மொழியின் நிறுவனர் சித்தர் பழவீரர் உயிர் சமைதி அடைந்தார்.

மொழி ஆய்வு மேம்பாட்டு நிறுவனத் தோற்றுநர் சித்தர் பழவீரர் (வயது 54) கடந்த 01-09-2007 காரிக்(சனி)கிழமை இரவு 10:10 மணிக்கு சாலை நேர்ச்சியில் உயிர்சமைதி அடைந்தார். கெடா பாலிங்கிலிருந்து பெங்கலான் உலுவில் உள்ள தமது இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் வந்த மகிழுந்தில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பாலிங் மருத்துமனையில் உயிர்சமைதி அடைந்தார்.

பெங்கலான் உலு நீதிமன்றத்தில் மொழிப் பெயர்ப்பாளராக சித்தர் பழவீரர் பணியாற்றினார்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் செலாமா கிளையின் செயலராக விளங்கி பின்னர் பாவலர் அ.பு. திருமாலனாருக்கு துணையாக இருந்து மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியப் பொதுச் செயலராக பழவீரர் 20 ஆண்டுகள் பணியாற் றினார். சில மாதங்களுக்கு முன்புதான் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.

ஐயா பழநெடுமாறன் அவர்கள் தோற்றுவித்த உலகத் தமிழர் பேரமைப்பின் மலேசியப் பணியக ஒருங்கிணைப்பாளராகவும் பழவீரர் பொறுப்பேற்றிருந்தார். மலேசியத் தமிழ் அமைப்பு களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இனி ஈடுபாடு காட்டப் போவதாக பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் பழவீரர் தெரிவித்திருந்தார்.



பழவீரருடன் தமிழ்நெறி ஞாயிறு அ.பு. திருமாலனார் (படம் 1981)

 

நாடு தழுவிய அளவில் தமிழ்க் காப்பிற்காக இரவு பகல் பாராது ஓய்வு ஒழிவின்றி எண்ணற்ற நிகழ்வுகளில் கலந்து பழவீரர் உரை நிகழ்த்தி இருக்கிறார். தமிழர்கள் தமிழ் அடையாளத்தை இழக்காமல் வாழ வேண்டும் என்பதில் பழவீரர் மிகவும் உறுதியானவர்.

தம்மைப் போலவே தம் குழந்தைகளைகளையும் நாடு போற்ற செய்த பெருமை பழவீரருக்கு உண்டு.



பேராக் செலாமாவில் சித்தர் பழவீரர் விதைக்கப்பட்ட இடம்

 

சித்த மருத்துவத் துறையில் பழவீரருக்கு பெரும் புலமை உண்டு.

கடந்த சில ஆண்டு காலமாக சித்த வித்தைகளில் பெரும் ஈடுபாடு காட்டி பயிற்சியிலும் கடுமையாக ஈடுபட்டு வந்தார்.

தமிழ்நெறிப் பாவலர் அ.பு. திருமாலனாரை தம் தலைவராக இறுதிவரை ஏற்றுக் கொண்ட பழவீரர் அமரர் பாவலர் குறிஞ்சிக்குமரனாருடனும் முன்னாள் துணையமைச்சர் தான்சிறி குமரன் அவர்களுடனும் தமிழக அறிஞர் பெரு மக்களுடனும் நெருங்கிப் பழகியவர்.
 

ஓவியர் ரஜினியால் வரையப்பட்ட சித்தர் பழவீரரின் ஓவியம்

 

வட மலேசியா முழுவதும் திருக்குறள் ஓதும் வழிபாட்டு நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர் பழவீரர்.

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழீழ மக்களின் துயர் துடைப்பிற்காகவும் பழவீரர் ஆற்றிய பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.

 

பழவீரர் திருமண வெள்ளி விழாவில் அறிஞர் இர. திருச்செல்வம் வாழ்த்துமடல் வழங்குகிறார்

 

அன்னாரின் இழப்பு தமிழ் உலகத்திற்கு பேரிழப்பாகும் என மலேசியத் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

ஏழு பிள்ளைகளுக்கு தந்தையான பழவீரரின் வழியனுப்பு நிகழ்வு செலாமாவில் நடைபெற்றது.

தமிழ் முறைப்படி தமிழின உணர்வாளர்கள் இறுதி வணக்கம் செலுத்த குரோ சிவானந்தர் தவவனத்தின் தவ ஓகி போகர் அடிகள் தலைமையில் சித்த முறைப்படி நினைவகம் எழுப்பப்பட்டது.

16 ஆம் நாள் ஆதனாற்று வழிபாடு குடும்ப நிகழ்வாக கடந்த 15-09-2007 காரிக்கிழமை அன்று செலாமாவில் நடைபெற்றது.

சித்தர் நெறிப்படி 48ஆம் நாள் மண்டல வழிபாடு 18-10-2007 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் குரோ, தாசேக் சிவானந்தர் தவவனத்தில் நடைபெறுகிறது.

 

பேச்சாளர், பாடகர், எழுத்தாளர், பாவலர், இசையமைப்பாளர், ஒளிப்பட நிபுணர், வரைகலையாளர், சித்த மருத்துவர்,  மண இணைப்பாளர் என பன்முக ஆளுமை நிறைந்தவர் சித்தர் பழவீரர்.

 

பழவீரன்.கொம் இணையத்தள இயக்குநர் பூந்தளிர் வீரன் அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் வழி இக்குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

© 2037-2038  மொழி. நெட் -  கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@gmail.com