மலேசிய விடுதலை
வரலாற்றின் சில பக்கங்கள்
பயங்கரவாதிகள் யார்?
சின் பெங்ஙா அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளா?
ஜீவி காத்தையா
பாகம் 1
சின்
பெங் (Chin Peng) மீண்டும் நாளிதழ்களில் இடம் பெறுகிறார். அவர்
மலாயா பொதுவுடைமைக் கட்சியின் (Malayan Communist Party) பொதுச்
செயலாளராகவும் தலைவரா கவும் இருந்தவர். இக்கட்சியை 1948ல் தடை
செய்யப்பட்டது. இக்கட்சியின் தலைவர்கள் சின் பெங் உட்பட, அதன்
அங்கத்தினர்கள், மற்றும் அக்கட்சி யுடன் சம்பந்தப்பட்ட அனைவரும்
காட்டிற்குள் விரட்டப்பட்டனர்.
சின் பெங் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை 5,000 க்குமேல்
போகாது. இவர்களை எதிர்த்துப் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் 12 ஆண்டுகள்
போர் நடத்தினர். இந்தப் போரில் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட
இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பிரிட்டன், நியூசிலாந்து,
பிஜீ, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.
இவர்களோடு கூர்க்கர்கள், மலாய் ரெஜிமென்ட் இராணுவத்தினர், சரவாக்
ரேன்ஜர்ஸ், சரவாக்கைச் சேர்ந்த டயாக் தலைவேட்டையாடுபவர்களும்
சேர்க்கப்பட்டனர்.
1948 லிருந்து 1960ம் ஆண்டுவரை நடந்த இந்த யுத்தத்தில் பிரிட்டன்
100 அரசு இராணுவ விமானங் களையும் ‘ஹெலிகாப் டர்’களையும் பயன்படுத்தி
25,000 ஆகாயத் தாக்கு தல்களை நடத்தியது, 33,000 டன் குண்டுகளைப்
பொழிந்தது, 100,000 ரோக்கெட்டுகளையும் நாபாம் குண்டுகளையும்
பாய்ச்சியது, மற்றும் ஆயிரக்கணக்கான கேலன் ரசாயணங்களையும் தெளித்தது.
இன்றைய போர்க் குற்றவாளி, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்,
ஈராக்கின் சடாம் உசேனை இவ்வாறான இரசாயண யுத்தத்தில்
ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால் பிரிட்டந்தான்
இரசாயண யுத்தத்தை முதலில் நடத்தியது, அதுவும் மலாயாவில். இத்தனை
தாக்குதல் சக்திகளாலும் சின் பெங்ஙை அழிக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல, இதை ஒரு போர் என்றுகூட அழைக்கவில்லை. போரினால்
ஏற்பட்ட இழப்பிற்கு இன்சூரன்ஸ் கொடுக்க வேண்டியதைத் தவிர்ப்பதற்காக
இந்தப் போரை “அவசரகாலம்” என்று அழைத்தார்கள்.
மலேசிய அரசாங்கத்திற்கும் மலாயா பொதுவுடைமை கட்சிக்கும் இடையில்
1989ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆயுதப் போராட்டம்
ஒரு முடிவிற்கு வந்தது.
சின் பெங்கும் அவர்தம் ஆதர வாளர்களும் இப்போது தாய்லாந்தில்
வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் மலேசியாவிற்குத் திரும்பி
வர விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை
அனுமதிக்க
அரசாங்கம் தயாராக இல்லை. இத்தகைய சூழ்நிலையில், சின் பெங் தன்னையும்
தன் ஆதரவாளர்களையும் இந்நாட்டிற்கு வர அனுமதிக்கும் உத்தரவை
பெறுவதற்காக பினாங்கு உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார்.
இந்த விவகாரம் இன்னும் ஆரம்பக் கட்ட நிலையிலேயே நீதிமன்றத்தில்
இருக்கிறது. சின்பெங் தானே தமது வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க
விரும்புகிறார். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவருக்கு
தேவைப்படுகிறது.
