தமிழ் அழிவுக்குத்
துணை
தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதும் போக்கினைத் தமிழனாய்ப் பிறந்த
எவரும் கண்டிப்பர், தாய்மொழி வாழ வேண்டும் என நினைப்பவரும்
வாழ்பவரும் அயற்சொற்கள் தமிழில் கலப்பதைத் தமிழறிஞர்கள் பலரும்
கடுமையாக எதிர்த்துள்ளனர் அவர்களுள்;
மறைமலையடிகள்
தேவநேயப் பாவாணர்
பெருஞ்சித்திரனார்
பரதிமாற் கலைஞர்
பாவேந்தர் பாரதிதாசன்
பேரறிஞர் அண்ணா
எனப்பலர்
இவ்வரிசையில் அடங்குவர்.

தமிழ்ப்பற்றாளர்
எவரும் திரைப்படத்தில் பண்பாட்டுச் சீர்கேடு நிகழ்வதை எந்நிலையிலும்
வரவேற்றது கிடையாது. அதைப்போலப் பிறமொழிக் கலப்பையும் ஏற்றதில்லை.
கேடுகள் எங்கு நிகழ்ந்தாலும் நல்லவர் ஏற்க மாட்டார். தமிழ்
பழம்பெருமொழி; தமிழில் பிறமொழிகளைக் கலப்பதால் ஏற்படும் விளைவுகள்
வெளிப்படையாகத் தெரிந்தவை. பேச்சு மொழி நிலையினின்றும் தமிழை
அழித்து விடத் துடிக்கும் பகைவர்களின் திட்டமிட்ட வேலையே பிறமொழிக்
கலப்பு.
சாரா எனும் போர்வையில் ஒளிமுட்கொண்டிருக்கும் முகமூடிக்காரர் என்
வினாக்களுக்கு விடை கூற வேண்டும்.
-
முனைவர்.
முல்லை இராமையா எழுதிய கட்டுரைக்கு நான் எழுதிய மறுப்புக்
கட்டுரையை முழுமை யாக வெளியிடாமல் சாரமற்ற நிலையில் வெளியிட்டது
ஏன்?
-
இந்நிலையில்
நடுநிலை வகித்துக் கருத்துகளை வெளியிட வேண்டிய ஓர் இதழ் தானே
தமிழ்க்கேட்டுக்குச் சார்பாக நின்று கருத்துக் கூறியது ஏன்?
-
தமிழ்
உணர்வாளர்கள் யாராவது எங்காவது பண்பாட்டுச் சீர்கேட்டைப்
புரியும் திரைப்படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா?
தமிழ்த்திரைப்படத்திற்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்
எனக் கேட்டும் அதே வேளையில் பண்பாட்டுச் சீர்கேடுகளைப்
புரியலாம் என்று எந்தத் தனித்தமிழ்ப் பற்றாளராவது
கூறியிருக்கிறாரா?
-
பண்பாட்டுச்
சீர்கேட்டை எதிர்க்க வேண்டும் என்று கூறும் சாரா என்னும்
முகமூடி தம்முடைய நாளிதழில் திரைப்படத்திற்கு வண்ணப்பட
விளம்பரங்களையும் மதுவகை விளம்பரங்கலையும் வெளியிடுவது ஏன்?
-
பெரியாரையும்
அண்ணாவையும், காட்டி கருத்துக் கூறிய சாரா தம்முடைய நாளிதழில்
வெளியிடப் படும் சாதி விளம்பரங்களைக் கண்டிக்காமல் தடுக்காமல்
வாயைப்பொத்திக் கொண்டு மானக்கேடு புரிவது ஏன்?
-
ஆங்கிலத்தைப்
படிக்கக் கூடாது, பேசக் கூடாது என்று எந்தத் தனித்தமிழ்ப்
பற்றாளர் கூறியுள்ளார்?
