மஇகாவின் பணிப்படையா அல்லது
சமுதாயத்தின் கண்ணீர்ப் படையா?
கா. கலைமணி.
kalai_k79@hotmail.com
இன்றைய இளைஞர்கள்
நாட்டின் நாளைய முதுகெலும்புகள் என்பது நடைமுறை உண்மை.
தமிழனுக்குத் தனிநாடு வேண்டும் என்ற உணர்வு உலகத் தமிழனுக்கு வந்த
காரணம் மேதகு பிரபாகரன் இளமையில் தூவிய விதையின் விளைவாகும்.

இந்தியாவுக்குச்
சுதந்தரம் கிடைக்கக் காரணம், மகாத்மாக்கு இளமையில் ஏற்பட்ட கசப்பான
அனுபவங்கள்தாம்.
நெல்சன் மண்டேலாவின் சுதந்தரக் காற்றை அடக்கி பிரிட்டீசாரின்
கொடுங்கோலின் கொடுமைக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டது இளைஞராக
இருந்தபோதுதான்.
ரசியாவின் சர்வதிகாரத்தை உடைத்தெறிந்தவர் லெனின் என்ற இளைஞர்தான்
இமயமலையை வென்ற மலேசியப் புலிகள் மகேந்திரனும் மோகனதாசும் தமிழ்
இளைஞர்கள்தாம்.
உலகம் முழுவதும் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் இளைஞர்கள் பங்கே
முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அந்த நிலையில் நம் நாட்டில் இளைஞர் இயக்கங்கள் பல நிரம்பியுள்ளன.
தமிழர்கள் சார்பில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில இயக்கங்கள் உண்டு.
தேசிய இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் மணிமன்றம்
பல்கலைக்கழகங்களிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் இயங்கிக்
கொண்டிருக்கும் இயக்கங்கள்
சிலம்பம்,
கராத்தே, ஜூடோ - இப்படிப் பல தரப்பட்ட தற்காப்புக் கலைகளில்
இயங்கும் இளமை இரத்தங்கள், சிதறுண்டுக் கிடக்கும் பல சிறுசிறு
இயக்கங்களில் இயங்கும் இளைஞர் அணிகள், தேசிய நிலையில் இயங்கும்
அரசியல் கட்சிகளுக்கு இளைஞர் பகுதி ஒரு முக்கியமான அதே சமயத்தில்
சக்தி வாய்ந்த அமைப் பாகும். தேசிய இளைஞர் மணிமன்றம் அமரர் சா.ஆ.
அன்பானந்தனுக்குப் பிறகு ஓர் அரசியல் கட்சிக்கு மணி ஆட்டும்
மன்றமாக மாறிவிட்டது! இது தலைமைத்துவப் பேராசையில் வந்த கோளாறாகும்.
ஆனால் இளைஞர் குண்டர் கும்பல்கள் மட்டுந்தான் தாங்கள்
எடுத்துக்கொண்ட கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கின்றனர்?
அந்த வகையில் ம.இ.கா. இன்று மிகப் பெரிய இளைஞர் பட்டாளத்தை திசை
மாற்றியுள்ளது.
மக்களின் மூட நம்பிக்கைகளை உடைத்தெறிவது நல்லெண்ணங்களை, சிந்தனைகளை
மனத்தில் விதைப்பது.
கல்வியில் மேம்பட உதவுவது, பொருளாதாரத்தில் உயர்வது.
சமய சிந்தனைகளைப் பேணி வளர்ப்பது, பண்பாட்டைப் போற்றுவது,
இயலாதோர்க்கு உதவுவது, அடுத்தக் கட்சிக்காரர்களை அரவணைப்பது, கட்சி
வேறுபட்டாலும் இனம் என்று வரும்போது ஒன்றாகக்குரல் கொடுப்பது
இப்படி உயிரோட்டமான பல நெறிமுறைகளை வகுத்துத் துடிப்புமிக்க -
தன்னார்வமுள்ள - சுயநலமற்ற பெரிய இளைஞர் பட்டாளமே இருந்தது ஒரு
காலத்தில்! அவற்றையெல்லாம் ஏக்கத்தோடு நினைத்துப் பார்க்கச்
சொல்கிறது.
இதயத்தைத் தொட்டிருந்த அந்த இளைஞர் அணிகள் இன்று எங்கே சென்றன என்று
பூதக் கண்ணாடி வைத்துத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில்தான்,
மஇகாவின் தாகத்தைத் தீர்க்கப் “பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்ற
அறிவிப்பு இடையில் வந்தது.
