பெரியார் படத்தை தடைச் செய்யக்
கோருவது
கிறுக்குத் தனமே ஒழிய அறிவுடைமையல்ல!
இரா. திருமாவளவன்

'பெரியார்' படத்தைத் தடை
செய்ய வேண்டும் என்று தற்கால் நம் நாட்டில் இயங்குகிற இந்து மத
அமைப்பினர் கருத்துப் பரப்புரை செய்து வருகின்றனர். பெரியார்
மறைந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. இக்கால் அவருடைய வாழ்க்கை வரலாறு
மட்டுமே திரைப்படமாகியிருக்கிறது. வெறும் படம் மட்டும்தான்
நம்மிடம் உலாவப் போகிறது. அதை அறிந்துதான் இந்தக் குலை நடுக்கம்.
பெரியாரின் பகுத்தறிவுச் சார்ந்த கேள்விகளுக்கு இதுவரை எந்த
சனாதனவாதிகளும் அறிவுடைய விடைகளைக் கூறியதில்லை. அவர்களுக்கு
சினமும் எரிச்சலும் வருகிறதே ஒழிய அறிவு வரவில்லை. அதனால்தான் தமிழ் அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும் என்று எழுதுகிறார், ஒருவர்.
அறிவு சார்ந்த இறைக்
கோட்பாட்டை எல்லாரும் ஏற்றுள்ளார்கள். பேரறிஞர் அண்ணா திருமூலரின்
' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' எனும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டார்.
பெரியார் கூட தம் இறுதி உரையில் யோக்கியமான ஒரு கடவுளை
வணங்கிவிட்டுப் போ என்றார்.
யோக்கியமான கடவுள் எது?
வேத புராண இதிகாச சாத்திர மிருதி நூல்களில் கடவுள் என்று
சொல்லப்பட்டு எப்படி சித்தரிக்கப்படுகின்றன.? தமிழரின் உண்மை சமய
நெறியை மாசு படுத்தி இழிவான உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கதைகளைக்
கூறி தமிழரை முட்டாள்களாக்கும் போது எந்தத் தன்மானமுள்ள அறிவாளி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
இதனை பெரியார்
மட்டுமா கண்டித்தார்? இராமலிங்க அடிகளார் கண்டிக்கவில்லையா? சித்தர்
பெருமக்கள் கண்டிக்கவில்லையா? திருமூலர் கண்டிக்கவில்லையா? இந்திய
தேசியப் பாவலன் பாரதிகூட தம் பாடல்கள் சில வற்றில் துணிந்து
எழுதி யிருக்கிறாரே?

"ஆயிரம் தெய்வங்கள்
உண்டென்று கூறி
அலையும் அறிவிலிகாள்"
என்று மிகக் கடுமையாகக்
கடுமையாகக் கண்டித்திருக்கிறாரே! அதே பாரதி பிறிதொரு இடத்தில்
' ஒன்று மற்றொன்றைப்
பழிக்கும் - ஒன்றில்
உண்மை யென்றோதி
மற்றொன்று பொய் யென்னும்
நன்று புராணங்கள்
செய்தார் - அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்
கவிதை மிக நல்ல தேனும்
- அக்
கதைகள் பொய் யென்று
தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ் நெறி
காட்டி - நன்மை
போதிக்கும் கட்டுக்
கதைகள் அமைவதாம்...
இப்படி சொன்னவர் யார்
தெரியுமா பெரியார் அல்ல பாரதியார்தான்..... இங்கே பாரதி ஒரு
பெரியாராக மாறியிருப்பதை அறிவு உள்ளவர்கள் உணர்வார்கள்.

மேலும் பாரதி
சொல்கிறார்.....
