மலேசியத் தமிழர்களின் அடிச்சுவடுகள்
(வரலாற்று அடிப்படையிலான உண்மை வரலாறு)

ஆய்வாளர் மா. ஜானகிராமன்

 

 

 

 

 

 

மலாயாவுக்கும் இந்தியாவுக்குமான வர்த்தகம், கலை கலாச்சார பண்பாட்டு தொடர்புகள் கிறிஸ்துக்கு முன்பிலிருந்தே தொடங்கி இருக்கிறது. பொருளாதாரத் தேவை மற்றும் கடல் வழி பயணம் செய்து அடுத்து என்ன இருக்கிறதென்பதை ஆராய வேண்டும் என்னும் வேட்கை காரணமாக இந்தியாவின் கிழக்குக்கரை மாநிலங்களான ஓரிசா மற்றும் தமிழக கரையோரப் பகுதியிலிருந்து தமிழர்கள் மலாயாவையும், மலாய் தீவுகளையும், இந்தோசீன நாடுகளையும் அடைந்துள்ளனர். மலாயா தீபகற்பத்தில் கெடாவிலுள்ள மெர்போக் நடுப்பகுதியான “பூஜாங் பள்ளத்தாக்கு" பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் தமிழர்கள் இங்கு வாழ்ந்த தற்கான தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. புராதன இந்து ஆலயங்கள் மற்றும் கல் வெட்டுகள் வழி இந்த கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொம்பன் மணியம், துணையாசிரியர், தமிழ் நேசன்
“இந்தியாவும் பண்டைய மலாயாவும்"

மலேசியத் தமிழ் எழுத்தாளர் இரண்டாவது தேசிய மாநாட்டு மலர் - 1984
“The Indian Period" Federation of Malaya  Annual Report,1954

 

 

தமிழர் வருகை

முதலாம் நூற்றாண்டில், கோர மண்டல கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலிருந்து தமிழ் வணிகர்கள் மலாயா தீபகற்பத்திற்கும், அதனையொட்டிய தீவுக்கூட்டங்களுக்கும் பெரிய எண்ணிக்கையில் வந்தனர். அவர்கள் ஆடைகள், இரும்புச் சாமான்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைப் பண்டமாற்று முறையில் விற்று காட்டிலிருந்து கிடைக்கும் பசை, கற்பூரம், மரங்கள், தங்கம் வாங்கினர். பத்தலோமி இந்த தீபகற்பத்தை “தங்கத் தீபகற்பம்" என்று குறிப்பிட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான்.


இந்தக் காலக்கட்டத்தில்தான், கைவினைப் பொருட்களைச் செய்யும் கலைஞர்கள் ஆடை நெய்தவர்கள், இரும்பினாலான பொருட்கள் செய்பவர்கள் போன்ற தொழில்திறன் மிக்க தமிழர்கள் மலாயாவிற்கும், இங்குள்ள தீவுக்கூட்டங்களில் தங்கி உள்ளுர்ப் பெண்களை மணந்து சிறு பட்டணங்களை அமைத்தனர், மலாயா தீபகற்பத்தில் கெடாவிலுள்ள மெர்போக் நதிப்படுதியான “பூஜாங் பள்ளத்தாக்கு" இத்தகைய குடியேற்றங்களில் தலையாயது ஆகும்.




 


இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் தமிழர்கள் இங்கு வாழ்ந்தற்கான தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. புராதன சைவ ஆலயங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் வழி உறுதிச் செய்யப் பட்டுள்ளது. இது மலாய் சான்றுகளின் படி சொல்லப்படும் லங்காசுக்கா என்ற நிலப்பரப்பின் ஒரு பகுதி என்றும் இது தெளிவில்லாத நிலையைக் காட்டுவதாகவும் உள்ளது. லங்காசுக்காவின் எல்லை காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்திருந்தாலும் அது இன்று மலாயா மற்றும் தென் சயாமியப் பகுதியை உள்ளடக்கி இருந்தது. இங்கிருந்த பல தமிழ் குடியேற்றப் பகுதிகள் சுயாட்சிப் பெற்ற மாநிலங்களாக இருந்தாலும், சில காலத்திற்குப்பின் அவை இந்தோ - மலாய் பேரரசான ஸ்ரீ விஜயாவின் ஆதிக்கத்திற்குக் கீழ் வந்தன. ஒரு காலக்கட்டத்தில் பலெம்பாங் அதன் தலைநகராக இருந்தது. பின்னர் ஸ்ரீ விஜயா தனது தலைநகரை லங்காசுக்காவிற்கு மாற்றியது.