சின் பெங்கும் அவர்தம் ஆதர வாளர்களும் இங்கு திரும்பி வருவதைச் சில
மலேசியர்கள், குறிப்பாக மலேசிய இராணுவப் படையின் முன் னாள் வீரர்கள்,
எதிர்க்கிறார்கள். அவர்களின் எதிர்ப் பைத் தெரிவிப்ப தற்கு ஓர்
ஆர்ப் பாட்டத்தையே நடத்தினார்கள். அவர்களின் வாதத்தின்படி மலேசிய
மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கெல்லாம் சின் பெங்கும் அவர்தம்
ஆதரவாளர்களும் தான் காரணம். மலேசிய இராணுவப் படையினரில் பலர்
உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுக்கு ஆளாயினர். பொது மக்களில்
பலருக்கும் இக்கதியே ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை இன்னும் மறக்க முடியாது. ஆகையால்,
சின் பெங்ஙையும் அவர்தம் ஆதரவாளர்களையும் திரும்பி வர அனுமதிக்கக்
கூடாது. இதுதான் எதிர்ப்பாளர்களின் விவாதம்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தங்களின் குறைகளை வெளிப்படுத்தினார்கள்.
அது அவர்களின் உரிமை. அவர்களின் ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆனால், இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அவர்கள் சின்
பெங்ஙுடன் போரிட்டது இராணுவ உத்தரவின்படிதான்! இதில் மேலும்
தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இராணுவ விதியின்படி இராணுவ
உத்தரவு குறித்து அவர்கள் எக்கேள்வியும் எழுப்பவே முடியாது.
உத்தரவிற்குப் பணிந்தே ஆக வேண்டும். உத்தரவின்படி செயல்பட்டு,
இறந்து, அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை.
முன்னாள் இராணுவப்படையினர் நடத்திய சின் பெங் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் அவர்கள் பின்பற்றிய இராணுவ கட்டொழுங்கின்
பிரதிபலிப்பேயாகும்.
மலாயாவில் அவசரக்காலத்தைப் பிரகடனம் செய்தது யார்? அவர் ஒரு
சுல்தானா? அவர் ஒரு மன்னரா? அவர் ஒரு மலாய்க்காரரா, அல்லது ஒரு
சீனரா, அல்லது ஓர் இந்தியரா? இல்லை, இல்லவே இல்லை. இனத்தால்
ஆங்கிலேயரான, நாட்டால் பிரிட்டிஷ் காரரான சர் எட்வர்ட் ஜென்ட்
அவசரக்காலத்தைப் பிரகடனம் செய்தார். ஓர் ஆங்கிலேயர் தனக்குச்
சொந்தமற்ற ஒரு நாட்டில் அவசரக்காலப் பிரகடனம் செய்ய என்ன உரிமை
இருக்கிறது? ஓர் அந்நியரான சர் எட்வர்ட் ஜென்ட் மலாயா மக்கள் மீது
போர் தொடுக்க என்ன உரிமை இருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ
சேவையிலிருந்த போது இம்மாதிரியான கேள்விகளைக் கேட்டிருக்க முடியாது.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர்கள்
இக்கேள்விகளைக் குறித்து கண்டிப்பாக சிந்தித்திருக்க வேண்டும்.
மலாயாவில் 12 ஆண்டு நீடித்த அவசரகாலத்திற்கு யார் காரணம்? என்ன
காரணம்? மலாயாவை ஆண்ட, மலாயாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்த
பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள்தான் இந்தப் போருக்குக் காரணம். சின் பெங்
மலாயாவை பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்கான
போராட்டத்தை முன் நின்று நடத்தினர்.
எம்பாஜா,
விடுதலைப்படை!
பொதுவுடைமைத்
தத்துவம் (Communism) வளர்ந்து வரும் ஒரு சக்தியாக விளங்கியது.
அந்தத் தத்துவம் முதலாளித்துவ முறையை மாற்றியமைப்பதற்காக உலகளவில்
போராடிக் கொண்டிருந்தது. அப்போராட்டம் மலாயாவிலும் உருவானது.
