"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்

 

அஞ்சல் அலுவலகப் பற்றுச்சீட்டு – 16. ஜூன், 1953

 

பாலுமரம் வெட்டலான்னு, பழயகப்பல் ஏறிவந்தேன்
நாப்பத்தஞ்சி காசப்போட்டு நட்டெலும்ப முறிக்கிறானே!
முப்பத்தஞ்சி காசப்போட்டு மூட்டெலும்ப முறிக்கிறானே!
(மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், முரசு நெடுமாறன். பக்கம்336)

மலாயாவிற்குக் கொண்டுவரப்பட்ட நம் முன்னோர்களின் வாழ்வினைப் பற்றி ஏராளமாகப் படித்தாயிற்று. அவர்களின் தொழில், வாழ்வு நிலை, போராட்டம்,சம்பளம், உணவு, தங்குமிடம் எனப் பல செய்திகளை பல்வேறு ஊடகங்கள் வழியாகப் படித்தறிந்திருக்கின்றோம். எல்லா நிலைகளிலும் அவர்கள் நிறைவான வாழ்வினைப் பெறவில்லை என்பதுதான் உண்மையாகும்.
 

 


பல்வேறு குறைபாடுகளுக்கும் இன்னல்களுக்கும் ஊடேதான் அவர்கள் தம் வாழ்வினை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். மலாயாவிற்கு வாழ்வு தேடி வந்த இப்பெருமக்களுக்கு, தமிழக உறவுகளை வாழ்விக்க வேண்டுமென்ற மிகப்பெரிய கடப்பாடும் இருந்தது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே பெறப்பட்ட மிகக் குறைந்த சம்பளத்தை (மேற்காணும் பாடலை நோக்கிடுக) சேமித்து ஊரில் இருக்கும் உறவுகளுக்கு அனுப்ப வேண்டுமென்ற பெரும் பொறுப்புணர்வு இருந்தது.

இத்தகைய பொறுப்புணர்வு அன்று பெருவாரி மக்களிடம் இருந்தது. அவர்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக செயற்பட்டனர். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டிய நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று வேலை செய்யும் பெரியவர்களிடமும், இளையோர்களிடமும் இந்நிலையைக் காண்பது அரிது.

16. ஜூன், 1953- இல், அ.சீனிவாசன் என்பவர் தமிழகத்தில் இருக்கும் தன் உறவுக்காரருக்கு உரூபாய் முப்பது அனுப்பியிருக்கின்றார். இதற்காக இவர் பயன்படுத்திய மலாயா வெள்ளி 19.93 ஆகும். அக்காலத்தில் ஒருவரின் மாத வருமானம் பதினோரு வெள்ளி எழுபது காசுகளாக இருந்திருக்க வேண்டும் (45 காசுகள் x26 நாள்கள் =11.70). அப்படியென்றால், இவர் சற்றேரத்தாழ இரு மாதச் சம்பளத்தைத் தம் உறவுகளுக்கு அனுப்பியுள்ளார். இப்பணத்தை எத்தனை மாதங்களுக்கு மிச்சப்படுத்தியிருப்பார், இதற்காக தன் தேவைகளை எவ்வளவு சுறுக்கியிருப்பார் என்பதை எண்ணும்போது வியப்பாக இருக்கின்றது. இவர், பணம் அனுப்பியதற் கான அஞ்சல் நிலையப் பற்றுச் சீட்டு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

அனுப்புநர் : அ.சீனிவாசன், தம்பாங் தோட்டம், பத்து அன்னம்.

பெறுநர் : பிச்சைக்காரன் த/பெ வீரமலை
வத்தலை, பாண்டிபுரம்
லாலுகுடி, திருச்சி.

பற்றுச் சீட்டில் தன் கையொப்பத்தைத் தமிழில் இட்டுள்ளார். இவரது இனவுணர்வும் மொழியுணர்வும் இதன் வழியாக வெளிப்படுகின்றது. இன்றைய நிலையில் காண்பதற்கரிய செயலாக இது உள்ளது. நம் தொப்புள்கொடி உறவிற்கான மீட்பு முயற்சி வேண்டப்படுகின்றது.

 

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com