"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
டிசம்பர் 1946-இல்
சிலாங்கூர் தோட்டங்களில் தொழிலாளர்களின் நிலை
அறிக்கை எண் - Ref.No in DCL.Sel.100/46.
1946-இல் சிலாங்கூரிலுள்ள 29
தோட்டங்களில் தொழிலாளர் வாழ்வியல் தொடர்பான குறுகிய ஆய்வொன்று
மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை யில் அப்போதைய தமிழர்களின்
வாழ்வியல் நிலை தொடர்பான பல செய்திகள் உள்ளன. இந்த அறிக்கை
உள்ளீடாகப் பல செய்திகளை நமக்கு உணர்த்து கின்றது. வெள்ளைக்காரர்கள்
தோட்டத் தொழிலாளர்கள்பால் கொண்டிருந்த சிந்தனை, தமிழர்களின்
வாழ்வியல் ஈடுபாடு, தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரம்,
தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம், உணவுப்பொருள்களின் விலை,
தோட்ட அமைப்புமுறை, தொழி லாளர்களின் செயற்பாடுகள், வேலை
நிறுத்தங்கள், தொழிலா ளர்களின் போராட்டங்கள், தோட்ட
நிருவாகத்தினரின் நடவடிக்கைகள், கள் விற்பனை போன்ற பல செய்திகள்
இந்த அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு பத்துப்பக் கங்கள் கொண்ட அறிக்கை யாகத்
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மலேசியப்
பழஞ்சுவடிக்காப்பகத்தில் உள்ளது. இந்த அறிக்கையில் காணப்படும்
செய்திகளில் சிலவற்றினைக் காண்போம்...

20.11.1946-இல்
பத்து ஆராங் மலேசியன் நிலக்கரிச் சுரங்கத்தின் 300
தொழிலாளர்களுக்குப் பணிநீக்கம் செய்யப்படுவதற்கான கடிதம்
கொடுக்கப்பட்டது. இவர்கள் 30.11.1946 முதற்கொண்டு பணிநீக்கம்
செய்யப்படுவதாகக் கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்தது.
நிருவாகத்திற்குப் போதுமான வருமானம் இல்லாததால் இந்நடவடிக்கை
எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இதனை எதிர்த்துத்
தொழிலாளர்கள், 30.11.1946-இல் போராட்டம் நடத்தியுள்ளனர். பணிநீக்கம்
செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படாவிட்டால்
எல்லாத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வர் என வலியுறுத்
தப்பட்டது. ஆலையில் போது மான வருமானம் உள்ளது, பணிநீக்கம்
செய்யப்படுபவர்கள் நீண்ட நாள்களுக்குத் தொழில் புரிந்த பணியாளர்கள்
ஆவர் என்ற காரணங்கள் முன்னிட்டு போராட்டம் நடத்தப்போவ தாகத்
தொழிலாளர்கள் கூறினர்.
இதன் தொடர்பாக
27.11.1946-இல் தொழிலாளர் சார்பாளர், ஆலை நிருவாகத் தினர், துணை
தொழிலாளர் ஆணையர் ஆகியோருக் கிடையே பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டுள்ளது.
********************
12.12.1946-இல் டூசுன் டுரியான் தோட்டத்தில் (Dusun Durian Estate)
எட்டுத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்துத்
தோட்டத் தொழிலா ளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின்போது தொழிலாளர்கள் பத்துக் கோரி க்கைகளை
முன்வைத்துள்ளனர்.
அவை:
1. நீர்க்குழாய்கள் பழுதுபார்க்கப்பட வேண்டும், 2. வீடுகளைப் பழுது
பார்க்க வேண்டும், 3. குறைந்த விலை அரிசி, 4. ஞாயிற்றுக்கிழமை வேலை,
5. பால்மரங்களுக்கு இடையிலான பாதைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்,
6. தாதியர்கள் வேலைக்கு அமர்த்த வேண்டும், 7. நான்கு மாதங்களுக்கான
பிள்ளைப்பேறு சலுகை, 8. கூட்டுறவு முதலீட்டை திரும்பக் கொடுத்தல்,
9. சயாம் மரண இரயில்பாதைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட
வேண்டும், 10. வேலை நிறுத்தம் செய்யப்பட்ட எட்டுத் தொழிலாளர்களை
மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பன.
இதன் தொடர்பாகத்
தோட்ட மேலாளர் தொலைப்பேசி வழியாக, 1, 2, 5, 6, 8 போன்ற
கோரிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.
********************

தொழிற்சங்க
அதிகாரிகள் கேடுகள் விளைவிக்கும் பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
டூசுன் டுரியான் (Dusun Durian) தோட்டத் தொழிற்சங்க அதிகாரிகள்
சொந்தமாகப் பாதுகாப்பு அணியினரையும் (Volunteer army), குற்றம்
செய்பவர்களுக்கும் சங்கத்தைப் பற்றி குறை சொல்பவர்களுக்கும் தண்டனை
வழங்கும் நீதிமன்றங்களையும் (Own court) வைத்திருந்தனர்.