உண்மையின் பேர்
தெய்வம் என்போம் - அன்றி
ஓதிடும் தெய்வங்கள்
பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள்
என்போம் - பிறி(து)
உள்ள மறைகள் கதையெனக்
கண்டோம்
கடலினைத் தாவும்
குரங்கு - வெங்
கனலிற் பிறந்ததோர்
செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்தத னாலே -
தெற்கில்
வந்து சமன் செய்யும்
குட்டை முனியும்
நதியினுள்ளே முழுகிப்
போய் - அந்த
நாகர் உலகில்
ஓர் பாம்பின் மகளை
விதியுறவே மணம் செய்த -
திறல்
வீமனும் கற்பனை செய்து
கண்டோம்
பெரியாரை போல் துணிவாக
புராண இதிகாச கடவுள் கதைகளை கற்பனை என்று எழுதிய
பாரதியை, பாரதிப்
படத்தை எந்த சனாதன தர்மாவாதியாவது கண்டித்த துண்டா? இல்லை. ஏன்
தெரியுமா? இப்படி பாரதி சொல்லியிருப்பதே இவர்களுக்குத் தெரியாது.
' பின்னும் மிருதிகள்
செய்தார் - அவை
பேணும் மனிதர் உலகினில்
இல்லை
" சூத்திரனுக் கொரு
நீதி - தண்டச்
சோறுண்ணும்
பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு
மாயின் - அது
சாத்திரம் அன்று
சதியென்று கண்டோம் "
என்று
மனுஸ்மிருதி
நூலினை சதிநூல் என்று சாடும் பாரதி என்ன நாத்திகனா?

கடவுள் நெறியால்
ஒழுக்கச் சிந்தனை ஓங்க வேண்டும். மாந்த நேயம் உயிர் நேயம் உடையதாக
கடவுள் நெறி விளங்க வேண்டும். இதைத்தான் நம்முடைய முன்னோர்கள் பலர்
வலியுறுத்தியுள்ளனர்.
கடவுள் நெறியை -
கோட்பாடுகளை உணர்த்துவதற்காக காட்டப்படும் குறியீடுகளிலும்
அறிவாண்மையும் நன்னெறியும் இருக்க வேண்டும். அப்படி அல்லாமல்
மாந்தப் பண்புகளை உயர்ந்த நெறிகளைக் கேவலப் படுத்துகின்ற
குறியீடுகளாக அவையிருப்பின், அவை பொருத்தமானவை அன்று. அவற்றை
அறிவாளிகள் கண்டிக்கவே செய்வர். நம்புவதற்கொவ்வாத, ஏரணம் இல்லாத
கதைகளைக் கூறி மெய்யியல்களை விளக்கும் போதுதான் சமய நெறி
மாசுப்படுகிறது. உண்மையில் சமய நெறியை மாசுபட வைக்கும்
கோட்பாடுகளையும் கதைகளையும் குறியீடுகளையும் கொண்டிருப்பதுதான்
கடவுள் எதிர்ப்புச் சிந்தனையாகும்.
உண்மையான கடவுள் மறுப்பாளர்கள்
நாத்திகர்கள் அல்லர். இழிவுகளை செய்துக் கொண்டிருக்கும்
ஆத்திகர்களே!
பெரியார் யோக்கியமாக
கடவுளை வணங்கு என்று சொல்லும் போதே, அப்படி யோக்கியமான ஒன்று
இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்றதான் பொருள். இதன் வாயிலாக
ஒழுக்கத்தையும் தூய்மையையும் அவர் கடவுளாக பார்த்திருக்கிறார்
என்பதைதான் மறு பொருளாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு மதத்துக்காரன்
கோயிலை இன்னொரு மதத்துக்காரன் இடிக்கிறான். ஒரு மதத்துக்காரன்
கடவுளை இன்னொரு மதத்துக்காரன் மறுக்கிறான். ஒரு மதத்துக்குள்ளேயே
நீதி, விதிமுறைகளால் மனித நேய மறுப்புகள் நிகழ்கின்றன.
500 சைவர்களை
சமணர்கள் எரித்தார்கள் என்றும் 8000 சமணர்களை சைவர்கள்
கழுவிலேற்றினார்கள் என்றும் வரலாற்றில் படிக்கிறோம். பெரியார்
தொண்டர்கள் இவ்வாறு செய்ததில்லை. உலகம் உருண்டை என்று
சொல்வதே மத எதிர்ப்பாக ஒர காலத்தில் கருதப்பட்டு தண்டனை
வழங்கப்பட்டது.
