பழைய
உலோக வியாபாரமும் களங்கமும்
கா.
கலைமணி.
kalai_k79@hotmail.com
சுத்தம் சுகம் தரும்
என்பது முதியோர் வாக்கு. கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்றும்
சொல்லி வைத் துள்ளனர். நம் வீட்டுக் குப்பைகளையே மூன்றாம் தர (வேலையாட்கள்)
மனிதர்களை வைத்து சுத்தம் செய் யும் அளவுக்கு சோம்பேறியாகிவிட்ட
நாம், வெளியே காணப்படும் குப்பைகளைக் கண்டு கொள்ளாமற் போகின்றோம்.
தோல் வியாதியை உண்டு பண்ணவும் காச நோயின் நண்பனும் சுவாசக்குழாய்
இரத்தப் புற்று நோயின் உற்பத்தியாளனுமாகிய பழைய உலோகங்கள் நாட்டில்
(உலகத்தில்) பரவலாக இருக்கின்றன.
இந்த உலோகங்கள், பரவெளியிலும் தரையிலும் பூமிக்கடியிலும், ஆறு, கடல்,
சமுத்திரம் - இப்படி எல்லா இடங்களிலும் உள்ளன.
பரவெளியில் வீணே டன் கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் உலோகத்தால்
எவ்வாறான தாக்கத்திற்கு நாம் ஆளாகப் போகிறோம் என்று பரவெளி
அறிவியலாளர்கள் (குற்றவாளிகள்) இதுவரை தெளிவான விவரங் களைக்
கொடுக்கவில்லை.

இருந்தாலும் என்றாவது ஒருநாள் யார் மண்டையிலாவது விழுவது உறுதி.
மண்ணிலும் தண்ணீரிலும் இருக்கின்ற பழைய உலோகப் பொருள்கள் மேலே
குறிப்பிட்டுள்ள நோய்களை உற்பத்தி செய்வதோடு, சுற்றுப்புற
சூழ்நிலையை மாசுப்படுத்துகின்றது. அதோடு மட்டும் நின்றுவிடாமல்,
இயற்கை வளங்கள் கனி வளங்கள் போன்றவற்றை அழிக்கின்றன.
இதிலிருந்து விடுபடவே மறு சுழற்சி என்ற பயன்பாட்டை உலக நலவழி மன்றம்,
இயற்கையை நேசிப்போம் போன்ற இயக்கங்கள் விழிப்புணர்வு பரப்புரை (பிரச்சாரம்)
செய்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் 1960களில் நமது நாட்டில் பழைய உலோக வியாபாரம்
இருந்திருக்கின்றது. அலுமினியம், இரும்பு, ஈயம், செம்பு, வெண்கலம்
போன் றவை மறு சுழற்சிக்கு மிகவும் தேவையான பொருள்களாக இருந்தன.

மலேசியாவில் இன்றைய நிலையில் மூவின மும் இந்த வியாபாரத்தில்
ஈடுபட்டு இருந்தாலும், இந்தியர் கள்தாம் அதிக அளவிலும்
முதன்மையாகவும் உள்ளனர்.
பழைய உலோக வியாபாரிகள் நாட்டிற்கு எந்த விதமான நன்மைகளைக் கொண்டு
வருகின்றனர் என்பதைக் காண்போம்.
-
மண் வளங்களின்
இழப்பு குறைக்கப் படுகின்றது.
-
இறக்குமதியால்
வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய பணம் மிச்சப்படுகின்றது.
-
சங்கிலித் தொடர்போல்
வேலை வாய்ப்புகள், போக்குவரத்துப் போன்றவை அதிகரிக்கின்றன.
-
வருமானவரி மூலம்
அரசாங்கத்திற்கு நன்மையும் உண்டு.
-
நோய்ப் பரவுதலைக்
குறைக்க (தடுக்க)ப் படுவதால், நலத்துறை அமைச்சுக்குப் பல கோடி
ரிங்கிட்டுகள் மிச்சமாகின்றன.
நாட்டிற்கும்
இயற்கைக்கும் நன்மையைக் கொண்டு வரும் இவ்வியாபாரத்தில் மிக உயர்ந்த
5 இடங்கள் தமிழர்கள் கையில் உண்டு என்பது பெருமைப்பட வேண்டிய
ஒன்றாகும்.