மஇகாவின்
“இளைஞர் அணி" என்று இருக்கும் போது இன்னுமொரு இளைஞர் அணி, அதுவும்
பணிப்படை என்ற பெயரில் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது,
அவர்கள் இயங்கும் விதம் அடுத்தத் தலை முறைக்கு விவேகமாக இருக்குமா
என்ற சந்தேகத்தையே உருவாக்கு கின்றது.
பணிப்படை அமைக்கப்பட்டதன் நோக்கம் இந்தச் சமுதாயத்திற்கு இன்னும்
ஆழமாக நல்ல செயல் களைச் செய்யவேண்டும் என்று அதன் தலைவர்கள்
கூறினாலும், உண்மையான செயல்பாடுகள் வேறொரு கும்பலின் செயலைத்தான்
நினைவுகூரச் செய்கிறது.
அதற்கு ஆதாரமாக மாச்சாப் இடைத்தேர்தலில் அவர்கள் நடந்துகொண்ட
விதமும், தலைமைத்துவம் இயக்கப்பட்ட முறையுந்தான் மிகவும் வேதனையை
ஏற்படுத்துகின்றது. இந்த வீராப்பை சக தோழர்களை விடுத்து, மற்ற
இனத்தாரிடம் காண்பித்திருக்க வேண்டியதுதானே.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஜாலான் கிளாங் லாமாவில் நடந்த
அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் யார், அங்குள்ள (இருந்து
கொண்டிருக்கின்ற) குண்டர் கும்பல்கள், போதைப் பொருள் விநியோகம்,
விபச்சாரம் போன்றவற்றை வளர்த்தெடுத்தது யார்?
ஆட்டைக் கடித்தார்கள்.
கட்சித் தேர்கள் நடந்த இடங்களில் ஊடுருவி, தலைவர் கை
நீட்டியவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கு இணங்க,
போட்டியாளர்கள் மிரட்டப்பட்டனர். வீட்டில் பெண் பிள்ளைகள்
இருக்கின்றனர் என்று நினைவுறுத்தப் பட்டனர்.
மாட்டைக் கடித்தார்கள்
மைக்கா ஹோல்டிங் ஆண்டுக் கூட்டத்திற்கு முன்பும், பிறகும்
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.
மாண்புமிகு குலசேகரன், வழக்கறிஞர் சிவநேசன், திருவாளர் மாசிலாமணி
போன்றோர் இந்தப் பணிப்படையால் மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும்
இருக்கின்றனர்.
இப்போழுது வேறு எதையோ கடிக்கக் கிளம்பிவிட்டனர்.
சரி, இனி பணிப்படையின் உள்நோக்கம் என்ன என்பதை கொஞ்சம் ஆராய்ந்து
பார்ப்போம்.
அரசியல் வட்டாரத்திலும் சரி, வேறு அமைப்புகளிலும் சரி, பதவி வெறி
பிடித்த சுயநலவாதிகளுக்குத் தங்கள் நிலையைத் தற்காத்துக்கொள்ள
ஏதாவது ஒரு பக்கப்பலம் தேவைப்படுகிறது.
சேவையின் மூலம் மக்களின் மனத்தில் இடம் பிடித்த காலம்போய்,
அடாவடித்தனத்தால் (அது எம்மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும்
என்று கொஞ்சங்கூட சிந்திக்காமல் இறங்கு கின்றனர்.
பண அரசியல் புற்று நோய்க்குச் சமம் என்று கூறிக்கொண்டே அன்பளிப்பு
என்ற கூட்டத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமான புள்ளிகளுக்கு, கௌரவமான முறையில் மது, மாது சுகத்தை
ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
முரண்படுபவர்களை முன்பு குண்டர் கும்பலின் மூலம் மிரட்டினார்கள்.
இன்று அதே தொழிலை பணிப்படையின் மூலம் நிறைவேற்றிக்
கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பணிப்படையினரை சமுதாய சீர்திருத்தக் காரியங்களுக்காகத்
திசைத்திருப்ப முடியாதா?
அதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு ஆகும். இந்தியாவில் ஏறக்குறைய 30
விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு வரை மக்களுக்கு இன்னும் வேலை
வாய்ப்பு இல்லை.
உலகப் பொருளாதாரத்திற்குச் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா உதயமாகிக்
கொண்டு வரும் இவ்வேளையில் மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது ஒன்றும்
பெரிய காரியமன்று.
