மலேசியாவில் வெள்ளம் தொடர்கதைதானா?

கா. கலைமணி. kalai_k79@hotmail.com

நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே எதிர்பார்க்கப்பட்ட வெள்ளம், இன்று நாடு முழுவதும் முக்கியமாக மேம்பாடு நடந்து கொண்டிருக்கும் அல்லது முடிந்துவிட்ட இடத்தையும் இரண்டு மணி நேரக் கடுமையான மழை பெரும் வெள்ளத்தை உருவாக்கி வருகிறது.

அண்மையில் ஜோகூரில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. நமது அரசாங்கத்தின் அக்கறை குறைவால் ஏற்பட்ட பொருட்சேதம் பல மில்லியன் ரிங்கிட்டுகள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாதிக்கப்படாதவர்கள் சிலர் அரசாங்கத்திடமிருந்து (திருட்டுத்தனமாகப்) பெற்ற உதவி நிதி பல இலட்சங்கள்.

ஒவ்வொரு வெள்ளப் பெருக்கிலும் மக்களின் இழப்புகள் பல இலட்சங்களைத் தாண்டுகின்றன.

ஒருமணி நேர மழைகூட கோலாலம்பூர் மாநகரை சிலமணி நேரங்கள் செயலிழக்கச் செய்துவிடுகிறது.

டத்தாரான் மெர்டேக்காவின் கீழ்த்தளத்தில் ஏறிய வெள்ளத்தால், பல மாதங்களுக்கு வியாபாரம் முடங்கியிருந்தது என்பதை மறந்துவிட இயலாது.

கோம்பாக், ஸ்தாபாக், பங்சார் போன்ற இடங்களிலும் போக்குவரத்து நிலைக்குத்துகிறது.

சா ஆலாம், பத்து தீகா, கிள்ளான், போர்ட் கிள்ளான் போன்ற பொருளாதாரப் பட்டணங்கள் பெரிய இழப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.

திடீர் வெள்ளத்திற்கும், எதிர்பாராத வெள்ளத்திற்கும் பருவநிலை மாற்றந்தான் என்று நமது அரசாங்கத்தின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானா?

எல்லா சீற்றத்திற்கும் இறைவன் மேல் பழி போடுவது என்பது நமது இயலாமையைக் குறிக்கும். இயற்கையின் பருவமாறுதல், வெள்ளப் பேரிடர் ஓரளவுதான் காரணமாக இருக்கிறதேயொழிய 70 விழுக்காடு மனிதத் தவறுகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

மனிதத் தவறுகள் என்பதைவிட, பேராசையே பெரும் காரணம் என்றால் அது மிகையாகாது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மேம்பாட்டுத் திட்டங்கள் மிகவும் இன்றியமையாதது. இதில் தொழிற்சாலைகள், வீடமைப்புத்திட்டங்கள், சாலைகள் ஆகியவையும் அடங்கும். இவற்றை நடைமுறையில் கொண்டு வருவதற்குப் பெரிய நிலப்பரப்புத் தேவைப்படுகிறது.

இதை நிருணயம் செய்ய வேண்டியது, நகர் மற்றும் கிராமப்புறத் திட்ட மேம்பாட்டு வாரியமாகும். ஆனால் இவ்வாரியம் இங்கு சுதந்தரமாக இயங்குவதில்லை அல்லது இயங்கப்பட விடுவதில்லை. பிரபலமானவர் களாலும், அரசியல்வாதிகளின் தலையீடும் அதிகமாக இருப்பதால் பல திட்டங்கள் முறையான அறிக்கைகள் இன்றியும், ஒப்புதல் இன்றியும், சரியான தூரநோக்ககுத் திட்டமின்றியும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பல ஏக்கர் காட்டு வளங்களை அழித்தல், இயற்கை மண்ணை மாற்றியமைத்தல், நீரோடைகள், ஆறுகளின் ஓட்டத்தை மாற்றுதல், அகலத்தைக் குறைத்தல், கரையோரங்களில் மண் அரித்தலுக்குக் காரணமாதல் - இப்படியாகத் தொடர்கிறது.

காடுகள் அழிக்கப்படும்போது, மழை நேரத்தில் தரையில் ஓடும் தண்ணீர் எந்தவொரு தடையுமின்றி மிகவும் வேகமாக மண்ணையும் கரைத்துக் கொண்டே ஓடுகிறது.