சங்கத்தாரின் இச்செயல்களைப் பற்றிப் புகார் கொடுப்பதற்கு யாரும்
முன்வரவில்லை.
சுங்கை வே
தோட்டத்தில் கிராணி ஒருவர் பெண்ணிடம் அணுக்கமான உறவு வைத்துக்
கொண்டிருந் ததால் சங்க அதிகாரிகளால் மரத்தில் கட்டி வைத்து அடித்
துத் துன்புறுத்தப்பட்டுள்ளார். செய்தியைக் கேள்வியுற்ற தோட்ட
மேலாளர், நிகழ்விடத் திற்குச் சென்று கண்டுள்ளார். இதனைப் பற்றிக்
கிராணி காவல்துறையினரிடம் முறை யிட்டுள்ளார்.
பண்டமாரான்
தோட்டத்தில், தகாத நடத்தையால் ஒரு பெண் பஞ்சாயத்துக்காரர் களால்
மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டுள்ளார்.
ஒரு தோட்டத்தில் சீன மொழி பேசும் இரண்டு தமிழர்கள் உட்பட சங்க
அதிகாரிகளும் சீன கம்யூனிஸ்டு களோடு தொடர்பு வைத்திருந் தனர்.
இத்தகைய குற்றங்களுக்கு எதிராக காவல்துறையினரும் நீதிமன்றங்களும்
கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சூழல்களில்
வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகளையும் ஜப்பானிய முறையிலான தண்டனை
முறைகளையும் பொறுத்துக் கொள்ளக்கூடாது. பிரிட்டிஷ் காலனித்துவ
நாடுகளில் இத்தகைய குறைபாடுகள் நிகழக்கூடாது.
*******************
கோல லங்காட் வட்டாரத்தில் கள் விற்பனை பரவலாக நடத்தப்பட்டுகின்றது.
கள் விற்பனையை மறுத்துத் தொழிற்சங்கத்தார் பல கூட்டடங்கள்
நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், கூட்டத்தில் கள் விற்பனையை
மறுத்துப் பேசிய தொழிற்சங்கத்தவர்களே கள்ளைக் குடித்து ஆட்டம்
போட்டுள்ளனர்.
மறுநாள் தோட்ட
மேலாளர், குடித்து களியாட்டம் போட்ட சங்கத்தார்களை வரிசையில்
நிறுத்தி, இவர்களின் களியாட்டத்தைப் பற்றித் தேசியத் தொழிற்சங்க
ஆலோசகரிடம் சொல்லப்போவதாக மிரட்டியுள்ளார். குடிக்கும் பழக்கத்தைக்
கொண்ட மேலாளர், குடித்து ஆட்டம் போட்ட தொழிற்சங் கத்தினரைப் பற்றி
தொழிலாளர் உதவி ஆணையரிடம் (The Assistant Commissioner for Labour)
தக்க சான்றுகளோடு குற்றமனு கொடுத்துள்ளார்.
மற்றொரு
தோட்டத்தில் தொழிற்சங்கத்தார், மதுபோதையில் இருந்த ஒருவரைப்
பிடித்து தலையை மொட்டையடித்து வெள்ளைப் பொட்டு இட்டுள்ளனர்.
********************
பல வேளைகளில் இந்தி யத் தொழிலாளர்கள் வாழ்வி யலுக்குப் பொருந்தும்
தன்மை யில் செயற்படுகின்றனர். பெரிய தோட்டத்தில் வேலை செய்யும்
தொழிலாளர்களு க்குச் சில சலுகைகளும் தீபாவளி அன்பளிப்பும் கொடுக்
கப்பட்டது. இதனைக் கண்ட பக்கத்திலுள்ள இயங்கும் சிறிய தோட்டத்
தொழிலாளர் கள் தங்களுக்கும் அவ்வாறான சலுகைகளும் தீபாவளி அன்
பளிப்பும் கொடுக்க வேண்டு மென வற்புறுத்தினர்.
இச்செய்தி
தொழிலாளர் உதவி ஆணையருக்கு எட்டி யது. பின்னர் இவருக்குத் தோட்ட
நிருவாகத்தினர் விளக்கம் கொடுத்தனர். பெரிய தோட்டத்து
நிருவாகத்தினர் தங்கள் வருமானத்திற்கு ஏற்பத் தம்
தொழிலாளர்களுக்குச் சலுகையும் அன்பளிப்பும் கொடுக்கப்பட்டதாகச்
சொல்லப்பட்டது.
********************
பத்துப் பக்கங்கள் கொண்ட சிறிய அறிக்கையாக இருந்தாலும், இந்த
அறிக்கையின் வழியாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன.
தமிழ் இனத்தாரின் வியர்வையைச் சிந்தலுக்கான வரலாற்றுப் பக்கங்களாக
இந்த அறிக்கை உள்ளது.