கட்டுரையாளர் கா.கலைமணி சமூகவியல் ஆய்வாளர்களில்
ஒருவர்.
அரசியல்வாதிகள் மட்டுமே ஒழுக்கக் கேடானவர்கள் என்கிற நிலை மாறி
சமுதாயக் காப்பாளர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள முனைகிறவர்களும்
கூட பாலியல் இச்சைகளில் தம்மை பலியாக்கிக் கொள்கின்றனர். ஆண்கள்
உதவி கேட்டால் மறுப்பதும் அதே பெண் பிள்ளைகள் உதவிக்கு வந்து
நின்றால், புன் சிரிப்புடன் உதவுவதும் இன்று பரவலாகிவிட்டது. பணம்
இருந்தால் அனைவரும் ஒரே வகைதான் என்பது வெளிப்படை.
பல்கலைக்கழக மாணவிகளின் பணச்சிக்கலை தமது இச்சைக்கு பயன்படுத்திக்
கொள்கிற சமுதாயக் காப்பாளர் போர்வையில் உலாவும் சிலரை பற்றிய
கட்டுரைகளும் நமக்கு கிடைத்துள்ளன. அக்கட்டுரை வெளிப்படுத்தும்
தகவல்களின் உண்மைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதால்
விரைவில் வெளியிடப்படும்.
அப்போது பசுத்தோல் போர்த்திய
புலி்கள் பலரின் முகத்திரை விலகும்.
-மொழி
---------------------------------
“தொழில்
முனைவர்களைக் குறிவைக்கும் ஏவுகணைகள்"
கா. கலைமணி
பாட்டன்
சேர்த்த சொத்தை, அப்பன் வளர்க்கப் பேரன் ஏப்பம் விட்டுக்
கொண்டிருக்கும் நிலை ஒரு புறமிருக்க, பிரபல அரசியல்வாதிகள் தங்களின்
மனைவிமார், பிள்ளைகள், சொந்தங்கள் வைப்புகள் பெயரில் சொத்துகளைச்
சேர்த்து வைத்துக்கொண்டு அரசியலில் நான் தூய்மையானவன் என்று பறை
சாற்றிக்கொண்டிருக்கும் நிலை இன்னொரு புறமிருக்க, இதையும் மீறி
கடின, மூளை உழைப்பின் மூலம் முன்னேறி கொண்டிருக்கும் பல இளம் தொழில்
முனைவர்களின் ஊக்கத்திற்கு நாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.
பட்டம் பெற்ற பலர் தன் மூளையை மாதச் சம்பளத்திற்கு அடிமை சாசனம்
எழுதிவிட்ட நிலையில், (விலங்கிடப்படாத நவீன அடிமைகள்) பாதியிலேயே
படிப்பைவிட்டு ஓடியவர்களில் சிலராவது சொந்தத் தொழிலில் ஈடுபட்டு
மேம்பாடு கண்டு வருகின்றனர்.
ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு பலநூறு கோடிக்குப் (பல பில்லியன்)
தாண்டி இருந்தாலும், அந்த நிலையைத் தொடுவதற்கு நம் மலேசியத் தமிழ்
அரசியல்வாதி ஒருவர் உட்பட இன்னும் ஐவர் வரிசையில் உள்ளனர்.
50 கோடியைத் (500 மில்லியன்) தொட்டவர்கள் ஏறக்குறைய ஆயிரம் பேர்
இருக்க, பத்துக் கோடியைத் (நூறு மில்லியன்) தொட்டவர்கள் ஐந்தாயிரம்
பேர்வரை உள்ளனர்.
பத்துக்கோடி (100 மில்லியன்) சொத்துமதிப்பு உள்ளவர்கள் 12 ஆயிரம்
வரையும் ஒரு கோடி (பத்து மில்லியன்) சொத்து மதிப்பு உள்ளவர்கள் 20
ஆயிரம் பேர் வரை உள்ளனர்.