-
தமிழில்
ஆங்கிலச் சொற்களைக் கலக்கக் கூடாது என்பதை ஆங்கில மொழி
எதிர்ப்பாளராகத் திசைத்திருப்பி விடுவது ஏன்?
-
பாரதிதாசன்
பெயரில் பாரதிதாசன் குழு என்று பெயர் வைத்துக் கொண்டு
“எழுத்தாளர் நாள் என்று கொண்டாடும் டத்தின் இந்திராணி
சாமிவேலுவின் ஏடான தமிழ்நேசன் பாரதிதாசன் பேணிய மொழித் தூய்மையை
மொழிமான உணர்ச்சியில்லாமல் எதிர்ப்பது ஏன்?
-
தமிழ் நேசன்
என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து
எழுதுவதையும் பேசு வதையும் முனைந்து ஏற்றுத் தமிழ்ப்பற்றாளர்களை
இழிவுப்படுத்தும் தமிழ்நேசனைத் தமிழ்நேசன் என்று அழைப்பது
பொருந்துமா?

-
வரலாற்றுப்படியாகத் தமிழில் பிறமொழிக் கலப்பால் ஏற்பட்டுள்ள
பெருங்கேடுகளை தமிழ் அறிஞர் பலரும் சுட்டிக் காட்டியும்
உணர்த்தியும் வந்திருந்தும் இந்தத் தமிழ்நேசன் சாரா அவற்றைப்
படிக்கா மல் உணராமல் தமிழுக்குப் பெருங்கேடு புரிய முனைவது
எதனால்?
-
ஆறாவது உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மாண்புமிகு டத்தோசிறி சாமிவேலு
அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின்
காலில் விழுந்தார்; அவர் மூத்த தமிழ் அறிஞர் என்பதால் அமைச்சர்
அவர்களைப் போற்றினார்; பாராட்டும் அவருடைய இதழான தமிழ் நேசன்,
முத்தமிழ்க்காவலரின் கோட்பாடான தனித்தமிழ்ச் சிந்தனையை
எதிர்ப்பது ஏன்?
-
தமிழில்
ஆங்கிலம் கலப்பதை ஆர்ப்பரித்து ஏற்றுக் கொள்ளும் இந்தச் சாரா
சமற்கிருத மொழியில் ஆங்கிலக் கலப்பை ஏற்பாரா? கோயில்களில்
ஓதப்படும் மந்திரங்களில் ஆங்கிலத்தைக் கலந்து விடலாமே! ‘ரொம்ப
நன்னா இருக்குமே!' தமிழ் மட்டுந்தான் இளித்த வாயன் மொழியா?
-
தமிழ்நாட்டில்
ஜெயகாந்தனும், இளங்கோவனும் மற்றுள்ள கொண்டான்மார்களும் தமிழில்
ஆங்கிலத் தையும் பிறமொழிகளையும் கலப்பதை வரவேற்று வீராப்புச்
செய்துள்ளனர். ஜெயகாந்தன் ஒருபடி மேலே சென்று தமிழ் அறிஞர்களை
நக்கித் தின்னும் நாய்கள் எனச்சூழ் கூறியுள்ளார். ஜெயகாந்தனும்
இளங்கோவனும் கூறிய கருத்துகளை ஒட்டித்தான் முல்லை இராமையா
கூறியுள்ளார். இவர் அனைவரையும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்
என்று கூறாமல் எப்படிக் கூறுவது?
-
பள்ளியில்
தமிழ்மொழியைப் போதிக்கும் ஓர் ஆசிரியர் ஆங்கிலம் கலந்த தமிழைப்
பயிற்றுவிக்க முடியுமா?

-
‘லெப்ட்டு
எடுத்து ஸ்ட்ரேய்ட்டா போய் ஜங்சன்ல ஸ்டோப் பன்னா அந்த சாப்பு
வரும்' இது தமிழா?இதைத்தான் தமிழ் நேசன் விரும்புகிறதா? இவ்வாறு
செய்வது தமிழைப் பாதுகாக்குமா? அழிக்குமா?தமிழர்களிடத்துத்
தமிழ் ஏடு நடத்தி தமிழை வைத்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும்
சாரா போன்றவர்கள் இப்படிச் சொந்தத் தாய்மொழிக்கே கேடு புரியும்
பழிச்செயலைப் புரிய வேண்டாம். இவ்வாறு புரிபவர்களைத்
தமிழ்ப்பகைவர்கள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது?