 

தமிழர்கள் மிகவும் திறமையுடனும், மிகுந்த செல்வாக்குடனும் உள்ளுர் மக்களுடன் பட்டணங்களிலும், துறைமுகங்களிலும் நட்புறவோடு பழகினர். இவர்கள் தமிழ் ஆட்சி முறையைக் கொண்டு வந்தனர். இவர்கள் ஹினயானா, மஹாயானா பௌத்த சித்தாந்தங்களைப் பரவச் செய்தனர். இருப்பினும் இஸ்லாம் பரவும் வரை இங்குள்ள மலாய் இனத்தாரிடையே இயற்கையை வணங்கும் முறையே நடைமுறையில் இருந்தது.  தமிழ் எழுத்தியல் முறையைக் கொண்டு மொழியை எழுதினர். அதே வேளையில் தமிழ் இதிகாசங்களை மலாய் இலக்கியத்திலும் நிழல் பொம்மலாட்டத்திலும் புகுத்தினர்.


கிருஸ்துவ காலக் கட்டம், அதாவது 15ஆம் நூற்றாண்டு வரை தமிழ் பொருளாதார மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் நீடித்திருந்தது. 15ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயத்தின் வருகை தமிழ் ஆதிக்கத்தை ஆட்டங்காணச் செய்ததோடு, முற்றிலும் அழியவும் செய்தது. 1511ல் போர்த்துக்கீஸ்யர்களின் வருகையானது, அதுவரையில் வணிகத்தில் தமிழர்களின் பெற்றிருந்த ஆதிக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.

மலாக்கா பேரரசு

துமாசிக் பின்னர் (சிங்கப்பூர்) ஸ்ரீவிஜயா பேரரசிலிருந்து 13ஆம் நூற்றாண்டில் உதயமானது என்று ஊகிக்கப்படுகிறது. பின்னர் இதுவே மலாக்கா மலாயா பேரரசு உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. கி.பி. 1348ல் துமாசிக் சயாமியர்களின் தாக்குதலை முறியடித்தது. பின்னர் அது மஜபாட் படையிடம் தோற்று, சுமார் நானூறு வருடங்களுக்கு வரலாற்றிலிருந்து மறைந்து இருந்தது.


துமாசிக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதன் ஆட்சியாளர் பரமேஸ்வரா, ஒரு மீன்படி கிராமமான மலாக்காவிற்குப் தப்பி ஒடினார். இந்த மீன்பிடி கிராமமான மலாக்கா, பின்னால் மிகப் பெரிய பேரரசுவாக உருவெடுத்தது. பரமேஸ்வரா உருவாக்கிய இந்த மலாய் அரசு எதிரிகளினால் சூழப்பட்டு அபாயத்தில் இருந்தது. அவர்களுக்குச் சயாம் பிரதான எதிரியாக இருந்தது, மலாக்கா, ஆட்சியாளர் களிடமிருந்து விசுவாசத்தை கோரியது.


 

ஆனால் மலாக்கா, சீனப் பேரரசிடமிருந்து பாதுகாப்பு கோரியது. இதன் விளைவு 1405ல் மலாக்கா ‘பேரரசு' என்ற நிலைக்கு உயர்ந்தது. அதோடு மலாக்காவைச் சயாமியர்களின் கோரிக்கைகளிருந்து விடுவித்ததோடு தாக்குதல்களைத் தவிர்க்குமாறு சயாமைச் சீனா எச்சரித்தது. இருப்பினும் பின்னர் சயாமியர்கள் தங்களது தாக்குதலைகளைத் தொடர்ந்து நடத்தினர். இருப்பினும் மலாய்க்காரர்கள் அபரிமித பலம் பெற்றிருந்ததோடு, வெளிநாட்டின் உதவியின்றி சயாமியர்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பகாங் மாநிலத்தை 1458ல் கைப்பற்றினர்.


15ஆம் நூற்றாண்டில், புதிய பேரரசான மலாக்கா செழிப்புடன் வளர்ந்தது. அதன் துறைமுகத்திற்குப் பல நாடுகளிலிருந்து வணிகர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். மேலும் ஜாவானிய சீன மற்றும் இதர மக்களின் சிறிய குடியிருப்புகள் உருவாகின.

 

இந்த நூற்றாண்டின் இறுதியில் மலாக்கா தனது ஆதிகத்தை மலாயா தீபகற்பம் முழுவதும் வடக்கே பட்டாணி வரையிலும் மேற்கு சுமத்திராவிலுள்ள கரையோரப் பகுதிகள் வரையிலும் செலுத்தியது. இதே நூற்றாண்டில்தான் தீபகற்பத்திலிருந்த மலாய் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவத் தொடங்கினர்.