ஆனால் எல்லாருக்கும் வேலை வாய்ப்பு உண்டாக் கப்பட்டால், அங்கே
அரசியல் ஒழுங்காக நடக்கும்.
அதுபோல இங்கேயும், இந்தப் பணிப்படையில் உள்ளவர்கள் அல்லது
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பலர் வேலைவெட்டி
இல்லாத வர்கள்.
அவ்வப்போது தூக்கி வீசப் படும் எலும்புத்துண்டுகளுக் காகத் தன்
தொப்புள் கொடிக்கே துரோகம் செய்யத் தயங்காதவர்கள்.
ஏவப்படும் ஐந்தடித் தலை மைத்துவத்திற்கு விசுவாசமாக நடக்கக்
கடமைப்பட்டுள்ள வர்கள், அந்த விசுவாசம் சிதறாமல் இருக்கத் தக்க
நடவடிக்கைகளைத் திறமை யாகச் செயல்படுத்திக் கொண் டிருக்கும்
பூசாரிகள் இருக்கும் வரை இந்தப் பாம்பு கள் மகுடியின்
கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும்.
சம்பந்தப்பட்ட பணிப்படையினருக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுத்தால், இந்த அடாவடித்தனத்திற்கெல்லாம் நேரம் இருக்குமா.
தன் தொப்புள் கொடியையே அறுக்க முனைவார்களா?
தன் சகோதரியையே விபாச்சாரியின் மகள் என்பார்களா...?
வயதான பெரியவர்களையே வாடா, போடா என்பார்களா...?
பல தமிழ்ப்பள்ளிகளில் வறட்சி தலைவிரித்து ஆடுகிறதே அங்கே இவர்களது
புரட்சி நடக்கட்டும்.
ஆசிரியர்கள் பலர் அரசியல் நலன் கருதி, பிள்ளைகளின் எதிர்காலத்தைப்
பணயம் வைக்கிறார்களே அங்கே இவர்களின் மிரட்டல் எடுபடட்டும்.
ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை, அந்நியத் தொழிலாளர்களிடம்
இழப்பதோடு, அவர்களிடமே கையைக்கட்டி வேலை பார்க்கிறோமே இந்த
மானங்கெட்ட செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.
அரசாங்க - வேலை வாய்ப்புகள் நம்மைவிட்டுக் கைநழுவிக்
கொண்டிருக்கின்றனவே அவற்றுக்குப் போர்க்கொடி தூக்கட்டும்.
நமது அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றனவே அவற்றையெல்லாம் தட்டிக்
கேட்கட்டும்.
சோறு போட்டு வளர்த் தாலும், தப்புச் செய்தவர் சாமியாயிருந்தாலும்
விட மாட்டேன், முதலீடு செய்த மஇகா யூனிட் டிரஸ், தொழிலாளர்
மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம், மாஜூ ஜெயா, மைக்கா ஹோல்டிங், நேசா
போன்றவற்றில் போட்ட பணம் என்னவாயிற்று என்று உரிமையோடு கேட்கட்டும்.
கட்சி பேதமின்றி யாருக்கும் வாலாட்டாமல், நியாயமான சமுதாயத்தை
உருவாக்க செயல்பட வேண்டும்.
சா.ஆ. அன்பானந்தன் காலத்து இளைஞர் அணிக்கும் இன்றைய மன்றத்திற்கும்
நிறைய வேறுபாடு உண்டு.
முன்பு மணியை ஆட்டியது. இன்று
அதன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது இன்னும் ஒரு
நலக்காப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்களின் விளைவுகள்
எதிர்காலத்தில்தான் தெரியவரும். சாதியில் பல பிளவுகள் போல் இன்று
மஇகாவின் இளைஞர் அணியிலும் பல பிரிவுகள் முளைத்துக்
கொண்டிருக்கின்றன. இவை ஏன் என்று வினவும் போதுதான் நமக்குக்
குழப்பமாகவே உள்ளது.
எனவே, இந்தப் பணிப்படை தங்கள் நடவடிக்கைகளை ஏன் எதற்காக என்று
ஆராய்ந்து சமுதாயச் சிந்தனையோடு செயல்பட்டால் எங்கள் மனத்தில்
பனியாக அமர்வீர்கள், இல்லையே நீங்களும் இன்னொரு ஐந்தடிக்கூட்டம்தான்.