சிறியதும் பெரியதுமாக 3000த்திற்கும் மேற்பட்ட நமது நிறுவனங்கள் (உரிமம்
உள்ளதும் இல்லாததுமாகச் சேர்த்து) பல இன்று கட்டாயத்தின் பேரில்
மூடுவிழா காண விருக்கின்றன.
இதற்கு ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்கள் சில இருந்தாலும்,
வருந்தத்தக்க காரணங்களும் பல உண்டு. இந்த மூடுவிழாவால் பல நூறு பேர்
வேலையை இழக்கும் இடர்ப்பாட்டையும் எதிர்நோக்கியுள்ளனர்.
மூடு விழாவிற்குக் காரணம் கீழே குறிப்பிட்டுள்ளது போல்
பிரிக்கப்பட்டுள்ளது.
அ) இயற்கை சுற்றுப்புற அமைச்சு (கழகம்)
ஆ) நிலவள நிருவாகம் (அமைச்சு)
இ) பொருள்களைப் பறி கொடுத்தவர்.
ஈ) பக்கத்தில் குடியிருப்போர்.
அ) இயற்கை சுற்றுப்புற அமைச்சு (கழகம்)
வாங்கப்படும் பழைய உலோகப் பொருள்கள், விலையேற்றப்
பருவத்திற்காகச் சேர்த்து வைப்பதுண்டு. முறையாக அடுக்கி வைக்க (முடியாது)
இயலாதக் காரணத்தினாலும், கண்ட இடங்களில் இறைந்து கிடப்பதாலும்,
நாளடைவில் அதிலிருந்து நச்சுக் காற்று உற்பத்தியாகி உடல்
நலத்திற்குக் கேடு விளைவிப்பதால் இந்த அமைச்சு கெடுபிடியாக நடந்து
கொள்கிறது.
ஆ) நிலவள நிருவாகம்
பழைய உலோகப் பொருள்களைச் சேகரித்து வைக்கும் (வைத்திருக்கும்)
இடம், நில நிருவாகத்திடமிருந்து அனுமதி இருந்திருக்காது. தொழிற்சாலை
பட்டயம் கொண்ட நிலத்தில் மட்டுமே வைக்க வேண்டியப் பொருளை விவசாய
நிலத்திலோ அல்லது வீட்டுமனை நிலத்திலோ தன் விருப்பத்தின் பேரில்
சேகரித்து வைப்பது பின்னாளில் வினையிலேயேதான் முடியும்.
இ) பொருள்களைப் பறி கொடுத்தவர்
இன்றைய நிலையில் ஒரு கிலோ இரும்பு 1 ரிங்கிட்டிலிருந்து 1.50
ரிங்கிட் வரையும், செம்பு 2 ரிங்கிட்டிலிருந்து 4 ரிங்கிட் வரை
வாங்கப்படுவதால், உபயோகத்தில் இருக்கும் உலோகங்கள்கூடக் களவு
போகின்றது. முக்கியமாகத் தேசிய மின்சார வாரியத்திற்குச் செப்புக்
கம்பிகளின் திருட்டால் வருடத்திற்கு முப்பது கோடி (300 மில்லியன்)
ரிங்கிட் இழப்பு ஏற்படுகிறது.
ஈ) பக்கத்தில் குடியிருப்போர்
இந்தச் சேமிப்புக் கிடங்கின் பக்கத்தில் இருக்கும் வீடுகள்,
பள்ளிக்கூடங்கள், இறை வழிபாட்டுத்தலங்கள் இருக்குமானால், அதனால்
ஏற்படுகின்ற சிக்கல்கள் முகத்தைச் சுழிக்கின்றன.
இந்த நான்குக் காரணங்களில் முக்கியமாகப் பொருள்களைப் பறிகொடுத்தவர்
நிலை இன்று தேசியப் பிரச்சனையாக மாறியுள்ளது.
திருடப்பட்ட வாகனங்களின் முக்கிய உபரிப்பாகங்கள் போக பெரும்பாலான
மீதத்தை இந்த உலோக வியாபாரிகள் வாங்கிக் கொள்கின்றனர்.
