"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
13 அக்டோபர் 1948 -
மூன்றரை அணா கடிதம்
பல்வேறு வாழ்வியல்
தேடலை முன்னிட்டே தமிழகத் தமிழர்கள் மலாயாவிற்கு வந்தனர்.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்னும் முதுமொழிக்கேற்ப, பொருள் தேடி
நல்லதொரு வாழ்வினை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அன்றையத்
தமிழர்களின் பெரு நோக்கமாக இருந்தது.
புற நிலங்களுக்குச் சென்று பொருள் தேடும் வழக்கு, தமிழர்களுக்குப்
புதியதன்று. தமிழர்களின் தொல் வரலாற்றுப் பெட்டகமான
தொல்காப்பியத்தில் இதற்குரிய சான்றுகள் உள்ளன. தொல்காப்பியம் பொருள்
தேடும் பொருட்டு மேற்கொண்ட பயணத்தைப் பற்றி:
இழைத்த
ஒண்பொருள் முடியவும் பிரிவே
[தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - 30]
பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே
[தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - 35]
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான
[தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - 36]
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
[தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - 37]
என்றவாறெல்லாம் உரைக்கின்றது. நிலம் கடந்து, கடல் தாண்டி பொருள்
தேடும் செயல் தமிழர்களின் மரபார்ந்த செயலாகும். அவ்வாறு பொருள் தேட
மலாயாவிற்கு வந்த தமிழர்கள், தாய்த் தமிழகத்திடமிருந்து தங்களை
முற்றாக அறுத்துக் கொண்டு வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லை. மாறாக
மலையகத் தமிழர்களுக்கும் தாய்த் தமிழகத்தாருக்குமிடையே மிக
நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. மலையகத் தமிழர்கள் தாம் விட்டு
வந்த மனைவி மக்கள், தாய் - தந்தையர், உறவுக்காரர்கள், மொழி, சமயம்,
மண்ணின் மணம், கலை, பண்பாடு என எல்லாவற்றையும் கட்டிக்காக்கும்
மனமும் திறனும் பெற்றவர்களாக இருந்தனர். அப்போது அவர்களது
முதன்மையான தொடர்புக் கருவியாக இருந்தது கடிதமாகும்.
அக்டோபர்
13. 1948-இல், சீனிவாசன் என்பவருக்குத் தமிழகத்திலிருந்து
மருதமுத்து என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார். இக்கடித உறை இங்கு
பார்வைக்கு வெளியிடப்படுகின்றது. அக்டோபர் 13. 1948-இல்
திருச்சிராப்பள்ளி குணசீலம் தபால் நிலையத்தில் இக்கடிதத்திற்கு
முத்திரை குத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 15. 1948-இல் மெட்ராஸிற்க்கு
இக்கடிதம் வந்தடைந்து பின்னர் அக்டோபர் 17. 1948-இல் அங்கிருந்து
மலாயாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் முன்பக்க வலது மேற்புறத்தில் ஒன்றரை அணாவிற்கான
(ONE AND A HALF ANNAS) முத்திரை அச்சிடப்பட்டுள்ளது. பின்புறத்தில்
அரை அணா மதிப்புடைய நான் அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆக,
இக்கடிதம் அனுப்புவதற்கான மொத்த செலவு மூன்றரை அணாவாக இருந்திருக்க
வேண்டும்.
இக் கடித உறையின் முன்பக்கத்தில்
மகா...
சீனிவாச முத்தரியர்
சோகூர்பார் சேர்ந்த
பத்து அன்னம் போஸ்ட்டு
தெம்பாங் 4 கட்டை
எனப் பெறுநரின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புநர்,
மருதமுத்து கொணசீலம் எனவும் எழுதப்பட்டுள்ளது.
நம்முடைய வரலாற்றுப் பொட்டகத்தை வலுப்படுத்தும் இன்னுமொரு சான்றாக
இது அமையும் என்பதில் ஐயமில்லை.