நாடு விட்டு நாடு
–
நூல் திறனாய்வு
- மா.
கலைமகன்

அண்மைக் காலமாக நூல் களை
வாங்கி படிக்கின்றவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருப்பதாகவும்
அதனால் தமிழ் நூல்நிலையங்கள் “அருகிக்கொண்டு வருகின்றன" என்ற
குறைபாடு நம்மிடையே இருந்து வருகிறது.
அப்படி ஒரு சூழல் இருந்தபோதிலும் நூல்கள் வெளியீடு என்பது குறை
சொல்லாத அளவிற்கு நிறைவாகப் பெருகி வருவதைக் காணும்போது
மனத்திற்குச் சற்றுத் தெம்மாகவும் இதமாகவும் இருக்கின்றது.
இன்றையச் சூழலில் தமிழில் பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வெளியீடு
கண்டுவந்த போதிலும்
“நாடு விட்டு நாடு"
என்ற நூல் சற்று வளமான
வரவேற்புடன் வெளியீடு செய்யப்பட்டுப் பலரின் கரங்களில் தவழ்ந்த
வண்ணம் இருக்கின்றது.
அண்மையில் வெளியீடு கண்ட “நாடு விட்டு நாடு" என்ற நூல் தனிப்பட்ட
ஒரு குடும்பத்தாரின் வரலாறாக இருக்கின்றதே, இந்நூலுக்கு விமர்சனம்
தேவையா...? என்ற வினாவும் எழலாம். ஒரு கணம் நானும் அப்படியொரு
வினாவை எழுப்பியவந்தான்!
ஆனால் நூலைப் படித்த பிறகுதான் சில உண்மைகள் தெரியவருகின்றன. அந்தக்
குடும்பம் வாழ்ந்த வாழ்வு, பட்ட துன்பங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள்,
இழப்புகள், இடையூறுகள் பலப்பல! இப்படிப் பல்வேறு இன்னல்களுக்கிடையே
அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், குறிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு
வரவேண்டும் என்ற உந்துதலும் தணியாத வேட்கையும் திருமதி முத்தம்மாள்
பழனிசாமிக்கு இருந்திருப்பதை அறிய முடிகிறது.
அதே வேளையில் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னம் மலாயாவில்
குடியேறிய இந்தியர்களில் திருமதி முத்தம்மாள் பழனிச்சாமியின்
முன்னோரும் அடங்குவர். அவர்கள் இங்கு வந்து குடியேறியதற்கான
காரணங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“தமிழ்நாட்டிலிருந்து என் மூதாதையார் ஒரு நூற்றாண்டுக்கு முன்
பிழைக்க வழிதேடி மலாயா வந்தார்கள். தோட்டம், துறவு, மாடு கன்று
என்று வசதியாக வாழ்ந்தார்கள்; ஏன் எல்லாவற்றையும் இழந்தார்கள்?
வாழையடி வாழையாக அனுபவித்து வந்த சொத்துகளை திடீரென்று ஏன்
இழந்தார்கள்? குற்றம், கொலை - இவற்றைச் செய்யும் அளவுக்கு
அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என் அனுபவத்திலிருந்தும் சொல்
கேள்வியிலிருந்தும் நான் அறிந்துகொண்ட உண்மை இதுதான். சொன்ன சொல்
காப்பது, தன்மானத்தை உயிரினும் மேலாக நினைத்தது, சிறிது ‘நான்’
என்னும் அகங்காரம், அசாத்தியத் தைரியம், இவையெல்லாம் அவர்களின் உடன்
பிறந்த குணங்கள். அதனால்தான் என் தாய் வழிப்பாட்டனாரும் தந்தை
வழிப்பாட்டனாரும் எல்லாவற் றையும் இழந்து கூலிகளாக மலாய் நாடு
வந்தனர்."
இப்படிப்
பல்வேறு காரணங் களால் பலதரப்பட்ட தழிழ்க் குடும்பங்கள் இங்குவந்து
குடி யேறிய வரலாறு நாம் படித்த ஒன்றாக இருந்தாலும் அவர்களின்
வாழ்க்கை நலங்கள், பட்டதுன் பங்கள், எதிர் நோக்கிய சவால்கள்,
அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிப் போன குடும்பங்கள்
பல இருந்தாலும், நூலாசிரியர் முத்தம்மாள் பழனிச்சாமியின் குடும்பம்
எதிர்நோக்கிய சவால்களைத் தங்களுக்கு ஒரு பட்டறிவாகவும் எதிர்கால
வாழ்வுக்கு முன்னோடியாகவும் கொண்டு செயல்பட்டனர் என்பது
இந்நூலின்வழி அறிய முடிகின்றது.