மலாய்த் தீவுக்கூட்டங்களில் முதலாவது இஸ்லாமிய சமய பரப்பும் மையமாக வட சுமத்திரா அமைந்தது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை தமிழ், பெர்சிய, அரபு முஸ்லீம் சமயப் பரப்பாளர்கள் திரளாக வந்தனர். வட சுமத்திராவிலிருந்து மலாக்காவிற்கு இஸ்லாம் பரவியது. கி.பி.15ஆம் நூற்றாண்டின் இறுதியில் மலாக்கா இந்தப் புதிய சமயத்திற்கு மையமாக மலாய்த் தீவுகளில் விளங்கத் தொடங்கியது.


இஸ்லாமிய மயமாக்கம் படிப்படியாக நடைபெற்றது. 15ஆம் நூற்றாண்டில் அப்பணி உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெற்ற போதிலும் 17ஆம் நூற்றாண்டு வரை அது முழுமையடையவில்லை. ஆச்சே சுல்தான் இஸ்கண்டார் மூடா, இஸ்லாத்தை வாள் முனையில் கட்டாயமாக ஏற்றுக் கொள்ளும் பணியைச் செய்தார். இந்தச் சமய பிரிவாக்கமானது போர்த்துகீஸ்யர்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. மலாய்க்காரர் களிடையே இதன் விளைவுகள் அதிகமாக இருந்தன.


தமிழர்கள் பிடிப்பு மெல்ல தளர்ந்து இறுதியில் அற்றுப்போனது. தமிழ் மக்களின் பண்பாடு அதன்பின் நிலைக்கவில்லை. அரபுகளும் அவர்களது மதமும் பண்பாடும் நிலை கொள்ள ஆரம்பித்தன. பல கடவுள்களைக் கொண்ட இந்து மத்தின் ஸ்தானத்தை ஒரே கடவுள் என்ற கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் எடுத்துக்கொண்டது. பௌத்த இந்து வழிபாட்டு முறைகள் இஸ்லாம் சமயத்திற்கு அடிபணிந்தன. இதுநாள்வரை மகாராஜா அல்லது பரமேஸ்வரா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்த உள்ளுர் ஆட்சியாளர்கள் அதை விட்டு விட்டு அதற்குப் பதிலாக தங்களது தலைமை அடையாளத்திற்கு அரபுக்களால் பயன்படுத்தப்படும் ‘சுல்தான்’ என்ற பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.


இந்திய எழுத்துப் படிவங்களில் சமஸ்கிருத்திற்குப் பதில் அரபு எழுத்துக்கள் இடம் பிடித்தன. மலாய் மொழியில் வந்து கலந்த சமஸ்கிருதச் சொற்கள் நின்றுபோய், அவ்விடத்தை அரபு மொழி எடுத்துக் கொண்டது. மலாய் மொழியாக்கம் கண்டிருந்த இந்திய இதிகாசங்களான இராமாயணமும் மகாபராதமும் பின்தள்ளப்பட்டு, முஸ்லீம் சார்பான படைப்புகள் அவ்விடத்தை நிரப்பின. இந்து சமய அடிப்படையைக் கொண்டிருந்த மலாய் மொழியிலான கதைகள், முஸ்லீம் முலாம் பூசப்பட்டன. முஸ்லிமின் உறுதியான நிலைப்பாட்டிற்கு தமிழ் கலை, பண்பாடு, இலக்கியம், இசை போன்ற அடையாளங்கள் வழிவிட வேண்டி யதாயிற்று.


கி.பி. 1511ல் அல்போன்ஸோ டி அல்புக்கரின் தலைமையிலான போர்த்துகீசிய கடற்படை மலாக்கா பட்டணத்தைத் கடுமையாகத் தாக்கியது. கடும் சண்டைக்குப் பின் இப்பட்டணம் போர்த்துகீசியர் வசமானது. இதன் வழி மலாக்கா மலாய் பேரரசு ஒரு முடிவுக்கு வந்தது. இதன் மலாய் ஆட்சியாளர் சுல்தான மாமூட் ஜோகூருக்குத் தப்பி ஓடினார். பின் சிறிது காலத்திற்குப் ஜோகூர், பகாங் மற்றம் ரியாவ் உள்ளடக்கிய ஜோகூர்-ரியாவ் பேரரசை உருவாக்கினார்.


போர்த்துகீசியர் மலாக்காவை 1511 முதல் 1641 வரை ஆட்சி செய்தனர். 1641ல் அவர்கள் டச்சுக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டனர். போர்த்துகீசியர் வணிகர்கள் என்பதைத் காட்டிலும் மதப்பரப்பாளர்கள் என்ற நிலையி லேயே ஓங்கி இருந்தனர்.