இந்நாட்டில் தொழிலாளர்கள், குறிப்பாகத் தோட்டம் மற்றும் சுரங்கத்
தொழிலாளர்கள், மிக மோசமான அளவில் சுரண்டப்பட்டனர். இவ்வாறான
சூழ்நிலையில் தொழிற்சங்கம் மற்றும் பொதுவுடைமைத் தத்துவங்களின்
வருகையைத் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. காலப்போக்கில்
தொழிற்சங்கங்கள் தோன்றின. தொழிலாளர்கள் சுரண்டலை எதிர்க்க முன்
வந்தனர். தங்களுக்குச் சம்பள உயர்வு வேண்டுமென்றும், தாங்கள்
வாழ்கின்ற, வேலை செய்கின்ற முறைகளில் மேம்பாடு வேண்டுமென்று
கோரிக்கைகள் எழுப்பினார்கள். தங்களது கோரிக்கைகள் வெற்றி
பெறுவதற்காக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த காலத்தில்
தொழிலாளர்கள் பொதுவுடைமைத் தத்துவத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளும்
வாய்ப்பினைப் பெற்றனர். அதோடு, சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய
நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டம் இங்குள்ள தொழிலாளர்களின்
போராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்தியது. இக்காலகட்டத்தில்
இந்நாட்டிற்கு வருகை அளித்திருந்த ஜவஹர்லால் நேரு தொழிலாளர்களின்
போராட்ட உணர்வை மேலும் ஊக்கிவிட்டார்.
இரண்டாவது உலகப் போர் ஆரம்பமான காலத்தில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி
சட்டப் பூர்வமான கட்சி அல்ல. இருப்பினும் அது ஒரு சக்தி வாய்ந்த
கட்சியாக விளங்கியது. மலாயா காலனித்துவ அரசு ஜப்பானியர்களை
எதிர்ப்பதற்கு தனது உதவிகளை வழங்க இக்கட்சி முன் வந்தது.
ஜப்பானியர்களின் படை யெடுப்பை தங்களால் தோற்கடிக்க முடியும் என்று
கருதிய பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி
1941இல் வழங்க முன் வந்த உதவியை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால்,
ஜப்பானிய படையெடுப்புத் தொடங்கியதிலிருந்து 70 நாட்களுக்குள்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின் பலமும், அவர்களை யாரும் வெல்ல
முடியாது என்ற மாயையும் தகர்ந்து போயின. சிங்கப்பூரையும்
மலாயாவையும் பிரிட்டீஷார் இழந்தனர்.
ஜப்பானிய
படையெடுப்பின் போது நடந்த போரில் பிரிட்டீஷாரின் மற்றும் பிரிட்டீஷ்
இராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி பெரிதாகக் குறிப்பிடுவதற்கு
ஏதுமில்லை. இந்நாட்டையும், நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டு
தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிட்டனர். ஆனால், சீன
கம்யூனிசவாதிகள் ஜப்பானியர்களை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர்.
சிங்கப்பூரில் ஜப்பானியர்களை எதிர்த்து அவர்கள் நடத்திய
வீரப்போராட்டத்தையும், சிங்கப்பூரின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள்
ஜப்பானியர்களால் எவ்வாறு கொடுமைப் படுத்தப்பட்டார்கள் என்பதையும்,
பிரிட்டீஷாருக்குச் சொந்தமான “தி ஸ்ரெட்ஸ் டைம்ஸ்” பத்திரிகை
விவரமாக எழுதியிருந்தது.