பத்து இலக்கம் (ஒரு மில்லியன்) சொத்து மதிப்பை எட்டுவதற்குப் பல
ஆயிரம் இளம் தொழில் முனைவர்கள் நேரம் காலம் இன்றி உழைத்துக்
கொண்டிருக்கும் இவர்களின் எண்ணிக்கையில் எழுபது (70)
விழுக்காட்டினர் சரிவை நோக்கியே செல்கின்றனர்.
திட்டமிடலும் சரியாகத்தான் செய்கின்றனர். வேலையும்
எதிர்பார்த்தபடியே தொடர்கிறது. பணவரவும் நல்லபடியாகவே இருக்கின்றது.
இருப்பினும் தோல்வி காண்கின்றனரே, ஏன்?
எல்லா மனிதர்களும் (சாமியிலிருந்து ஆசாமி வரை) ஏதாவது ஓர் ஆசையில்
சிக்கியிருப்பார்கள். அதுதான் அவர்களின் பலவீனமும்கூட.
அந்த வகையிலே ஓர் ஆணுக்கு பெண்ணின் (களின்) தற்காலிக உறவு தேவை
என்ற ஓர் ஆர்வத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.
நடுத்தெருவில் மலிவு விலையிலும், நட்சத்திர ஓட்டல்களில் ஆயிரம்
ரிங்கிட் கணக்கில் விற்கப் படுகிறது, அதே உறவுக்காக.
திருமணமானவர்களும் போய் வருகிறார்கள், (ஒரு சில மனைவிமார்களுக்கும்
தெரிந்தே இருக் கிறது) திருமணமாகதவர்களும் பெற்றோர்களுக்கு
தெரியாமல் போய் வருகிறார்கள்; கேட்டால் முன்னேற்ற வாழ்வுக்கு
இதுவும் ஓர் அங்கம் என்று ஞாயப்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றிக்கும் கணக்கு வைக்கும் இவர்கள் இதற்கு மட்டும் மறந்து (மறைத்து)
விடுகின்றார்கள். வேலைகளில் ஏற்படும் மன அழுத்தத்தை நிவர்த்தி
செய்ய வேறு ஓர் அழுத்தம் மிகவும் அவசியம் என்று வாதாடுகின்றனர்.
இந்தப் பலவீனத்தைப் புரிந்து வைத்துள்ள பெண்கள் (இளமையும் சரி
நடுத்தரமும் சரி) சாமர்த்தியமாகத் தங்களது காய்களை நகர்த்த
ஆரம்பிக்கின்றனர்.
இவர்களில் பலர் தாங்கள் வேலைசெய்யும் அலுவலகங்களிலும் உண்டு,
இடைநிலைப்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இரவு விடுதிகள் -
இப்படி விரிந்துகொண்டே போகிறது.
இன்னும் ஆழமாகப் போனால் குடும்பப் பெண்கள், தனித்து வாழும்
பெண்களும் உண்டு என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியபோது
அதிர்ச்சியாகவும் உள்ளது.
முதலில் “அலோ" என்று ஆரம்பிக்கும் அறிமுகம், விரைவில் படுக்கை
அறையில் முடிகிறது.
இதில் நேரடி விற்பனைப் போன்ற சங்கதிகளும் உண்டு. இளம் தொழில்
வர்த்தகர்களைப் போன் றோரைக் குறிவைக்கும் இவர்கள், மிகவும் சிறந்த
முறையிலான சேவைகளைக் (Services) கொடுக்கின்றனர்.
ஒருமணி நேர சேவையோ, அரைநாள் அனுசரணையோ அல்லது ஒருநாள் பிணைப்போ,
எவ்வளவு நேரமாயிருந்தாலும், தாங்கள் செய்யும் தொழிலில் மிகவும்
அக்கறையாகச் செயல்பட்டு மற்ற எல்லா சிந்தனைகளையும் நிறுத்துகின்றனர்.
தன் மனைவியிடம் கூட இந்தத் நிறைவு கிடைக்காத பலருக்கு இவர்கள்
சொர்க்கப் புரிகளாக இருக்கின்றனர். தன் ஆசைகளை மனைவியிடம்
கூறி அவமானப்பட்டு அசிங்கப்பட்டுப் போன சிலரையும் நான் அறிவேன்.