ஆயின், திருமதி முத்தம்மாளின் முயற்சி பாராட்டும் வகையில் பல்வேறு
இடங்களில் தமது வாழ்வின் நிலைகளை முத்திரைப் பதிக்கின்றார்.
எடுத்துக் காட்டாகக் கூறுவோமானால் சாதாரணத் தொழிலாளியாகப் பணிசெய்து
படித்து ஆங்கிலப் பள்ளி ஆசிரியரானார் என்றால் நம்மையெல்லாம்
வியப்பிலாழ்த்துகிறது அல்லவா? காலனித்துவ ஆட்சிக் காலங்களில்
வெள்ளையர்கள் தோட்ட மக்களை அடிமைத் தளையில் சிக்கவைத்து வேலை
வாங்கிய காலத்தில் நூலாசிரியர் முத்தம்மாள் ஒரு மாறுப்பட்ட
சிந்தனையாளராகவே இருந்துள்ளார். படித்துக்கொண்டே தமது நோக்கத்தில்
வெற்றிபெற்றுள்ளார் என்றால் நம்மால் அதைப் பாராட்டாமல் இருக்க
முடியாது.
இந்நூலின் ஆசிரியரான அவர் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம்
நாளன்று பிறந்தார். தமது நான்காம் வயதில் மலாயாவில் அதாவது
பேராக்கிலுள்ள வால்புரூக் ரப்பர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக்
கல்வியை 1937 முதல் 1940 ஆம் ஆண்டு வரை பயின்றார். அதன் பிறகு
தமிழ்நாட்டிற்குச் சென்று ஏழு ஆண்டுகள் பயின்று மீண்டும் மலாயா
வந்தார். இங்குள்ள சிம்பாங் அம்பாட் ஆங்கிலப் பள்ளியிலும்
(1948-1949) சித்தியவானிலுள்ள ஆங்கிலோ சைனீஸ் பள்ளியிலும்
(1950-1951) பயின்றார். சீனியர் கேம்பிரிட்ஜ் ஆசிரியர்
பயிற்சிக்கல்வியை முடித்துவிட்டு 1952இல் சித்தியவானிலுள்ள ஆங்கிலோ
சைனீஸ் பள்ளியில் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
ஆசிரியர் பணியில் பழுத்தப்பட்டறிவைப் பெற்ற நூலாசிரியர் பல
பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் இருந்து 1988இல் தமது பணியோய்வினைப்
பெற்றார். தற்பொழுது இவர் கணவர் ஸ்பென்ச் கிராண்டுடன் சித்திவானில்
வாழ்ந்து வருகிறார்.
நம்முள் பலர் குறிப்பாகத் தலைமையாசிரியர்கள் பலர் தங்களது ஆசிரியர்
பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தாங்கள் உண்டு தங்கள் குடும்பம்
உண்டு என்ற நோக்கிலேயே காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பர்; கொண்டும்
இருக்கின்றார்கள். ஆனால் நூலாசிரியர் முத்தம்மாள் பழனிச்சாமி சற்று
வேறுபடுகிறார்.
‘நாடு விட்டு நாடு’ என்ற நூலைப் படித்து முடிக்கும்போது சில
உண்மைகள் வெளிப்படுகின்றன. சற்று வேறுபாடான - மாறுபாடான
கண்ணோட்டத்துடன் நம்மை பார்க்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது. தமது
வாழ்க்கை வரலாறுகளைப் படித்துவரும்போது நூலாசிரியர் இயல்பாகவே
சுறுசுறுப்பையும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அணிகலனாகக்
கொண்டவர் என எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. நாடு விட்டு நாடு
என்ற நூலில் பல்வேறு செய்திகளையும் விவரங்களையும் மரபு தாண்டாத
குறிப்புகளையும் தந்துள்ளதைப் பார்க்கும்போது அவை நூலாசிரியரின்
குடும்ப வரலாற்றை மட்டும் பிரதிபலிக்கவில்லை. தமிழர்களின்
ஏழ்மையையும் வறுமையையும் சுட்டிக்காட்டும் நூலாக வலம் வருகின்றது.
நாடு விட்டு நாடு வந்த தமிழர்களுக்கு அவர்கள் பட்ட துன்பங்களுக்கும்
வேதனைகளுக்கும் இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும் இந்நூலை அவசியம் படித்து நெஞ்சில்
இருத்திக் கொள்ள வேண்டும். வாழ்வில் சிரமமும் துன்பமும் உழைப்பும்
இன்னதென்று அறியாத இளைஞர்களுக்கு இளம்குமரிகளுக்கும் தங்களது
எதிர்கால வாழ்வுக்கு இந்நூல் நல்லதொரு வழிகாட்டியாக அமையும்
என்பதில் ஐயத்திற்கிடமில்லை.