கால்வாயின் மேல் பாதுகாப்பிற்காகப் போடப்பட்டிருக்கும் இரும்பு,
தண்ணீர் மீட்டர், வீட்டுச் சன்னல்களில் உள்ள அலுமினியம், மின்சாரக்
கம்பிகள், தொலைபேசிக் கம்பிகள் - இப்படிக் கணக்கில்லாமல் களவுபோய்க்
கொண்டிருக்கின்றன.
பொறுப்பற்ற வியாபாரிகள் சிலரால் என்னென்ன தீமைகள், இழப்புகள்
ஏற்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
-
பொது மக்களுக்குப்
பொருள் இழப்பு, பண இழப்பு, நேர விரயம்.
-
புதுப்புதுத்
திருடர்கள், போதைப் பித்தர்கள் போன்றோரை ஊக்குவித்தல். குண்டர்
கும்பல்களைப் பாதுகாத்தல் என்ற பேரில் வளர்த்தெடுத்தல்.
-
குண்டர்
கும்பல்களின் மோதல், உயிர் இழப்பு.
-
காவல்துறை
அதிகாரிகளுக்கு நேர விரயம், மக்களின் வரிப்பணம் வீணாகுதல்.
-
தேசிய விரோத செயலில்
ஈடுபடல். (சில ஆண்டுகளுக்கு முன்னால், சிலாங்கூர் சுல்தானின்
தங்க வாளைத் திருடி உருக்கி விற்ற பொற்கொல்லரும் உண்டு).
ஆக ஒரு நியாயமான
வியாபாரம், அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக மாறிக்
கொண்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால்,
அரசாங்கத்திலோ அல்லது அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களிலோ, பெரிய
பெரிய நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகள்கூட, இந்த விற்பனையில்
சம்பந்தப்பட்டுள்ளனர்.
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
என்றார் பட்டுக்கோட்டையார். இங்கே திருடனும் திருந்துவதில்லை,
வாங்குபவனும் அலட்டிக் கொள்வமில்லை.
காரணம் இலஞ்சம். பணம் பண்ணும் ஆசை. ஒரு காலத்தில் சைக்கிளில் வீடு
வீடாகச் சென்று பழைய இரும்பு பொருள்கள் விற்கலையோ என்று கூவி,
கேட்டு வாங்கிப் போனார்கள்.
இன்றோ சின்ன லாரியில் வந்து, கேட்காமலேயே தூக்கிக் கொண்டு
போகிறார்கள், கேட் டால் இளநியை வெட்டுவது போல் சீவிவிட்டுச்
செல்கின்றார் கள். மிகவும் உயர்வாகப் போற்றப்பட்ட தொழில், இன்று
திருட்டுப் பொருள்கள் நிச்சயமாக இங்கே கிடைக்கும் என்று தயக்கமின்றி
விரலை நீட்டு கின்றனர் காவல் துறையினர்.
நாட்டையும், சுற்றுப்புற சூழ் நிலைக்கு அரங்காவலராக வலம் வந்து
கொண்டிருக்கும் இவர்கள், களங்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
முதலீடு இன்றி பணம் பார்க் கும் தொழிலாக இது இருப்பதால் (சிறு
வியாபாரி களுக்கும் விற்பவர்களுக்கும் பலரின் கை துருதுருவென்று
நடனமாடிக் கொண்டிருக்கின்றது.
மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டம்வரை இலஞ்சம் தலைவிரித்து
ஆடுவதால், நேரம் வரும்போது பலிகடா ஆவது வியாபாரிகளே.
வியாபாரம் என்றால் ஏமாற்றுதல், திருடு இல்லாமல் பணம் சம்பாதிக்க
முடியாது என்பது உலக அரங்கில் ஒரு நிலையாகிவிட்ட அங்கமாகும்.
ஆனால் அந்த ஏமாற்றும் திருட்டும் கெட்டிக்காரத் தனமாகக்
கையாளுகின்றவர்களே, பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள்.
ஆகவே, நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன், நமது நாட்டில்
இயங்கும் பழைய உலோக வியாபாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து, இந்த
வியாபாரம் தங்கள் கைகளிலேயே நிலைத்திட, இப்பொழுதுள்ள களங்கத்தை
துடைத்தொழிக்க முற்பட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையானக்
கோரிக்கை. இல்லையேல் உள்ளது போனதடா நொல்லக்கண்ணா என்ற கதைதான் வரும்.