 

இவர்களது கட்டாய மதமாற்றச் செயலானது மலாய்க்காரர்களிடையே இவர்களுக்கு எதிரான வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டியது. ஐரோப்பாவிலிருந்து குறைவான பயிற்சி அளிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் இராணுவத்தினரை உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தூண்டினர். இவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர். தாய்நாட்டிலிருந்து மிகக் குறைந்த அளவிலான உதவிகள் கிட்டியதால், போர்த்துக்கீசியர்களை 1641ல் டச்சுக்காரர்கள் தோற்கடித்தனர்.

டச்சுக்காரர்கள் மலாக்காவை 1795வரை தங்களுக்கு முன் ஆட்சி செய்த போர்த்துகீசியர்களை நினைவிற்கொண்டு தங்களை முழுமையாக வர்த்தகத்தில் ஈடுபடுத்திக்கொண்டனர். பின்னர் மலாக்காவை பிரிட்டிஷாரிடம் விட்டுக் கொடுத்த போது, டச்சுக்காரர்கள் தங்களது கைவண்ணத்தில் உருவான கட்டிடங்களை விட்டுச் சென்றனர். அவை இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

1795ல் நெப்போலியன் யுத்தத்தின் போது, இங்கிலாந்து மலாக்காவை தன் வசத்தில் எடுத்துக்கொண்டது. பின்னர் 1814ல் லண்டன் உடன்படிக்கையின் வழி மலாக்காவை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தது. 1824ல் ஆங்கில-டச்சு உடன்படிக்கை படி மலாய் தீபகற்பம் முழுவதும் பிரிட்டிஷாரின் கட்டுபாட்டில் வருவதற்கு அங்கீகாரம் வழங்கிறது.

 

கெடாவினால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட பினாங்கு, பின்னர் கெடாவிற்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. பல்வேறு வாக்குறுதிகளின் தொடக்கமாக பினாங்கு பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அது கடற்படைத்தͺமாக அமைய பெறப்பட்டது. பினாங் கிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் புரோவின்ஸ் வெல்லஸ்லி, (தீபகற்பம்) விவசாயப் பகுதியிலிருந்து வந்தது. பினாங்கு தீர்வையற்ற துறைமுகமாக இருந்தது, குடியேற்றக்காரர்கள் காடுகளை அழித்தால் நிலப் பத்திரம் வழங்கப்படும் என்று உறுதி மொழி வழங்கப்பட்டது. 1805ல் பினாங்கு தீவின் நிர்வாக தகுதி உயர்த்தப் பட்டு அது இந்தியாவின் கவர்னர் ஜெனரால் அதிகாரத்திற்கு கீழ் வந்தது.

 

மேற்கண்ட இந்த விபரங்கள் பல்வேறு நிலையிலான பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. இது பினாங்கை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நகரமாக உருவெடுக்க உதவியது. ஆனாலும் பினாங்கிற்குத் தேவையான நிர்வாக உதவிகளைப் பிரன்சிஸ்லைட் கேட்டு அவை இந்தியாவை பொறுத்தமட்டில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆயிற்று. நிலங்களுக்கு வரி வசூலிக்கவோ, விவசாய நிலையை அறியவோ ஆணைகள் செயல்படுத்தப்படவில்லை. மேலும் பொதுத் தேவைக்காக நிலங்களை ஒதுக்குவதும் நடைபெற வில்லை. வருமானத்திற்குப் போதைப் பொருள், மதுபானம், சூதாட்டப் பண்ணைகளை நம்பியிருக்க வேண்டிய தாயிற்று. எல்லா முடிவுகளுக்கும் இந்தியாவையே நம்பியிருக்கும் போக்கு, மேலும் பினாங்கின் வளர்ச் சியைக் குன்றச்செய்தது.

அதிகாரிகள் உள்நாட்டில் வணிகத்தில் ஈடுபட அனுமதித்தது, இந்திய நிர்வாகத்தின் போக்கு, பினாங்கின் வளர்ச்சியை பாதிக்கச் செய்த மற்றொரு காரணமாகும். இருப்பினும் சிங்கப்பூர் மிகச் சிறந்த துறைமுகமாக உருவெடுத்தது. பினாங்கு மிக நல்ல துறைமுகமாக இல்லாதது ஒரு பலத்த அடியாகும். தாமஸ் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் கொண்டிருந்த மாபெரும் வர்த்தகத் துறைமுகமாக மலாய்த் தீவுக்கூட்டங்களில் உருவாக வழிவகுத்தது.
 

சான்று :- THE INDIAN PERIOD Federation of Malaya. Annual Report 1954(Chapter2) History Page 427,428 & 429

 

நன்றி : மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை - வரலாற்று ஆவணம்

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com