ஜப்பானியர்கள் மலாயாவை ஆண்டபோது அவர்களை எதிர்த்துப் போராடிய ஒரே
சக்தி மலாயா மக்கள் ஜப்பானிய எதிர்ப்புப் படை (MPAJA). இது மலாயா
கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவ அணியாகும். இவ்வணி இங்கு
ஜப்பானியர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில்,
தோற்றுப்போய் ஓடிவிட்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் லண்டனில்
அமர்ந்து கொண்டு மலாயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான திட்டங்களை
வகுத்துக் கொண்டிருந்தனர். மலாயாவில் இயங்கிக் கொண்டிருந்த
தீவிரவாத போக்கைக் கொண்ட தொழிற்சங்க இயக்கத்தை அடக்கி செயலிழக்க
செய்வதும் அத்திட்டங்களில் ஒன்றாகும்.
மலாயாவை
மீண்டும் கைப்பற்றவிருக்கும் பிரிட்டீஷ் படையினருக்கு உதவ
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு மலாயா நாட்டு மக்களின் ஆதரவு
தேவைப்பட்டது. அன்று மலாயாவில் பிரிட்டீஷாருக்குத் தேவையான உதவிகளை
வழங்குவதற்கு எல்லா வகையிலும் சிறந்த ஓர் அமைப்பு மலாயா கம்யூனிஸ்ட்
கட்சியின் இராணுவ அணியான மலாயா மக்கள் ஜப்பானியர் எதிர்ப்புப்
படைதான்.
1941ஆம் ஆண்டு மலாயா கம்யூனிஸ்ட் கட்சி வழங்க முன்வந்த உதவியை ஏற்க
மறுத்துவிட்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள், அதே கட்சியின் இராணுவ
அணியுடன் 1943இல் ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின் படி பிரிட்டீஷார் மலாயா மக்கள் ஜப்பானியர்
எதிர்ப்புப் படையினருக்கு ஆயுதங்களை வழங்கி, பயிற்சியும்
அளித்தார்கள்.
போரில் தோல்வி கண்ட ஜப்பானியர்கள், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
15ம் தேதி அமெரிக்கப்படையினரிடம் சரணடைந்தனர். இதன் காரணமாக,
மலாயாவை மீண்டும் கைப்பற்றும் பிரிட்டீஷாரின் திட்டம் கைவிடப்பட்டது.
தோற்று ஓடிப்போன பிரிட்டீஷார் மீண்டும் மலாயாவில் 3.9.1945இல் காலடி
வைத்தனர்.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்கும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதிக்கும்
இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட மலாயா முழுமையும் மலாயா மக்கள்
ஜப்பானியர் எதிர்ப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த
அமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் 10,000 வீரர்கள் இருந்தனர்.
மலாயாவில் இறங்கிய பிரிட்டீஷ் இராணுவ வீரர்களை நாடு முழுவதும்
வரவேற்றது பிரிட்டீஷாரின் கொடியான யூனியன் ஜேக்-அல்ல. அவர்களை
வரவேற்றது மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடிகள் என்று “தி
ஸ்ரெட்ஸ் டைம்ஸ்” பத்திரிகை தலையங்கம் எழுதியிருந்தது.
சிங் பெங்கிற்கு ஒபியி (OBE)
பிரிட்டீஷாரின் தென்கிழக்காசிய படைகளின் தளபதி லூயிஸ்
மவுண்ட்பேட்டன் பிரபு மலாயா மக்கள் ஜப்பானியர் எதிர்ப்புப்
படையினர்க்குப் பிரிட்டீஷாரின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அவ்வமைப்பின் வீரர்கள் சிங்கப்பூரிலும் மற்றும் மலாயாவின் பல
பகுதிகளிலும் நடந்த வெற்றி அணிவகுப்புகளிலும் பங்கேற்றனர். சின்
பெங்ஙும் மற்றும் சில மலாயா மக்கள் ஜப்பானியர் எதிர்ப்புப் படையின்
உயர்மட்ட தலைவர்களும் லண்டனில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் கலந்து
கொண்டனர்.
ஜப்பானிய படைவீரர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றதற்காகச் சின்
பெங்ஙிற்கு இரண்டு இராணுவ பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், சின்
பெங்கின் போர்க்கால சேவையைப் பாராட்டி பிரிட்டீஷ் பேரரசு அவருக்கு
ஒபியி (Order of the British Empire) விருதை வழங்கியது.