"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
கூலி...
“இங்க வேல செய்ய வந்தோமுங்க...', என்னும் சொற்றொடரில் பல வரலாற்றுக் குறிப்புகள் மறைந்து கிடக்கின்றன.
ஏன் வந்தோம்,
என்ன செய்ய வந்தோம்,
எப்படி வந்தோம்,
என்ன நடந்தது,
விளைவு என்ன... போன்ற வரலாற்றுக் கேள்விகளுக்கு அடிப்படையாக
இருக்கின்றது, மேற்காணும் சொற்றொடர். வாழ்க்கையில் நாம் அறிந்த
வரலாறுகளைவிட அறிந்திராதவையே மிகுதியாகும். அதுவும் நம்மைச் சார்ந்தவையே
நமக்குத் தெரியாமல் போவதுதான் வியப்பாக இருக்கின்றது.
“இங்கே வேலைக்கு ஓடியாந்தோம்...', என்னும் தொடரில் என்ன வேலை என்னும்
கேள்விக்கு இடமுண்டு. பொதுவாகப் பலர் ‘காட்டை அழிக்க', ‘சாலை உருவாக்க’,
‘தோட்டத்தில் வேலை செய்ய' போன்ற குறிப்புகளோடு தாம் செய்த
வேலைகளைப்பற்றிச் சொல்வார்கள்.
இவ்வகைப்பட்ட எல்லாவிதமான வேலைகளுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இட்ட
பெயர், ‘கூலிவேலை’ என்பதுதான். கூலிவேலை செய்பவன், கூலிக்காரன் என்ற
சிந்தனையே பின்னாளில் இழிவின் எச்சமாக நம்மைத் தாக்கியது. இழிந்த வேலை
செய்பவர்கள் என்ற எண்ணத்தோடு நம்மைப் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அடிப்படையில் கூலி என்னும் சொல் தூயத்தமிழ்ச் சொல்லாகும். கூலி என்பது
ஊதியம், சம்பளம், வருமானம், வாடகை என்று பொருள்படுகின்றது. இச்சொல்
வருமானத்தைக் குறிப்பதற்கான அடிப்படைச் சொல்லாகும். தினக்கூலி,
குடக்கூலி, பால்கூலி, முலைக்கூலி என்னும் சொற்களையெல்லாம் நம் முன்னோர்
பயன்படுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்து, தினமும் கூலி பெறுவதே தினக்கூலியாகும்.
இவ்வகை வேலையைச் செய்பவர்களை தினக்கூலிக்காரர்கள் என்பர். தமிழகத்தில்
இன்றளவும் குடக்கூலி என்னும் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
குடக்கூலி என்றால் வீட்டு வாடகையாகும். இதனைக் குடிக்கூலி எனவும்
சொல்வார்கள். பால்கூலி என்பது பாலூட்டி வளர்த்த தாய்க்குப்
கொடுக்கப்படுவதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்பவன், தனக்கு
மனைவியாகப் போகும் பெண்ணிற்குப் பாலூட்டியத் தாய்க்குக் கொடுக்கும்
கூலியாகும். இதனை முலைக்கூலி என்றும் சொல்லுவார்கள்.
பாரதி பல பாடல்களில் கூலி என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். ஊதியம்
என்ற பொருளுணர்த்தவே அவர் இச்சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார்.
நம் மூதாதையர் பலர் ‘கூலிக்கு வந்தோமுங்க... கூலி கெடக்கலங்க...', போன்ற சொற்றொடர்களைப் பரவலாகப் பயன்படுத்துவதை கேட்டிருப்போம். இங்கே
‘கூலி' என்பது ஊதியத்தை மட்டும் உணர்த்துகின்றது. கூலி என்பது இழிவான
சொல்லன்று.' சுண்டைக்காய்க் காற்பணம், சுமைக்கூலி முக்காற்பணம்', என்றொரு பழமொழி தமிழர்களிடையே உண்டு. இங்கே சுமைக்கூலி என்பது
சுமப்பதற்குக் கொடுக்கப்படும் ஊதிய மாகும்.
ஆங்கிலத்தில் வழங்கப்படும் ‘சேலரி’ (Salary), மலாய்மொழியில்
சொல்லப்படும் ‘காஜி' (Gaji) என்னும் சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்
கூலியாகும். இவையிரண்டும் இழிவற்ற சொல்லாகக் கருதப்படும்போது, ‘கூலி’
என்ற சொல் மட்டும் எப்படி இழிவானதாகக் கருதப்படுகின்றது?
ஆங்கிலேயர்கள்
‘கூலி' என்னும் சொல்லினை வேறு பொருளுணர்த்தப்
பயன்படுத்தியுள்ளனர்.
‘கூலி' என்பது குறிப்பிட்ட திறனற்ற வேலைக்காரர்கள்
(Unskill worker) என்னும் பொருளில் கருதினார்கள். ‘கூலி
வேலை' என்பது
இழிவான தொழிலாகும் என எண்ணினர். இவ்வகை தொழில் செய்பவர்களை இழிந்தவர்கள்
என்றனர்.
கூலித்தொழில் செய்பவர்களைக் கூலிக்காரர்கள் எனவும் இவர்கள் பேசும் மொழி
கூலித்தமிழ் எனவும் வழங்கினர். இங்கே மேலாளர்களாகப்
பணிக்கமர்த்தப்பட்டிருந்த ஆங்கிலேயர்கள் கூலித்தமிழைக்
கற்றுக்கொள்வதற்காகக்
‘கூலித்தமிழ்' என்றொரு சிறுநூல்
வெளியிடப்பட்டிருந்தது.
நம்மில் பலர் ‘கூலிவேலை’ என்பதற்கான எழுத்துச்சான்றுகளைக் கண்டிருக்க
வாய்ப்பில்லை.
1930-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஆறாம் நாளில் (6.10.1930),
கோலசிலாங்கூர் வட்டாரத்திலுள்ள சுங்கை பூலோவில் பிறந்த ஒருவரின்
பிறப்புச் சான்றிதழில், அவர் தந்தையாரின் தொழில் ‘கூலி’ எனக்
குறிக்கப்பட்டுள்ளது. நமது வரலாற்றுக்கு அகச்சான்றாக இந்த ஆவணம்
இருக்கின்றது.
நம் சந்ததியினர் தம்மை அடையாளம் கண்டுகொள்வதற்குச் சான்றாக இது திகழும்
என்பதில் ஐயமில்லை.

ஆவண எண்
: 193062
பதிவு எண் : பக்கம் 5
பெயர் : ஆறுமுகம்
பால் : ஆண்
தந்தை : சின்னசாமி
தொழில் : கூலி
நாட்டினம் : தமிழர்
தாய் : குப்பா
நாட்டினம் : தமிழர்
பிறப்பிடம் : சுங்கை பூலோ -
கோலாசிலாங்கூர்
பிறந்த நாள் : 6 அக்டோபர், 1930
தகவல்
கொடுத்தவர் : ராஜகோபால்
பதிவு செய்த நாள் : 11 அக்டோபர், 1930
|
(இந்த ஆவணத்தைக் கொடுத்து
உதவியவர் - திரு. ஆ. குணநாதன், பத்தாங் பெர்சுந்தை)