"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்


முதியோர் கல்விச் சான்றிதழ்

 

 

குறிப்பிட்ட ஒன்றினைப் பற்றிய வரலாற்றுச் சூழலுக்கு இன்ன சான்றுதான் ஏற்புடையது என அறுதியிட்டுக் கூறிட முடியாது. அதற்கான ஏற்புடைய எல்லாமும்தாம் வரலாறாகவே மாறுகின்றன. காலமும் களமும் துணையாகவிருந்தால் தொடங்கி முடியும் அத்தனையும் வரலாறாகவே ஆகின்றன. சான்றுகளே வரலாற்றுக்குரிய களனாக இருக்கின்றன.

கல், மண், மணல், தாள், பாண்டம், எலும்புகள், கருவிகள், மொழி, இலக்கியம் என எல்லாம் வரலாற்றுக்குரிய அகம், புறம் சான்றுகளாக விளங்குகின்றன. மலாயாவிற்குக் குடிவந்த நம் மூதாதையர்கள் தங்களோடு கொண்டு வந்தவை மிகச் சிலவே. தங்களின் உயிர், தாங்கள் விட்டு வந்த உறவுகளின் நினைவுகள், தம் தாய்மொழி, தங்களின் வாழ்வியல் பண்பாடுகள் என்பனவே அம்மக்களின் வாழ்வியல் கருவூலங்களாக இருந்தன.

மலாயாவில் காலடி எடுத்து வைத்தவர்கள், தங்களின் நிலைப்பாட்டினை ஓரளவிற்குப் புரிந்து கொண்டனர். கெழுத்தி மீனை விழுங்கிய கொக்காகிப் போயினர். விழுங்கியதை மெல்லவும் முடியவில்லை; வெளியே துப்பவும் முடியவில்லை. எது எப்படியாகிப் போனாலும் பிழைப்பினை ஓட்ட வேண்டும், என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. நாளடையில் எல்லாமும் பழகிப் போயின. வாழ்வும் வாழ்விடமும் ஒன்றாகிப் போயின.

சுதந்தரத்திற்குப் பின் மலேசிய அரசு இந்நாட்டு மக்கள் கல்வியை முனைப்புடன் கற்கவும், அதன்வழி உயர்வடைவதற்கும் பல நுட்பமான, தெளிவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரு நாடு சிறந்தோங்கிட அந்நாட்டுச் சிறுவர்களும் இளையோர்களும் மட்டும் கல்வி கற்றவர்களாக இருந்தால் போதாது. மாறாக, சிறுவர்களுக்கும் இளையோர்களுக்கும் வழிகாட்டிகளாக இருக்கும் முதியோர்களும் கற்றவர்களாக இருக்க இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் இந்நாட்டு மக்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்தோங்க முதியோர் கல்வித் திட்டத்தினைப் புறநகர் மேம்பாட்டு அமைச்சின் துணையுடன் நடத்தியது. வயது கடந்தவர்கள், இந்நாட்டுத் தேசியமொழியான மலாய் மொழியினைப் பேசுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் அடிப்படைத் திறனைப் பெற்றிருக்க வேண்டுமென எண்ணியது.

அதற்கேற்றாற்போல் சிற்றூர், தோட்டம் என எல்லா இடங்களிலும் முதியோர் கல்வி வகுப்பினைத் தொடங்கினர். இந்த வகுப்புகள் பெரும்பாலும் மாலை நேரங்களில் நடைபெறும். நாள்தோறும் இரண்டு மணிநேரத்திற்கு நடைபெறும் இந்த வகுப்பில் சேர்ந்து பயில்வதற்குத் தமிழர்கள் பலர் ஆர்வம் காட்டினர்.

இவ்வகுப்பில் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முறையாகக் கல்வி கற்றவர்களுக்கு அடைவுநிலைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 1962 முதற்கொண்டு 1965 வரை முறையாக வகுப்பிற்குச் சென்று கற்ற ஒருவருக்குக் கொடுக்கப்படுள்ள சான்றிதழ் வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெயர் : திரு. பெருமாள் த/பெ கோவிந்தன்
அடையாள அட்டை எண் : 7692973
இடம் : பேராக்
நாள் : 20.7.1965

அக்காலத் தமிழர்கள் கல்வியின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு இது  ஒரு வரலாற்றுக் குறியீடாக இருக்கின்றது. இந்நாட்டுத் தேசிய நீரோட்டத்தினின்று விடுபடாமல், தமிழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட நிலையினை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
 

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com