அதனால் பல ஆண்களுக்கு இதுபோன்ற கமுக்க உறவு இனிக்கிறது. இந்தச்
சேவையைப் பெற விரும்பும், அவரின் நண்பர்களையும் அறிமுகப்படுத்தச்
சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், அறிமுகப்படுத்தியவர்களுக்கு
இலவச சேவை, அல்லது குறிப்பிட்ட தொகையும் கிடைக்கிறது. (ஒருவனுக்கு
ஒருத்தி இல்லையா என்ற கேள்வியெல்லாம் இங்குக் கேட்கக் கூடாது.)
இந்தச் சேவையில் ஈடுபடும் மனிதாபிமானமுள்ள சில பெண்கள், நல்ல ஒரு
துணைவன் கிடைத்தால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்கின்றனர்.
அதாவது திருமணமும் செய்து கொள்கின்றனர் அல்லது வைப்பாகவே
இருந்துகொள்ள சம்மதிக்கின்றனர். இதுவெல்லாம் தங்களின்
பாதுகாப்புக்காகவே.
அதே சமயத்தில் இந்த இரண்டிலும் விருப்பமில்லாதவர்கள், தங்களின் சேவை
வேண்டுவோருக்கு வஞ்சனையின்றி நடந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல்
வந்தோரின் சொந்த வாழ்க்கையில் தலையிடுவதில்லை.
இதையும் மீறி மிகவும் மோசமான தரமும் உண்டு.
உங்கள் உடற்பசியைத் தீர்க்க, எல்லா நிலைகளிலும் ஒத்துழைக்கத்
தயாராக இருக்கும் இவர்கள், நீங்கள் கற்பனைச் செய்து பார்த்திராத
நிலைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி எந்நேரமும் அவர்களின்
சிந்தனையாகவே இருக்க வைத்து விடுவார்கள்.
மது அருந்துவது ஒரு புறமிருக்க போதைப்பொருள் உட்கொள்ளும்
பழக்கத்தையும் உருவாக்கிவிடுவர். உங்களைப் போன்ற நல்லவரை என்
வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்ற உருக்கமான வசனங்களைப் பேசி
உங்கள் சிந்தனைகளில் அமர்ந்து விடுவார்கள்.
உங்கள் குடும்ப வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன், உங்கள்
மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் என்று அப்பாவித்தன வசனத்தால்,
அத்தனையும் உண்மையென்று நம்புவீர்கள்.
பிறந்த நாளுக்கு நகை வாங்கி பரிசளிப்பீர்கள், விலை உயர்ந்த தங்கும்
விடுதிகளில் வயிற்றுக்கும், உடம்புக்கும் விருந்து நடக்கும்.
அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது,
அதுவும் அவசரமாகச் சில ஆயிரங்கள் தேவை என்று கோரிக்கை எழும்.
மறுப்பேதும் சொல்லாமல் எடுத்து நீட்டுவீர்கள்.
அதே நேரத்தில் மனைவி சேலை எடுக்க சில நூறு கேட்டால், “அலமாரியில்
அத்தனை சேலைகள் தொங்குதே இன்னுமா புதுச்சேலை, காசைக் கரியாக்காதே" என்று எரிந்து விழுவீர்கள்.
சில நூறுகள், ஆயிரங்கள் என்று தொடர்ச்சியாக உங்களிடமிருந்து கரைந்து
கொண்டே இருக்கும்.
நீங்கள் செய்த தொழிலிருந்து பெறப்பட்ட இலாபத் தொகையை
வியாபாரத்திலேயே மீண்டும், மீண்டும் முதலீடு செய்து பெரிய
நிலைக்குக் கொண்டு வரத் திட்டமெல்லாம் தீட்டியிருப்பீர்கள்.
ஆனால் உடல் சுகம் இந்தத் திட்டத்தையெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிடும்.