கரையும் மண் சிறு ஓடைகளைக் கால ஓட்டத்தில் மூடுகிறது. ஆறுகளின் ஆழத்தைக் குறைக்கிறது. ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்கிறபோது ஏறக்குறைய இருநூற்று ஐம்பது காலன் தண்ணீர் வீணே தரையில் ஓடுகிறது.
அதாவது பல இலட்சம் காலன் தண்ணீர் வீணே மண்ணைச் சேறாக மாற்றி ஆற்றிலும் கடலிலும் கலக்கின்றது.

ஆழமான ஆற்றில் வருடக்கணக்கில் சேரும் சகதிகள், ஆற்றின் படுகையில் குறிப்பிட்ட உயரம் சேறாகவே இருக்கும். இதே அளவுக்குத் தண்ணீர் நிலையும் உயரும்.

உதாரணமாக நான்கடி ஆழத்தில் மூன்றடி தண்ணீர் ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். கால ஓட்டத்தில் இரண்டு அடி சேறு அதன் படுகையில் சேர்ந்தால், ஓர் அடி தண்ணீர் கரைக்கு மேலே புரண்டு ஓடும்.

இதனால் தாழ்வான இடத்தை நோக்கி ஓடும் தண்ணீர் ஓட்டம் நிலை மாறுகின்றது; தேக்கம் அடைகின்றது. இதைத்தான் நாம் வெள்ளம் என்கிறோம்.

அதே நேரத்தில் கடல்நீர் பெருக்கத்தையும் நாம் மறுப்பதற்கில்லை. கடல் நீர் பெருக்கத்தின் போது, கடலை நோக்கிப் பாயும் ஆற்றுநீர் திசை திரும்புகின்றது. அதனால் வடிகால்களும் தேக்கம் அடைகின்றன.

ஆக, இயற்கையின் நீரோட்டத்தைப் பல வழிகளில் நாம் நாசமாக்குவதால் (கண்ட வாக்கில் குப்பைகளை ஆற்றில் வீசுவதாலும்) இந்த வெள்ளப் பேரிடர் சர்வ சாதாரணமாகி விட்டது.

இந்த வெள்ளப் பேரிடரைக் குறைக்கும் (தீர்க்கும்) ஆற்றல் Jabatan Parit Dan Tali air நிருவாகத்திற்கு உண்டு.

ஆனால் இத்துறையினரின் பொறுப்பற்றச் செயல், மெத்தனப் போக்கு, ஏனோ தானோ என்ற நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

நதிகளில் ஏற்படும் கரை அரிப்பைக் கட்டுப் படுத்துவதற்கு, மிகப் பெரிய திட்டம் ஏதுவும் இல்லை.

1980 வரை ஆறுகளை ஆழப்படுத்தி வந்த மிகப்பெரிய இயந்திரங்கள் இன்று தூங்கி வழிந்து கொண்டோ அல்லது பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள் கைகளிலோ ஐக்கியமாகியுள்ளன.

மேம்பாட்டுத் திட்டங்களினால், ஆறுகளில் ஏற்படும் பாதிப்பை நமது நாடாளுமன்றம் மிகக் கடுமையாக எடுத்துக் கொள்வதில்லை.

வெள்ளப் பேரிடரை விவாதிக்கும் நாடாளு மன்றத்தில் அதற்குக் காரணமாக இருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களின் பாதிப்பைப் பற்றி நுனிப்புல் மேய்வதோடு சரி.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பாரிசான் உறுப்புக்கட்சியில் அங்கம் வகிக்கும் எவரும், அரசாங்கம் கொண்டு வரும், அல்லது செயல்படுத்தும் எந்தத் திட்டத்திற்கும் மாற்றுக் கருத்தும் அல்லது எதிராகவோ பேசக்கூடாது என்பதுதான்.

ஆகவே, நம் நாட்டில் திடீர் வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கின்றது.இருப்பினும் வழக்கம்போல் சில நிறுவனங்கள் பணம் சம்பாதித்துவிட்டுப் போகட்டும் என்று நம் அரசாங்கத்தின் (நம்புங்கள் இதில் சில அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உண்டு) கொள்கைகள் காரணமாக இந்த வெள்ளப் பேரிடர் ஒரு தொடர்கதைதான்.

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com