதிய திரைப்படமும் அல்ல! ஏறத்தாழ இருபது
ஆண்டுகளுக்கு முன்னால் இத்திரைப்படம் வெளி வந்திருக்க வேண்டும்
என்று எண்ணுகின்றேன். இந்நவீனகாலத்தில் அதாவது போரியல் துறை
மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலகட்டத்தில்
மிகப்பழைய திரைப்படம் ஒன்றை அமெரிக்க அரசு தன்னுடைய
இராணுவத்தினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டிய காரணம் என்ன?
இந்த
‘Battle of
ALGIERS'
என்ற போர்த் திரைப்படம் பிரான்ஸ் நாட்டி;ன் ஆக்கிரமிப்பை எதிர்த்து
அல்ஜீரிய மக்கள் நடத்திய போராட்டத்தை காட்டுகிறது. அல்ஜீரியா சுமார்
நூற்று இருபத்து நான்கு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ
ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. அல்ஜீரியாவின்
தன்னாட்சிக்கான இப்போராட்டத்தை எதிர்த்து மிகக் கொடூரமான முறைகளில்
படுகொலைகளை பிரான்ஸ் கட்டவிழ்த்து விட்டது. அல்ஜீரியாவின்
நாட்டுப்பற்றாளர்கள் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளானார்கள். அல்ஜீரிய மக்களின்
மனவலிமையைக் குலைத்து அவர்களைப் போராட்டத்தில் இருந்து
விலக்குவதற்காகச் எல்லா கொடூரங்களையும் பிரான்ஸ் இராணுவம்
மேற்கொண்டது.
ஆயினும் அல்ஜீரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள். மிகக் கொடிய
வறுமைக்கு
இடையில் கண்ணீரையும் துன்பத்தையும் சுமந்து கொண்டு தமது
விடுதலைக்காக அவர்கள் போராடினார்கள். மிகப் பெரிய அவலங்களையும்
இழப்புகளையும் எதிர்கொண்டார்கள்.
1954ஆம் ஆண்டு தொடக்கம் 1962ஆம் ஆண்டு வரையில் இப்போர் நீடித்தது.
கடைசியில் அல்ஜீரிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று பிரான்ஸ்
வெளியேறியது.
ஆனால் இப் போராட்டத்தை விளக்குகிற திரைப்படத்தை ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவத்தினருக்கு அமெரிக்க அரசு திரையிட்டுக் காட்ட
வேண்டிய அவசியம் என்ன?
ஏனென்றால் இப்போர்த் திரைப்படம் ஒரு மக்;கள் போராட்டத்தை
அடக்குவதற்குரிய கொடிய வழிகளைப் படம் பிடித்துக்
காட்டியிருக்கின்றது. எப்படிப்பட்ட கொடிய வழிகளை பயன்படுத்தி
பிரான்ஸ் இராணுவம் அல்ஜீரிய மக்களை - நாட்டுப்பற்றாளர்களை -
துன்புறுத்திக் கொன்று அவர்களின் மன உறுதியைக் குலைக்கும்
முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதனை இத்திரைப்படம் விளக்கியுள்ளது.
பிரான்ஸ் இராணுவத்தின் இக்கொடிய வழிமுறைகள் ஈற்றில் பலன்
அளிக்காமல் போயிருந்தாலும் அன்று ஒரு போராட்டத்தை அழிப்பதற்கு
எத்தகைய வழி முறைகள் கையாளப்பட்டன என்பதை இத்திரைப்படம் எடுத்துக்
காட்டியுள்ளது.
மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால் அப்
போராட்டத்தைத் தாங்கி நிற்கும் நாட்டுப்பற்றாளர்களை முதலில் நசுக்க
வேண்டும் என்று அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து சிந்தித்தும்
செயல்பட்டும் வருகிறார்கள்.
ஒரு விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள்
நாட்டுப்பற்றாளர்;களே என்பதை வரலாறு சுட்டிக் காட்டி நிற்கி;ன்றது.
இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான் தமிழீழ
நாட்டுப்பற்றாளர்களையும் அவர்தம் அளப்பரிய பணியையும்,
ஈகத்தையும்
நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் விடுதலைப்புலிகள்
எதிர் கொள்ளாத இடர்களை நாட்டுப்பற்றாளர்கள் எதிர்
கொண்டிருக்கின்றார்கள் என்பதை இங்கே அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
போராளிகள் கள நிலைக்கும் போர் முறைகளுக்கும் ஏற்ப இடம் மாறிச்
செல்வார்கள். ஆனால் பொது மக்களாகிய நாட்டுப் பற்றாளர்களோ தமது
வாழ்விடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து ஆக்கிரமிப்புக்கு எதிராகப்
போராடுவார்கள். ஆக்கிரமிப்பின் வன்முறையை எதிர்ப்பதற்குத் தம்மிடம்
படைக்கருவிகள் இல்லாதபோதும் வன்முறைக்கு முகம் கொடுத்து அதனை
உள்வாங்குவார்கள். அதன் காரணமாக உயிரழிவையும், சொத்தழிவையும்
தாங்கியும் கொள்வார்கள். ; தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தைத்
தாங்கி நிற்பார்கள்.
சிறிலங்கா அரசுகளும் அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு உத்திகளைக்
கையாண்டு தமிழீழ நாட்டுப் பற்றாளர்களை அழிக்கவும் அடக்கவும் முயன்று
வருகின்றன. ஆனால் நாட்டுப்பற்றாளர்களின் விடுதலை வேட்கையை அழித்து
விடமுடியாது என்பதைப் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்ந்து
நிலைப்படுத்துகிறது.
இங்கே மேலும் ஒரு மிக முக்கியமான கருத்துகளை நாம்
சுட்டிக்காட்டியாக வேண்டும். அன்னை பூபதி அவர்களின் அமைதி வழியிலான
உண்ணா நோன்பு போராட்டமும் ஈகி திலீபனின் உண்ணா நோன்பு போராட்டமும்
அமைதி வேண்டி நடாத்தப்பட்ட போராட்டங்களாகும்.
மகாத்மா காந்தியின் போதனைகளையும் அகிம்சை வழிப் போராட்டங்களையும்
ஏற்றுக்கொண்ட ஒரு தேசம்தான் இந்தியா! ஆனால் அத்தகைய இந்தியா கூட
அடக்குமுறை என்று வரும்போது அகிம்சையையும் சமாதானத்தையும் தூக்கி
எறிந்து விடுகின்றது என்பதற்கு அன்னை பூபதியும்
ஈகி திலீபனும்
சாட்சிகளாக விளங்குகின்றார்கள். அகிம்சையைப் போதிக்கின்ற இந்தியாவே
இவ்வாறு நடந்து கொள்ளும்போது தொடர்ந்து இரத்தவெறி கொண்டு
அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள்
அமைதியை கடைப்பிடிப்பார்கள் என்று எவராவது இன்றும் நம்புவார்களாக
இருந்தால் அது மடமைத்தனமானதாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை
தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களைச் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் கொலை
செய்து வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘தேசிய எழுச்சியின் மக்கள்
வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.'
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.