இந்தப் பாதிப்பு தொழிலில் தெரியும். உங்களிடமுள்ள திறமையை நம்பி (நம்புங்கள்,
உங்களிடம் அசாத்திய திறமையுண்டு) தொழிலின் சரிவை நிவர்த்தி
செய்துவிட முடியும் என்று வட்டிக்கு (சமயங்களில் முதலைகளிடமிருந்து)
கடன் வாங்கி உங்கள் வியாபாரத்தைத் தொடர்வீர்கள்.
முதலில் வந்த இலாபம், உடல் சுகத்திற்காக அழிந்தது. இரண்டாவது கட்டம்
வட்டிக்காகவும் சேர்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வட்டிக்காகப் பணம் கட்டுவதை முதன்மையாக இருக்கும் காலகட்டத்தில்,
உங்கள் ஆசை நாயகியின் தேவைகளை (பணத்தேவை) இழுத்தடிக்கும் நிலை
வரும்போது, திடீரென்று உங்கள் தலையில் ஒரு ஏவுகணை விடும்.
நீங்கள் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையிலுள்ள
புகைப்படம் உங்கள் முகவரிக்கோ, மின் அஞ்சலுக்கோ, கைத்தொலைப்பேசிக்கோ
வந்து சேரும்.
இந்தச் செய்தி குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்கப் பணம் கொடுக்கச்
சொல்லி மிரட்டல்கள் வரும்.
குடும்ப நிம்மதி, தொழில் நிம்மதி - இப்படி எல்லா நிம்மதியும்
பறிபோகும். இந்த ஆபாசப் படங்கள் எப்படி மூன்றாம் தரப்பினர்
கைக்குப்போனது என்று நீங்கள் முடியைப் பிய்த்துக்
கொண்டிருக்கும்போதே, அந்த ஆசை நாயகி உங்களிடமிருந்து கறக்கப்பட்ட
பணத்தின் மூலம் ஒரு புது வீட்டுக்குச் சொந்தக்காரியாக (நம்புங்கள்
பல வீடுகளும் உண்டு) இருப்பார். இன்னுமொரு நாயகனின் உறவையும்
புதுப்பித்துக் கொள்வார்.
இது மட்டுமன்று, தான் தாய்மையடைந்து விட்டதாகக் கூறி கட்டாயத்
தாலியைக் கட்டவும் வைத்து விடுவார்கள். தாலி கட்டிய சில
நாள்களுக்குப் பிறகு கரு கலைந்துவிட்டதாக நாடகமும் ஆடுவர்.
உங்களிடம் இருப்பதை எவ்வளவுக்கெவ்வளவு பெற முடியுமோ,அதைப்
பெற்றவுடன் உங்களிடமிருந்து மேலும் கறக்க முடியாது என்ற நிலை
வந்தவுடன், நீங்கள் தூக்கி எறியப்பட்டு விடுவீர்கள். சிலருக்கு
உதைப்பட்ட அனுபவங்களும் உண்டு.
சில குடும்பங்களில் மணமுறிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
பல ஏவுகணைகளில் பாதிப்புக் குறைவாக இருந்தாலும் சில ஏவுகணைகளின்
பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்.
உயர்ந்து கொண்டிருக்கின்ற பல தொழில் வர்த்தகங்களிலிருந்து,
உயர்ந்துவிட்ட தொழில் அதிபர்கள் வரை இந்த ஏவுகணைகள் வேறு விதமான
நிலைகளில் பாய்ச்சப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஒரு திறமையான
அதிகாரிக்கு அந்தரங்க செயலாளினியாக இருக்கும் ஒரு பெண் மிகப் பெரிய
முட்டாளாக இருப்பது இன்றைய நடப்பின் உண்மை.
நம் முன்னேற்றங்களை அரசியல்வாதிகள் மட்டும் தடுக்கவில்லை. நமது
அற்ப ஆசைகளினால் வந்து விழும் ஏவுகணைகள் மூலம் வெடித்துச் சிதறி
சரழிகிறது.