' உன்னையே நீ
எண்ணிப்பார் ' என்று சொன்னதற்காக சாக்ரடீஸ் நஞ்சு கொடுத்து
கொல்லப்பட்டார். நிக்கோலன் என்னும் அறிஞனை, உலகம் சூரியனைச்
சுற்றி வருகிறது என்றதற்காக நெருப்பிலிட்டுக் கொன்றார்கள். இவை
வரலாற்றில் பதிக்கப்பட்டவை. அறிவோடு சிந்திப்பதையும் நம்பிக்கைகளை
ஒட்டி ஆராய்வதையும் கூடாது என்பது மாந்தனின் இயல்பான அறிவு
வளர்ச்சியைத் தடை செய்யும் முயற்சி களாகும். எப்படி தடைகளை
ஏற்படுத்தினாலும் முட்டுக்கட்டைப் போட்டாலும் சிந்திக்கிற
மனிதனுக்கு அணை போட்டுவிட முடியாது.
அறிவெழுச்சி கொண்டு
வளர்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக கேள்வி கேட்கவே செய்யும்.
'பெரியார்' படத்தை
பார்க்காதே' என்று சனாதனவாதி கூறுகிற பொழுது அறிவுடையவன் ஏன்
பார்க்கக் கூடாது, அதில் என்ன இருக்கிறது என்று கண்டிப்பாக
ஆராய்வான். ஆராய்கின்றவனுக்கு உண்மை புலப்படும்.
இந்து மதக் கருத்துகளை
சிக்காகோவில் பறைசாற்றிய விவேகானந்தர் அவர்கள் தம் நூல்கள்
சிலவற்றில் கூறிய கருத்துகள் பெரியாரின் கருத்துருவங்களாக
விளங்குகின்றன. இதற்காக விவேகானந்தரை எந்த சனாதனவாதி மறுத்தான்?
"come, be men kick out the
priests who are
always against progress, because the would never mind, their
hearts, would never become big. they are the offspring of
centuries of superstition and tyranny. Root out priest craft
first come, be men!"
- (The complete works Vol. 5, P 10
Calcutta
1864)
1864ஆம் ஆண்டு
விவேகானந்தர் நிகழ்த்திய உரை தொகுப்பின் பகுதிதான் அது.
" வாருங்கள் மனிதர்களாக
ஆகுங்கள். புரோகிதர்களை உதைத்துத் துரத்துங்கள்.
அவர்கள் எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் எதிரிகளாக
உள்ளார்கள். அவர்கள் என்றும் மாற மாட்டார்கள். அவர்களின் இதயம்
என்றும் விசாலமாகப் போவதில்லை. அவர்கள் பல நூற்றாண்டு கால மூட
நம்பிக்கைக் கொண்ட அடக்குமுறையாளர்களின் வழித் தோன்றல்கள்.
முதலாவதாக புரோகித முறைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுங்கள்.
வாருங்கள் மனிதர்களாக ஆகுங்கள்.
என்பதுதான் அதன்
தமிழாக்கம். மாந்தப் பொது பண்புக்கு பிராமணீய புரோகித
சித்தாந்தங்கள் எதிர்ப்பாகவும் முரணாகவும் இருப்பதால் விவேகானந்தர்
'புரோகிதரை அடித்துத் துரத்துங்கள் என்கிறார். மனிதர்களாக ஆகுங்கள்
என்று விவேகானந்தர் கூறுகின்ற பொழுது புரோகித கடவுள் சிந்தனைகள்
மாந்தநேயத்திற்கு எதிர்ப்பானவை என்பது விளங்கவில்லையா? இதைத்தானே
பெரியாரும் கூறினார்.
விவேகானந்தரின் சீற்றம்
இதோடு நின்றுவிடவில்லை. ஒரு படி மேலே சென்று அடிக்கும் அடிதான்
நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆரிய சனாதனவாதிகளுக்கு கொடுத்த
மிகப் பெரிய அடியாகவும் இதைக் கொள்ளலாம். இங்கே முழுக்க முழுக்க
பெரியாரின் குரலே கேட்பதை உணரலாம்.