-
ஏட்டுக்கு விளக்கம்
எழுதும் சாரா என்னும் முகமூடிகளுக்குத் ‘தமிழ்ச் சொற்கள்'
தெரியவில்லை யானால் தமிழ் அறிஞர்கள் வெளியிட்டுள்ள
அகரமுதலிகளைத் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்; இந்த
நூற்றாண்டில் இன்றளவும் தமிழில் அது இல்லை, இது இல்லை என்று
பிதற்றிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். எத்தனையோ நூல்கள்
இருந்தும் படித்துத் தெரிந்து கொள்ளா மலிருப்பதற்கு வேறு என்ன
பெயர்?
-
‘எய்ட்ஸ்'
நோய்க்குத் தமிழில் சொல்லில்லையாம். சொல்லில்லை என்றால்
உருவாக்க வேண்டும். இல்லை என்றால் அறிஞர்களிடம் கேட்டுத்
தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ வல்லுநர், இந்நோய் தொடர்பாக
ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிஞர் மு.நெ. தெய்வநாயகம் அவர்கள்
இதற்குத் ‘தேய்வு' நோய் என்று பெயரிட்டுள்ளார். இதை ஏற்றுக்
கொண்டு பயன்படுத்தும் திராணி தமிழ் நேசனுக்கு உண்டா?
-
கண்ணெதிரே மலாக்கா
செட்டிகள் இருந்தும், மொரிசியசு தமிழர்கள் இருந்தும். பிஜி
தமிழர்கள் இருந்தும், இந்தோனேசியத் தமிழர்கள் இருந்தும் மொழிக்
கலப்பை வரவேற்றுக் கொண்டு நாத்தளும்பேறி வரம்பில்லாமல் பேசிக்
கொண்டிருக்கும் சாரா சூடும் சொரணையும் அற்றவரா? மொழிமானம்
இம்மியளவும் இல்லாதவரா? இருந்தால் இப்படி எழுதுவாரா?
-
ஆங்கிலம் இல்லாமல்
எதுவும் இல்லை, ஆங்கிலமே எல்லாம் என்று, ஆங்கிலனுக்குப்
பிறந்தவர் போல் உளறிக் கொண்டிருக்கும் சாரா தம்முடைய விளக்கத்தை
ஆங்கிலத்திலேயே வழங்கி இருக்கலாமே! அதற்கு ஏன் தமிழ்?
-
இறுதியாகச் சாரா அவர்களே!
தமிழ் நீண்டு நிலைத்து நிற்கும் உயர்தனிச் செம்மொழி! என்னையும்
என்னைப் போன்ற பலகோடி தமிழர்களை ஈன்றெடுத்த தாய்; அதற்குக் கேடு
வரும்போது தடுத்து நிறுத்த வேண்டும். உண்மைத் தமிழர்கள் அதைத்தான்
செய்வர், அப்படி இல்லை என்றால் அவர் பிறவியே ஐயத்திற்குரியதாகி
விடும். பாவேந்தரும், பெருஞ்சித்திரனாரும் இதைத்தான் கூறியுள்ளனர்?
நீங்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. உங்கள் எழுத்து உங்களைத்
தமிழ் உணர்வாளர்களையும் தமிழையும் எள்ளி நகையாடச் செய்யும்!
தமிழ்க்கேடு புரியும் இழிசெயலைக் கைவிடுக! இல்லை யென்றால் தமிழறம்
தமிழ் கெடுப்பானை விட்டு வைக்காது, இது வரலாறு!
‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் தம் சுவைகாண்பார்'
‘வானம் அளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே'