மலேசியத் தமிழறிஞர்கள்
எழுதிய எழுத்துக்கோ பேச்சுக்கோ நான்
கூலி வாங்கியது கிடையாது !
கடாரத் தமிழ்ப் பேரறிஞர் மருத்துவர்
ஐயா சி.ஜெயபாரதி அவர்களுடன் ஒரு நேர்காணல்
மருத்துவர் ஜெயபாரதியை அறிந்தவர்கள்
உலகெங்கும் இருக்கிறார்கள். இதழ்கள் வாயிலாகவும், பல மேடை அரங்குகள் வாயிலாகவும்,
வானொலி மூலமாகவும், லட்சக்கணக்கான மக்களுடைய உள்ளங்களில் இடம்
பெற்றிருக்கிறார்.
தமிழுக்கும்
சமயத்திற்கும் சமுதாயத்திற்கும், ஒருங்கே அவர் ஆற்றியுள்ள தொண்டு இணையற்றது.
அவருடைய மருத்துவத்துறையில், அவருடைய அறிவையும்,
ஆற்றலையும் பயன்படுத்தி பெரும் பான்மையான
மருத்துவர்கள் செய்வதுபோல
தனியார் மருத்துவமனைகளை
நிறுவி பெரிய பணக்கார
மருத்து வராக அவர்
விளங்கியிருக்க முடியும். ஆனால் அரசுத் துறையில் குறைவான
ஊதியத்திற்கு பல
இன்னல் களுக்கு இடையே
பொது மக்களுக்காக சேவை செய்திருக்கிறார். அதுவும் குறிப்பாக ஏழை
மக்களுக்காக உழைத்திருக்கிறார். சமயம், கலாச்சாரம், மொழி
ஆகிய பல எல்லைகளையும் கடந்து ஏழை மக்களுக்கு அவர்
தொண்டாற்றியிருக்கிறார்.
மாவட்ட நலவியல் அதிகாரியாகவும், பெரிய மருத்துவ மனைகளுக்கு தலைமை
மருத்துவராகவும், இயக்கு நராகவும் பொறுப்பான பதவிகளில் இருந்தவருக்கு
நேரம் கிடைப்பது அரிது. இம்மாதிரி கிடைத்த நேரத்தையும் கூட தனக்காக
செலவிட்டுக்கொள்ளாமல் சமயத்திற்கும், மொழிக்காகவும்
செலவிட்டிருக்கிறார். இவ்வளவு ஆற்றல் வாய்ந்த அறிஞராகிய
மருத்துவர் அவர்களை இவ்வாறு மக்கள் தொண்டோடு மகேசன் தொண்டையும் செய்வதற்கு
வாய்ப்பளித்து உறுதுணையாக இருப்பதன் மூலம்
மருத்துவரின் மனைவியும் இரண்டு மக்களும்
அளப்பரிய பங்காற்றுகின்றனர்.
நமது புராதன கலைகள் அறுபத்து நான்கில் முப்பத்து நான்கு
அருங்கலைகளை நன்கு
அறிந்தவர். அவற்றில் சோதிடம், இசை, சிற்பக்கலை, எழுத்தாற்றல்,
பேச்சாற்றல் முதலியவற்றில் சிறப்புப் பெற்று விளங்குகிறார்.
ஐயாவிடம் நான் பதிவு
செய்த நேர்காணலில் அவர் சொல்லிய செய்திகளை முடிந்தவரை தொகுத்தி
ருக்கிறேன். இன்னும் எழுத வேண்டும். சில இடங்களில் அவர் தம்
வரலாற்றைச் சொல்வது போலவே பதிவாக்கி இருக்கிறேன். மலேசியாவில்
கெடா மாநிலத்தில் உள்ள சுங்கைப்பட்டாணி நகரில் உள்ள ஐயாவின்
வீட்டில் இந்நேர்காணலை பதிவு செய்தேன். மலேசியத் தமிழ்ச் சமூகம்
போற்றிக் கொள்ள பெருமகன்களின் ஜெயபாரதி ஐயா குறிப்பிடத்தக்கவர்.
அவரின் பணிகள் வரலாற்றில் நிலை பெற்று நிற்கும்.
ஐயாவுடன் உரையாடிய அந்த
3 மணி நேரங்கள் வரலாற்றில் நான் தொடர வேண்டிய பணிகளை மிக
துல்லிதமாக உணர்த்திற்று. இனி உரையாடலை தொடர்வோம். -
வீ.
பூங்குன்றன்.
மருத்துவரின் இளமைக் காலம்
என்னுடைய தந்தையார் நாத்திகர். பெரியாரின் சீடர்; எங்கள்
குடும்பம் நல்ல தமிழ் மரபும் பாரம்பரியமும் கொண்டது. இயற்கையிலேயே
தமிழ் ஆர்வம் எனக்கு அமைந்துவிட்டது. சிறுவயதில் மதுரையில் எனக்கு கல்விப் புகட்டிய பிரம்மசிறி
சுப்பிரமணிய சாஸ்திரியார்
நம் சமயத்தைப் பற்றிய பல விவரங்களை
எளிய சிறிய கதைகளாகக் கூறினார்.
நிறையப் படிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், சிந்திக்க
வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்னும் உந்துதல்
ஏற்பட்டது. என் தந்தையாரும் நிறைய ஊக்கமூட்டி பகுத்தறிவுடன் சிந்திக்க
வைத்தார். சிறுவயதில் நான் படித்த தமிழ்வாணன் நூல்கள் பெருந்துணையாக இருந்தன.
மதுரையில் மருத்துவக்கல்வி பயின்ற சமயத்தில் மதுரை ஆதீனத்தின்
முந்தைய தலைவராகிய சோம சுந்தர தேசிக திருஞானசம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகளின்
தொடர்பு ஏற்பட்டது. ஆவி உலக
ஆராய்ச்சியில் கை தேர்ந்தவர். நாடி
சோதிடச் சுவடிகளும்
வைத்திருந்தார். பிற்காலத்தைப்பற்றி சில
செய்திகளைச் சொன்னார். நான்
செய்ய வேண்டியவற்றையும் கூறினார். ஆனால் அந்தக் கருத்துகளின்
ஆழத்தையும் உண்மையையும் நான் அன்று உணரவில்லை.
தமிழ் வரலாறு, அகழ்வாராய்ச்சி போன்றவற்றையும் செய்து சில சாதனைகளைப்
படைத்தேன். அந்த ஆய்வின் போது நான் கண்ட பல வரலாறு உண்மைகள் என்னை
புதிய திசை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தன.
பிறகு தமிழகத்தின் தலைசிறந்த மேதைகளில் ஒருவராகிய டாக்டர்
ஏ.வி.
ஜெயசந்திரனின் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவரும் நாடி
சோதிடத்தில் வல்லவர். அவரும் சில மர்மமான
விவரங்களையும் விளக்கினார்.
என்னுடைய குருவின் பெயர் ஆசுகவி வேலவனார். சிறந்த தமிழ், வடமொழி
அறிஞர். எடுத்த எடுப்பில் கவி பாடுவார். சிறந்த
சோதிடர், அவருடைய
அருளால் சோதிடத்தின் மர்மமான பிரிவாகிய பிரஸ்ன தந்திரம், பஞ்சபட்சி
சாஸ்திரம், ஸ்வரசிந்தாமணி ஆகியவற்றை அறிந்து கொண்டேன்.

ஓலைச்சுவடி ஆய்வில் மருத்துவர்
என்னுடைய குருவிற்குக் குருவாகிய நெடிமிண்டி பிரம்மசிறி
சுப்பிரமணியர் பெரிய புலவர். அதுவரை மறைந்து போன பல நூல்களைத்
தேடியெடுத்து வெளியிட்டவர். ருத்ரயாமளம், வரிவஸ்யா ரஹஸ்யம்,
பரசுராம கல்ப சூத்திரம் போன்ற நூல்கள் இருந்த இடம் தெரியாமல்
போயிருக்கும். லலிதா சஹஸ்ரநாமத்தை உலகப் புகழ் பெறச் செய்து
பரப்பியவரும் அவரே. பெண்கள் மந்திர உபாசனையும் செய்து
மற்றவர்களுக்கும் செய்யலாம் என்று வலியுறுத்தியவரும் அவர்தான்.
தமிழில் நூற்றெட்டு சமய நூல்களை எழுதி வெளியிட்டவர் பிரதிபா
பிரசுரத்தின் டாக்டர் நஜன். நஜன் புத்தகங்களை அறியாத தமிழ்
இந்துக்கள் சிலரே. நஜனுடைய குருநாதாரும் இவர்தான். அவருடைய குருவாகிய குகாநந்தர் மிகப் பெரிய சித்தர்.
சில சித்தர்களின் தொடர்பும் எனக்கு உண்டு. ஆனால் சித்த மரபு
கமுக்கமானது. வெளிப்படுத்துவதில்லை. நான் திருப்புத்தூரில்
ஸ்வீடிஸ் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றும் போது இஸ்லாமிய சூஃபி
(Sufi) மார்க்கத்தை அறிந்துகொள்ள முடிந்தது. இதுவும் ஒரு சித்தர்
கோட்பாடுதான்.வஹாப் என்னும் சூஃபி
பெரியவர் இதனை உணர்வித்தார்.
இஸ்லாத்தைப் பற்றி கொழும்பு நகரின் மசூதியைச் சேர்ந்த அஃப்சல் உல்
உலேமா என்பவர் சொல்லிக் கொடுத்தார். நான் படித்த மெத்தடிஸ்ட் பள்ளியில் கிருஸ்துவத்தைப்பற்றி
படித்திருந்தேன். பள்ளி இறுதித்
தேர்வில் பைபிள் புதிய ஏற்பாட்டை
ஒரு பாடமாக எடுத்து
தேர்ச்சி பெற்றேன்.
சிவசக்தியின் திருவருளால் வாக்குப்
பலித்தல் போன்ற சில ஆற்றல்கள்
ஏற்பட்டன. தீவிர உபாசனையால் அவற்றிற்கு பலம் ஏற்பட்டது. வாழ்க்கையில் பல ஆபத்துகள் தோன்றி தோன்றி என்னை முழுமையான
ஆன்மிகவாதியாக்கிவிட்டன.
தொழில் புரியும் நேரம் தவிர்த்து மற்ற நேரத்தையெல்லாம் ஆன்மீகம்,
தமிழ், மக்கள் சேவை என்றே கழிக்கலானேன். விடுமுறைகள் அனைத்தும்
இதற்கே பயன்பட்டன.
பெரியவர்கள் பலரின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் என்னுடைய வாழ்க்கை
தமிழ், சமயம், சமுதாயத் தொண்டாக மாறிவிட்டது.
இலட்சக்கணக்கில் செலவழித்து ஆயிரக்கணக்கில் நூல்கள் வாங்கியாயிற்று.
ஆயிரக்கணக்கான மணிநேரத்தைச் செலவழித்து விட்டாயிற்று.
இதுவரை எழுதிய எழுத்துக்கோ பேச்சுக்கோ கூலி வாங்கியது கிடையாது.
பெரிய பணக்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள் கூட பணம் கொடுப்பதில்லை.
இலவசமாக எழுதிப் பணத்தைச் செலவழித்து
அஞ்சலில் அனுப்பவேண்டிய
நிலைதான். அந்த எழுத்துக்கும், பேச்சுக்கும் அடிப்படையாக எவ்வளவு
பணச்செலவு, உழைப்பு, ஆய்வு முதலியவை இருந்திருக்கும் என்று யாரும்
சிந்திப்பதே கிடையாது. எந்த நிறுவனமோ இயக்கமோ, அரசியல் கட்சியோ,
தலைவரோ, ஆலயமோ இதுவரை என்னை ஆதரித்தது கிடையாது. உழைப்பை
பயன்படுத்திக் கொண்டவர்கள்
பலர்.
பொதுவாக நம் நாட்டு
ஊடகத்தில் ஏற்கனவே
தமிழகத்தாருக்குதான் வெளிச்சம், மாலை,
மரியாதையெல்லாம். உள்நாட்டுக்காரனுக்குக் கைகொடுப்பது கிடையாது.
வைரமுத்து, வலம்புரிஜான், மேத்தா, நாசர் போன்றவர்களைத் தவிர
தமிழ்கூறும் நல்லுலகத்தில் வேறு அறிஞர்களே இல்லை என்ற உணர்வை நம்
நாட்டில் சில
ஊடகங்கள் ஏற்படுத்தி
விட்டன.
நம்முடைய இன்றைய தற்காலிக வளத்தை மட்டும் கண்டு ஏதோ ஒரு வகை
போதையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
எனவேதான் எதிகாலத்தைப்பற்றியும்
நம்முடைய அடுத்தடுத்த தலைமுறைகளையும் பற்றி நாம் சிந்திக்கவில்லை.
குற்றச் செயல்கள், கொள்ளை, கொலை, குண்டர்த்தனம், குடி, தற்கொலை,
போதைப்பித்து, சுரண்டல், ஏய்ப்பு, அடிதடி சண்டை, தகராறு, ஏழ்மை,
பொருளாதாரச்சரிவு, கல்வியில் பிற்போக்கு நிலை, சமுதாயத்தட்டில்
நம்முடைய நிலை போன்றவை அனைத்திலுமே நம்மைப்பற்றி கொடுக்கப்படும்
புள்ளி விவரங்கள் வெளிவரும் செய்திகள் பயத்தைத் தருவதாகவே
அமைந்துள்ளன..
நம் சமயத்திலோ......?
ஆர்ப்பாட்டமான, ஆரவாரமான, ஆடம்பரமான விழாக்கள் மலிந்துவிட்டன.
பெரும்பொருள் செலவழித்து, ஆடம்பரமாகச் செய்யப்படும்
சடங்குகளால் தெய்வத்தின் பேரருளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற
கருத்து வலியுறுத்தப்படுகிறது.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரிய இரும்புத்திரையை நம்
நாட்டில் உள்ள பல
நம் சமயவாதிகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதையெல்லாம் பற்றி மிக விரிவாக
“நம் சமயம்- நேற்று, இன்று, நாளை',
என்னும் ஆய்வு விரிவுரையில் விளக்கியுள்ளேன்.
மாற்றுத் தீர்வும் கூறியுள்ளேன்.
நழுவவிட்டதைப் பிடிப்பது
கடினம்! இருப்பதையாவது நழுவவிடாமல்
இருக்கவே என்னுடைய சமய, சமுதாய இலக்கியப் பணிகளை அமைத்துக்
கொண்டுவிட்டேன்.
பெரியவர்கள், சித்தர்கள் என்னிடம் கூறியதை என் நிலைமைக்கும் மீறியே
நான் இதுவரை செய்துவிட்டேன்.
முழுநேர சமய சமுதாயப் பணி செய்யுமாறு பலர் என்னிடம் கூறிக்கொண்டே
இருக்கிறார்கள்.
முழு நேர அலுவலாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கு பக்கபலமும்
வேண்டும். அதற்கென்று ஒரு நிறுவனம் வேண்டும். இயக்கம் வேண்டும்,
ஊடகம் வேண்டும், பலருடைய ஆதரவு வேண்டும், ஒத்துழைப்பு வேண்டும்,
பொருளாதாரம் வேண்டும்.
இப்பணி வெற்றி பெறவேண்டுமானால் நிறைய
விளம்பரம் வேண்டும். அப்போதுதான் மக்களுக்குத் தெரியும்; புரியும்;
ஏற்றுக்கொள்வார்கள்.சில நடைமுறைத் திட்டங்கள் என்னிடன் உள்ளன.
அவற்றில் நான் என்னை ஈடுப்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட அளவில்
சில நல்ல விளைவுகளைக் காணலாம்.
உறுதியாக காணலாம்.
"என்னுடைய போராட்டம்" என்னும் ஒரு நூலை சில ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஒரு நல்ல
குறிக்கோளுக்காக தன்னலம் கருதாமல் ஒரு குடும்பம் செய்த
தியாகத்தையும் முயற்சிகளைப் பற்றியும், இந்த இருபதாண்டு காலமாக
அந்த முயற்சிகளுக்கு யாரெல்லாம் எப்படி எதிர்ப்பையும்
இடைஞ்சல்களையும் ஏற்படுத்தினார்கள் என்பதையெல்லாம்
எழுதி வைத்திருக்கிறேன்.
எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு சில நல்ல விளைவுகளை என்னுடைய
முயற்சிகள் விளைவிக்கும் என்ற நம்பிக்கை
இப்போதும் இருக்கிறது.
இணையத்தில் பெருஞ்சாதனை
இணையம் இப்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது. அச்சில்
வெளிவருவனற்றைவிட வீச்சும் பரிணாமும் மிகவும் அதிகம். இணையத்தில்
தமிழ் வலம் வருகிறது. பல கூறுகளும் துறைகளும் தன்னகத்தே
கொண்டிருப்பது இணையம். அவற்றில் போரம் என்று சொல்லப்படும்
கலந்துரையாடும் மன்றங்கள், மின்மடல்கள், மடலாடுமன்றங்கள்,
வலைப்பக்கங்கள், வலையகங்கள் முதலியவை தகவல் பரிமாற்றங்களுக்குரிய
ஊடகங்களாக விளங்குகின்றன.
மருத்துவர் ஜெயபாரதி
ஐயா ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் இணையத்தில்
நுழைந்தார். அப்போதிருந்து இணையத்தில் - குறிப்பாக மடலாடல்
குழுக்களில் நிறைய எழுதி வருகிறார்.
மருத்துவர் ஜெயபாரதி இணையத்தில்
(JayBee) ஜேய்பி என்னும் பெயரில்தான் மிகப்
புகழ்பெற்று விளங்குகிறார்.
இணையத்தமிழர்களில் பலர் மிகவும்
மதிப்புடன் பயன்படுத்தும் பெயராக ‘ஜேய்பி'
விளங்குகிறது. பழந்தமிழ் இலக்கியம், தமிழர் அறிவியல், கலாச்சாரம்,
ஆன்மீகம், பாரம்பரியம், வரலாறு, கலைகள், நுட்பக்கலைகள்,
அதிநுட்பக்கலைகள், சித்தரியல், ஆகியவற்றைப் பற்றி கருத்துப்
பரிமாற்றங்கள் நடத்துவதற்காகவும் கட்டுரைகள் வெளியிடுவதற்காகவும் ‘அகத்தியர்'
என்னும் மடலாடல் குழுவொன்றை நிறுவினார். அது ஒரு இருமொழி மடலாடல்
குழு. தமிழிலும் ஆங்கிலத்திலும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
இன்றைய உலகின் தமிழறிஞர்கள்
பலர் அக் குழுவில் உறுப்பியம்
பெற்றிருக்கின்றனர். அகத்தியத்தில் இதுவரைக்கும் நாற்பதினாயிரம்
மடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் நீள்கட்டுரைகள், மடலாடல்
இழைகள் ஆகியவை கணிசமான எண்ணிக்கை கொண்டவை. இவை அனைத்தையுமே
‘அகத்தியர் நாற்பதினாயிரம்' என்னும் பெயரில் தனி வலையகத்தை நிறுவி
அதில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
கந்தர் சஷ்டி கவசத்தின் விளக்க உரையை ஆங்கிலத்தில் விரிவாக
எழுதியிருக்கிறார். மறக்கப்பட்டுவிட்ட தமிழறிஞர்கள்
பலரின் வாழ்க்கை
வரலாற்றையும்
தொகுத்திருக்கிறார். கந்தபுராணம், அருணகிரிநாதர்
சரித்திரம், வள்ளிமலை சுவாமிகள், ரமணமகரிஷி வரலாறு போன்றவை
ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பன்னாட்டு அறிஞர்கள்,
ஆன்மீகவாதிகள், வீரர்கள் முதலியோரைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்.
பல நாடுகளிலிருந்து
இணைய ஆர்வலர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கும் தம்முடைய
நூல்கள், ஆராய்ச்சிகள் மூலம் பதிலளித்து வருகிறார்.அவர் நாற்பத்தைந்தாண்டுகளாகச்
திரட்டிய அரிய நூல்கள், ஓலை
சுவடிகள், கையெழுத்துப்படிகள், குறிப்புகள், ஆயிரக்கணக்கான படங்கள்
ஆகியவற்றை வைத்துச் செய்த ஆராய்ச்சிகள் அவருடைய இணையத் தொண்டுக்கு
மேற்கோள்களாக இருக்கின்றன.
அவர் எழுதும் மடல்களுக்கு
மேற்கோள்களாக பல படங்களைத் தக்க இடங்களில் வலையேற்றி,
விளக்குகிறார். இவ்வகையில் இவர்
கட்டுரைகள் தனித்தன்மை பெறுகின்றன.
அவருடைய நீள்கட்டுரைகளில் சிறப்புப்பெற்றவை - மதுராபுரி நாயாகி,
நவராத்திரி நாயகி, விஜயதசமி, நாயக்கர் கட்டளை, மனையடி சாத்திரம், ‘சும்மா', நாடி
சோதிடம்,
Vandalism, Lateral Thinking,
மருது பாண்டியர்,
சித்தர் முத்துவடுகநாதர், ராமப்பய்யன் அம்மானை, திருப்புகழ்,
தமிழ்த்தாத்தா... இன்னும்
நூற்றுக் கணக்கானவை. இவற்றில் சில
கட்டுரைகளால் தொகுக்கப்பட்ட நூல் ‘இணையத்தில் ஜேய்பி'. மற்றுமொரு
நூல்' ‘நாடி சோதிடம்'.
ப்லாகுகள் எனப்படும் வலைப்பூக்கள் பலவற்றை ஏற்படுத்தியிருக்கிறார்.
வலையகங்களில் ‘ஜேய்பி'ஸ்
மற்றும் கடாரம் என்பது தற்சமயம் செயல்பட்டு
வருகிறது. நூற்றுக்கு மேற்பட்ட உதிரி வலைப்பக்கங்களும் இருக்கின்றன.
இவற்றில் உள்ள கட்டுரைகளையெல்லாம் ஒருங்கே சேர்த்து மாபெரும்
வலையகத்தை உருவாக்கும் முயற்சியில்
மருத்துவர் ஜெயபாரதி ஈடுபட்டு
வருகிறார். அது உருவாகிய பின்ன