" Down with all
superstitions! Neither teachers nor scriptures nor gods exits.
Down with temples with priests with gods with incarnations with
god him self . I am all the god that ever existed! These stand
up philosophers! No fear! speak no more of god and the
superstition of the world. Truth alone triumphs, and this is
true. All religious superstitions are valn imaginations god was
born in my mind ... he is created by me in my own mind .. give
up all superstition."
- (The complete works Vol.
1, P 502 Culcutta 1870)
"
எல்லா மூடநம்பிக்கைகளும் ஒழிந்து போகட்டும். தருமத்தைப்
போதிக்கும் ஆச்சாரியார்களோ, தரும நூல்களோ, தெய்வங்களோ இல்லை.
திருக்கோயில்களையும், அர்ச்சர்களையும் தேவதைகளையும் இறைவன்
அவதாரங்களையும் இறுதியாக கடவுளையுமே ஒழித்துக் கட்டுங்கள். தத்துவ
ஞானிகளே எழுந்து நில்லுங்கள். பயம் கொள்ள வேண்டாம். இறைவனைப்
பற்றியும் உலகில் காணப்படும் மூடநம்பிக்கைகள் பற்றியும் பேசுவதை
நிறுத்துங்கள். உண்மையே வெல்லும். இதுவே உண்மை. எல்லா மூட
நம்பிக்கைகளும் வீண் கற்பனைகள். இறைவன் என் மனதில்தான்
தோன்றுகிறான். நானே அவனை என் மனதில் தோற்றுவித்தேன். மூட
நம்பி்க்கைகள் யாவற்றையும் உதறித் தள்ளுங்கள்"
விவேகானந்தர் இதே
கருத்தைதான் மூச்சுக்கு மூச்சு மூலைக்கு மூலைக்கு பகுத்தறிவாளர்கள்
கூறி வருகின்றனர். பெரியார் ஒரு போதும் தம்மை ஒரு கடவளாகக்
கூறியதில்லை.
ஆனால் விவேகானந்தர் '
நானே கடவுள் ' என்கிறார். இது கடவுள் பற்றிய பார்வைகளுள் ஒன்று
என்பதை ஆழமாக சிந்திப்பவர்கள் உணர்வார்கள். இதுவரை விவேகானந்தரை
சனாதன தர்மவாதிகள் கண்டிக்கவில்லை. ஆனால் பெரியாரைக்
கண்டிக்கிறார்கள். இழிவு படுத்துகிறார்கள். இப்படி இழிவு
செய்கின்றவர்கள் எல்லாருமே பெரியாரை அறியாதவர்களும்
பிராமணர்களும் பிராமண அடிமைகளுமே யாவர்.
விவேகானந்தர் மேலும் ஒர்
இடத்தில் கூறுகிறார்...
"No religion on earth
threads upon the necks of the poor and the low in such a fashion
as the Hinduism"
"
உலகில் உள்ள எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போன்று அதனை
பின்பற்றுபவர்களில் ஏழைகள் மற்றும் கீழ்மட்டத்தவர்களின் கழுத்தைப்
போட்டு மிதிப்பதில்லை."
இப்படி நேரடியாகவே இந்து
மதத்தைத் தாக்கிய விவேகானந்தரை விடவா பெரியார் பெரிதாகக்
கூறிவிட்டார். அவர்கள் கூறியதைத்தான் பெரியாரும் வழி மொழிந்தார்.
எனவே, விழிப்புணர்வை ஊட்டிச் சென்ற மாபெரும் மாந்தரை, தலைவரை
மனிதகுலத்திற்கு ஒவ்வாதவர் போல எண்ணி அவரைக் கடிவதும் அவருடைய
வரலாற்றை அறியவிடாமல் குறுக்கீடு செய்வதும் கிறுக்குத் தனமே ஒழிய
அறிவுடைமையல்ல.