உலகத்தமிழர் பேரமைப்பின் மலேசியப் பணியகம் விரைவில் செயல்படும்

 

உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைத்து உலகளாவிய அளவில் மாபெரும் தமிழர் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்து்ம முயற்சி வெற்றிப் பெற்றுள்ளது. முதன் முதலாக உலகத் தமிழர்களுக்கென அமைப்பு, கொடி, பண், உடை, வங்கி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

 

உலகத் தமிழ் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு சென்னையில் சூலை 2002இல் நடைபெற்றது.  முதலாம் ஆண்டு நிறைவு மாநாடு 2003 ஆம் ஆண்டு சூலை 20,21 நாள்களில் புதுச்சேரியில் நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு நிறைவு மாநாடு 25-07-2004 பெங்களூரில் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு நிறைவு மாநாடு 31-07-2005 அன்று நாகர்கோயிலில் நடைபெற்றது. அதன் நான்காவது ஒருங்கிணைப்பு மாநாடு 2006 ஆக(ஸ்ட்)த்து 12,13 நாள்களில் சேலம் மாநகரில் நடைபெற்றது. 

 

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் உலகத் தமிழர்களின் மூத்தத் தலைவர் நெடுமாறன் ஐயா. மலேசியப் பணியக ஒருங்கிணைப்பாளராக மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் பொதுச் செயலாளர் பழ.வீரன்  பொறுப்பேற்றுள்ளார். 

 

 

பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஐயாவுடன் மலேசிய ஒருங்கிணைப்பாளர் பழ.வீரன்

 

(நான்காவது உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாடு முடிந்து ஐயாவை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம்)

 

பேரமைப்பின் நோக்கம

1. தமிழர் வாழ்வியல் நலன்களைப் பாதுகாத்தல்.

2. தமிழர்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்தல்.

3. தமிழர்களின் குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள், மாந்த உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்தல்

 

உலகத் தமிழர் கொடி

நீல நிறக் கொடியின் நடுவில் வெள்ளை நிறப் பின்னணியில்,  கருப்பு நிறத்தில் உலக உருண்டையும் அதன்மீது பனைமரமும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  என்ற எழுத்துகள் மஞ்சள் நிறத்திலும் அமைந்திருக்கும்.

 

உலகத் தமிழருக்கான  தேசிய உடை

தமிழர் மொழி, கலைப் பண்பாட்டு விழாக்களின்போது தமிழர்கள் அணிந்து கொள்ள வேண்டிய சிறப்பு உடை.           

 

ஆண்களுக்கு : ஒரு செ.மீ. அகலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளை நிற வேட்டியும், சந்தன நிறத்தில் சட்டையும் (சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த முழுக்கைச் சட்டை) மற்றும் விசிறி மடிப்பு அல்லது  நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்.) பெண்களுக்கு :  7 செ.மீ. மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் அரக்குநிற இரவிக்கையும்.

 

உலகத் தமிழர் பண்

தமிழ்நாடு, தமிழீழம் போன்றவைகளுக்குத் தனித்தனியே நாட்டு வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. ஆனால் உலகத் தமிழர்கள் மொழி, கலைப் பண்பாட்டு விழாக்களுக்காகக் கூடும் போது அனைவரும் இணைந்து பாடத்தக்க வாழ்த்துப் பாடல் மிக இன்றியமையாததாகும். அத்தகையப் பாடலாக உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய பாடல் ஏற்கப்பட்டுள்ளது.

 

உலகத் தமிழர் வங்கி

உலகத் தமிழர்களின் வணிக, தொழில் நலன்களைப் பேணவும் காக்கவும் வளர்ந்தோங்க செய்யவும் உலகத் தமிழர் வங்கி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் வரையறைக்களுக்குட்பட்டு அமைக்கப்படும் இந்த வங்கி படிப்படியாக உலக நாடுகளுக்கு விரிவாக்கப்படும்.

 

அமைப்பின் விதிகள்

 

1. உலகத் தமிழர் பேரமைப்புக்கு நேரிடையான கிளைகள் எந்த நாட்டிலும் அமைக்கப்படாது.

 

2.உலகம் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலுமுள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலுமுள்ள  தமிழ் அமைப்புகளின் பேராளர்கள் கூடி, அப்பகுதிக்கான  கூட்டமைப்பை ஏற்படுத்துவர்.

 

3. கீழ்க்கண்ட பகுதிகளில் இத்தகைய கூட்டமைப்புகள் நிறுவப்படும் :- அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா நாடுகள் (பிரிட்டன் உட்பட), ஆப்பிரி்க்க நாடுகள், அரேபியா நாடுகள் (நடு ஆசிய நாடுகள்) தென் ஆசிய நாடுகள் (இந்திய ஒன்றியம், ஈழம், சிறீலங்கா உட்பட), தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆத்திரேலியா, நியூசிலாந்து.

 

4. ஒவ்வொரு கூட்டமைப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பத்துப் பேராளர்கள்  உலகத் தமிழர் பேரமைப்பில் உறுப்பியம் பெறுவர். அவர்களே உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி உலகத் தமிழர் பேரமைப்புக்கான நிர்வாகிகள் செயற்குழுவினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

 

5. உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை ஒன்றும் ஏற்படுத்தப்படும். இதற்கான சட்டத்திட்டங்கள் தனியே வகுக்கப்படவுள்ளன. அறங்காவலர் குழு உலகத் தமிழர் பேரமைப்பின் சொத்துகளை கவனிக்கும்

 

6.  உலகத் தமிழர் பேரமைப்பின் நிருவாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தல் நடத்தப்படும்.

 

7. பொதுக்குழு, செயற்குழு, தலைமைக்குழு என பேரமைப்பு மூன்று அடுக்குகளில் இயங்கும். தலைமைக்குழு தேவைகளையொட்டி அவ்வபோது கூடும். செயற்குழு ஆறு திங்களுக்கு ஒருமுறை கூடும். பொதுக்குழு ஓராண்டிற்கு ஒருமுறை கூடும்.

 

மலேசியா முழுவதும் இயங்குகிற  தமிழர் அமைப்புகளின் இணைப்பு

மலேசியாவில் இயங்கிவரும் தமிழர் அமைப்புகள் தத்தமது நோக்கம், வேலைத்திட்டம் ஆகியவற்றை கைவிடவோ, மாற்றிக் கொள்ளவோ வேண்டிய தேவை இல்லாமல் உலகத் தமிழர் பேரமைப்பில் இணையலாம்.  தமிழர் அமைப்புகளின் தனித்தன்மைக்கு ஊறு ஏற்படாத வகையில் அவற்றை ஒருங்கிணைத்து உலகத் தமிழர் நலனுக்காகச் செயல்பட வைப்பதே உலகத் தமிழர் பேரமைப்பின் நோக்கமாகும்.

 

தமிழ்ப்புத்தாண்டு தொடங்கி அனைத்து மலேசியத் தமிழர் அமைப்புகளுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் மலேசியப் பணியகம் இணைப்புப் படிவங்களை அனுப்பும்.

 

மலேசியப் பணியக முகவரி

 PALA.VEERAN, WTC - MALAYSIA  NO. 11, TAMAN SERI JAYA, 33100 PENGKALAN HULU, PERAK DARUL RIDZUAN, MALAYSIA.  MOBILE : 006019-4729143

 

 பேரமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாட்டு ஒளிப்படங்கள்

© 2037-2038  மொழி. நெட் - கணபதிகணேசன் அன்புச்சோலை -  தொடர்புக்கு : mozhinet@yahoo.com