"ஆவணம் "ஓர் ஆலின் வேர் தேடி"- கிள்ளான் சீ. அருண்
மலேசியக் குடியுரிமை
விண்ணப்பம்
மலாயாவுக்குப் புலம்
பெயர்ந்திட இந்தியர்களின் முக்கியக் காரணங்கள் தற்காலிக நிவாரணத்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இருந்தன. 1860-1957களில் நாற்பது
இலட்சம் (4 மில்லியன்) இந்தியர்கள் வந்துள்ளனர். இதில் 28 இலட்சம்
(2.8 மில்லியன்) பேர் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர். எஞ்சிய 12
இலட்சம் (1.2 மில்லியன்) இந்தியர்களில் பெரும்பாலோர் நோய்களாலும்
பாம்புக்கடிகளாலும், போதிய சத்துணவு இல்லாததாலும் இறந்துள்ளனர்.
(சான்று: 1957-ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
-நன்றி: மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை, பக்கம் 39-
ஜானகிராமன் மாணிக்கம்)

இந்நாட்டில் நம்முடைய
வாழ்வு என்பது மேலாகப் படர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சல்லி வேர்கள்
போன்றதல்ல. அ·து ஆழமும் அகலமும் கொண்ட ஆளுமைப் பெற்ற வேர்களாக
இருக்கின்றன. இன்றைய நம் ஆளுமைகளும் அடைவுகளும் நம்மால் தொடங்கி
தொடரப்படுவதல்ல. நம் முன்னோர்களின் பொறுப்புணர்ச்சியாலும், உடல்
உழைப்பாலும், மன வேட்கையாளும் கிடைக்கப்பெற்றதே இன்றைய நமக்குரிய
வாழ்வாகும்.
இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை கிடைப்படற்கு நம்மவர்கள்
பட்டபாட்டை தாளம் அறியுமோ தறி அறியுமோ என்றுதான் சொல்ல வேண்டும்.
குடியுரிமைக்காக நம் பெரியவர்கள் நடத்தியப் போராட்டங்கள் எண்ணில்
அடங்கா. அவர்களின் விடாமுயற்சியும் வாழ வேண்டுமென்ற வேட்கையுமே
இன்று நாம் இந்நாட்டின் தேசியக் குடிமக்களாக இருப்பதற்கான
அடிப்படைக் காரணமாகும்.
1964-இல் ஒருவரின் குடியுரிமை விண்ணப்பத்திற்குக் கொடுக்கப்பட்ட
குடியுரிமைப் பதிவுச் சான்றிதழ் நமக்குக் கிடைத்துள்ளது. அ·து
உங்கள் பார்வைக்காக வெளியிடப்படுகின்றது.
மலாயா கூட்டரசுச் சட்டம்
பிரிவு 16- இயல் 23
எண் 09146
ஓ பாரம்
பதிவுச் சான்றிதழ்
கங்கம்மா @ பாக்கியம் த/பெ மாரியப்பன் என்பவர் கூட்டரசுப்பிரதேச
மலாயாவின் குடியுரிமைக்காகச் சட்டப்பிரிவு 16-இன் கீழ்
விண்ணப்பித்துள்ளார் ______________________
கங்கம்மா @ பாக்கியம் த/பெ மாரியப்பன் அவர்கள் கூட்டரசு மலாயாவின்
குடியுரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
நாள் : 25.2.1964